×

காணும் பொங்கலுக்கு சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை: பாஞ்சாலங்குறிச்சி, மணப்பாடு வெறிச்சோடியது

ஓட்டப்பிடாரம்: கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால் பாஞ்சாலங்குறிச்சி வெறிச்சோடி காணப்பட்டது. காணும் பொங்கல் திருநாளையொட்டி பொதுமக்கள் ஏராளமானோர் தங்களின் குழந்தைகள் மற்றும் உறவினர்களோடு மாவட்டத்தில் உள்ள பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத்தலங்களுக்குச் சென்று கூடி மகிழ்வது வழக்கம். இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகமானது சுற்றுலாத்தலங்களில் மக்கள் கூடுவதற்கு 5 நாட்கள் தடை விதித்ததுள்ளது.  

இதனால் பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டைக்கான நுழைவுவாயில் அடைக்கப்பட்டிருந்தது. காணும் பொங்கலை முன்னிட்டு நடைபெறும் கலை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டிருந்தன. இருப்பினும் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர். அவர்கள் கோட்டைக்கு வெளியே உள்ள மரத்தடியில் அமர்ந்தபடி உறவினர்களோடு பேசியும் கொண்டு வந்த உணவுகளை உண்டு மகிழ்ந்தனர்.

மேலும் கோட்டையின் முன்பு பஞ்சாயத்து சார்பில் பராமரிக்கப்படும் விளையாட்டு உபகரணங்களில் சிறார்கள் விளையாடி மகிழ்ந்தனர். உடன்குடி: ஒருபுறம் ஆர்ப்பரிப்பான கடல், மறுபுறம் அமைதியான கடல் என  இரு நிலைகளை கொண்டது மணப்பாடு. நீண்ட கடற்பரப்பை கொண்ட இங்கு மிகப்பழமையான தேவாலயம், புனித சவேரியார் தங்கிய குகை, மணற்குன்று, பழமையான கட்டிடங்கள் என ஏராளமானவைகள் உள்ளன. ஏழைகளின் கோவா என்றழைக்கப்படும் மணப்பாட்டிற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பி  வைத்தனர்.

நேற்று அதிகாலை முதலே மணப்பாடு ஊர் எல்கையில் குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் சப்இன்ஸ்பெக்டர் முனியாண்டி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சுற்றுலாப்பயணிகளின் வாகனங்களை திருப்பி அனுப்பினர். மேலும் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து டூவிலரில் கடற்கரை பகுதிக்கு வந்தவர்களையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக எப்போதும் சுற்றுலாப்பயணிகள் நிறைந்து காணப்படும் மணப்பாடு கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.

Tags : Ban ,Pongal ,Panchalankuruchi , Tourist places in and around Pongal
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி...