×

பொங்கல் விடுமுறை எதிரொலி: ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஊட்டி: பொங்கல் பண்டிகை விடுமுறை மற்றும் வார விடுமுறையையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதால், அனைத்து சுற்றுலா தலங்களும் களைகட்டியுள்ளது. ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். பண்டிகை விடுமுறை, பள்ளி விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கமாக உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை கிடைத்த நிலையில், சுற்றுலா பயணிகள் ஊட்டியை முற்றுகையிட்டுள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகளை காட்டிலும் கேரளா மற்றும் கர்நாடக மாநில சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்திருந்தனர். இதனால் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நேற்று அலை மோதியது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் லாட்ஜ் மற்றும் காட்டேஜ்கள் நிரம்பின. அதேபோல் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. ஊட்டியில் பனிப்பொழிவால் குளிர் சற்று அதிகரித்துள்ளது.

இதனால், மாலை நேரங்களில் கடை வீதிகளில் நடைபயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள் ஸ்வெட்டர், சால்வை, தொப்பிகள் வாங்க கடைகளில் குவிகின்றனர். சுற்றுலா பயணிகளால் வெம்மை ஆடை வியாபாரம் தற்போது சூடு பிடித்துள்ளது. பகலில் வெயில் அதிகமாக காணப்பட்டதால், அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டமாக காணப்பட்டனர். இன்று ஊரடங்கு என்பதால், சுற்றுலா பயணிகள் வர வாய்ப்பில்லை. அதேசமயம், திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை தொடர் விடுமுறை வரும் நிலையில், மீண்டும் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வர வாய்ப்புள்ளது.

சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Tags : Echo of Pongal holiday: Tourists flock to Ooty
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்