பனிப்பொழிவு அதிகரிப்பு: மலர் நாற்றுகளுக்கு பிளாஸ்டிக் போர்வை

ஊட்டி: நீலகிரியில்  கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், தாவரவியல் பூங்கா  தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மலர் நாற்றுக்கள் பாதிக்காமல் இருக்க  பிளாஸ்டிக் போர்வை கொண்டு மூடப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் அக்டோபர்  மாதம் துவங்கி இரு மாதங்கள் நீர்பனி விழும். நவம்பர் இறுதி வாரம்  முதல் பிப்பரவரி இறுதி வரையில் உறைபனி விழும். ஆனால், இம்முறை மழை  காரணமாக கடந்த  நவம்பர் மாதம் வரை பனிப்பொழிவு காணப்படவில்லை.

கடந்த மாதம்  துவக்கம் முதல் நீர்பனியின் காணப்பட்டது. கடந்த மாதம் இறுதி வாரம் முதல் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. தற்போது மாவட்டத்தில் நாள் தோறும் உறைபனி  காணப்படுகிறது. ஒரு சில நாட்கள் நீர்பனியும் விழுகிறது. பனியின் காரணமாக தாழ்வான பகுதிகள் மற்றும் நீரோடைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் உள்ள செடிகள் கருக துவங்கின. தேயிலை,மலை காய்கறிகள் மற்றும் மலர் செடிகளை பனியில் இருந்து பாதுகாக்க காலை மற்றும் மாலை நேரங்களில்  ஸ்பிரிங்லர் மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.  

ஊட்டி  தாவரவியல் பூங்கா,மரவியல் பூங்கா,ரோஜா பூங்காக்களில் உள்ள அலங்கார செடிகள் மீது கோத்தகிரி மிலார் செடிகளை கொண்டு மூடி பாதுகாக்கப்பட்டு வருகிறது. தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானம் சேதமடையாத வகையில் புல் மைதானத்திற்கு காலையில் பாப் அப் முறையில் தண்ணீர் பாய்ச்சும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நீலகிரியில் உறைபனி தாக்கம் மிக அதிகமாக காணப்படுகிறது.

இதனால், பூங்கா தொட்டிகளில் நடவு செய்யப்பட்டுள்ள மலர் நாற்றுக்கள் பாதிக்காமல் இருக்க பிளாஸ்டிக் போர்வை கொண்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. பனியின் காரணமாக  ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடும் குளிர் நிலவியது. பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், அதிகாலை நேரங்களில் குளிர் வாட்டுகிறது. பகல் நேரங்களில் வெயில் வாட்டினாலும், நிழல் தரும் இடங்களுக்கு சென்றால் குளிர் நிலவுகிறது.

Related Stories: