கோடப்பமந்து கால்வாயில் மலை போல் தேங்கிய பிளாஸ்டிக் கழிவுகள்: மழை பெய்தால் பாதிப்பு நிச்சயம்

ஊட்டி: ஊட்டி கோடப்பமந்து கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளதால், மழை பெய்தால் நகருக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊட்டி  நகரின் மைய பகுதியில் கோடப்பமந்து கால்வாய் செல்கிறது. இது மேல் கோடப்பமந்து பகுதியில் துவங்கி நகரின் வழியாக ஊட்டி ஏரியை சென்றடைகிறது. இந்த கால்வாயின் இரு புறங்களிலும் குடியிருப்புகள்,லாட்ஜ் மற்றும் காட்டேஜ்கள் அதிகளவு உள்ளன. இவைகளில் மிஞ்சும் கழிவுகள் மற்றும் குப்பைகள் கோடப்பமந்து கால்வாயில் கொட்டப்படுகிறது.

குறிப்பாக, பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவு கொட்டப்படுகிறது. இதனால், இந்த கால்வாயில் ஏராளமான குப்பைகள்  மற்றும் கழிவுகள் தேங்கி காணப்படுவது வழக்கம். இதனால், மழைக்காலங்களில்  கழிவுகள் நிரம்பி தண்ணீர் நகருக்குள் வந்துவிடுகிறது. குறிப்பாக, ஊட்டி  - காந்தல் சாலையில் மழை நீர் தேங்கி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் இந்த கால்வாயில் தற்போது ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே, ரயில்வே மேம்பாலத்தின் அடியில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் மலை போல் குவிந்துள்ளன.

இதனால், கழிவு நீர் ஊட்டி ஏரிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ேமலும், மழை பெய்தால், இப்பகுதியில் அடைப்பு  ஏற்பட்டு காந்தல் சாலையில் கழிவுநீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: