சைபர் கிரைம் ஒரு அலெர்ட் ரிப்போர்ட்

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

அர்பாநெட் (அட்வான்ஸ்டு ரிசர்ச் புராஜெக்ட்ஸ் ஏஜென்சி நெட்வொர்க்) என்ற பெயரில் இரண்டு கம்ப்யூட்டர்களுக்கு இடையே தகவல் பரிமாறும் சமாச்சாரமாக 1971ல் அறிமுகமான தொழில்நுட்பம், தற்போது உலகின் பல கோடி மக்களின் அன்றாட வாழ்க்கையில் பின்னிப் பிணைந்து தவிர்க்க முடியாத இன்டர்நெட் எனும் ஆதிக்க சக்தியாக உருவாகியுள்ளது.

கடந்த காலங்களில் ராணுவத் தகவல் பரிமாற்றங்களுக்காக 1995-வாக்கில் இன்டர்நெட் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பலன் அமோகமாக இருக்கவே, சாதாரண மக்கள் மத்தியிலும் இது பரவத் துவங்கியது. அதன் ஆரம்பகட்டமாக, 1996-ல் இந்தியாவில் ஆறு நகரங்களில் மட்டுமே இன்டர்நெட் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. 97-ல் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 1997-ல் மத்திய அரசால் அமைக்கப்பட்ட பின்னரே இன்டர்நெட் அசூர வளர்ச்சி கண்டுவந்தது. தொலைத்தொடர்பு சேவைகள் நெட்வொர்க்குடன் இணைந்தபின் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.), இ- மெயில், சர்ச் எஞ்சின், பிரவுசர், இணையப்பக்கம் என நெட்வொர்க் சேவை பரந்து விரிந்தது.

s

இந்தக் காலகட்டத்தில் நெட்வொர்க்குடன் கூடிய தொலைத்தொடர்பு சேவையை தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு தாரை வார்த்ததையடுத்து பி.எஸ்.என்.எல்-ஐ ஓரங்கட்டி வோடஃபோன், ஏர்டெல், ரிலையன்ஸ், ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு நெட்வொர்க் வலையை நாடு முழுவதும் விரித்தன. தகவல் பதிவிறக்கம் வேகமாக இருக்க வேண்டும் என்று கஸ்டமர்களின் ஆர்வத்தை நாடிப்பிடித்து புரிந்துகொண்ட இந்த நிறுவனங்கள் 2ஜி, 3ஜி, 4ஜி... என ஆரம்பித்து இப்போது 5ஜியில் வந்து நிற்கின்றன. இதுவரை இந்த சேவைகள் கம்ப்யூட்டர் துறையில் பிரபலமாகியிருந்தது.

அதற்கு இணையாக செல்போன் சந்தையும் பிரமிக்கத்தக்க வளர்ச்சி கண்டு ஆண்ட்ராய்டு, ஐபோன் போன்ற அதிநவீன மென்பொருட்களால் நெட்வொர்க் சேவை மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத சாதனமாகிவிட்டது. சொல்லப்போனால் கைநாட்டுக்கு மட்டுமே பயன்பட்டுவந்த கட்டைவிரல், செல்போன் மற்றும் நெட்வொர்க் சேவை அதிகரிப்பால் மனித உடலில் அதிகம் செயல்படும் அங்கமாக மாறியுள்ளது. தொடக்க காலத்தில் டெக்ஸ்டாப் எனப்படும் தனிநபர் கம்ப்யூட்டர்களில் மட்டுமே நெட்வொர்க் கை ஓங்கியிருந்த நிலையில் தொழில்நுட்பப் புரட்சியால் உலகளாவிய வலைப்பின்னலாகி தற்போது கிளவ்டு

கம்ப்யூட்டில் விந்தையில் முட்டி நிற்கிறது.

அடுத்தக்கட்டம் ரோபோக்களை மனிதனுக்கு நிகராக சிந்திக்க வைக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்தான் நெட்வொர்க்கின் விரிவாக்கமாக இருக்க கூடும். நெட்வொர்க் சேவையால் இன்று பலனடையாத நிறுவனங்களே இல்லை. நெட்வொர்க் பயன்படுத்தி நாம் சென்றடைய வேண்டிய இலக்கை செல்போனில் வரைபடமாகப் பார்த்து எவ்வளவு நேரத்தில் சென்றடைய முடியும் என கையடக்கக் கருவியில் தெரிந்துகொள்ளலாம். தொழில்நுட்பம் வளர்ச்சி சாதகமாக இருந்தாலும், அதில் பல பாதகங்களும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு பல சேவைகள் மற்றும் மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்து வரும் இந்த நெட்வொர்க் பயன்பாடு ஒரு புறம் பல அதிசயங்களை மேற்கொண்டு வருகிறது. அதேசமயம், இதன் பயன்பாடுகளால் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இதைத்தான் சைபர் கிரைம் என்கிறார்கள்.

வீடு புகுந்து கத்தியால் மிரட்டி பணம் பறிக்கும் குற்றங்கள் எல்லாம் பழைய காலத்து ஸ்டைலாகிவிட்டது. வெள்ளையும் சுள்ளையுமாக கோட்டும் சூட்டுமாக நாற்காலியில் அமர்ந்து நெட்வொர்க்கை பயன்படுத்தி ஒருசில நொடிகளில் பல கோடி பணம் பார்ப்பது தான் இன்றைய டிரன்ட். இதில் ஈடுபடும் குற்றவாளிகள் நெட்வொர்க் மென்பொருளை, அது எப்பேர்ப்பட்ட கட்டமைப்பு உறுதியுடன் வடிவமைக்கப்பட்டு இருந்தாலும் தங்களது கிறுக்குத்தனமான குறுக்குப்புத்திகளால் எளிதில் தகர்த்து பணப்பரிவர்த்தனைகளை முறைகேடாக செய்கிறார்கள். இதனால் மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பெரும் பண இழப்பைச் சந்தித்துள்ளன. இது நெட்வொர்க் சேவை வழங்குபவர்களின் கவலையை அதிகரித்துள்ளது.

உலகளாவிய பல இடங்களில் நிகழும் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க பல வழிமுறைகளை கையாண்டாலும், அவர்கள், போலீசுக்கு கண்ணாமூச்சி காட்டுகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. காரணம் நெட்வொர்க் சேவை வழங்கும் மென்பொருள் கட்டுப்பாடு மையங்கள் வெளிநாடுகளில் உள்ளதால் இங்கு நடைபெறும் குற்றங்களுக்கு நமக்கு உதவிக் கிடைப்பதில்லை. இதுவே குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. ஹேக்கிங் என்ற முறையில் வங்கி மென்பொருளைத் தகர்த்து அல்லது கஸ்டமரின் சேவை விவரங்களை கால் சென்டர் மூலம் திருட்டுத்தனமாக வாங்கி ஆன்லைனில் ஒருவரது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைச் சுருட்டி தங்களுக்குத் தொடர்புள்ள வெளிநாட்டில் உள்ள வங்கிக் கணக்குக்கு பரிமாற்றம் செய்கின்றனர். அதற்குப் பிறகு அந்தப் பணத்தை ஈவாலெட், பேடிஎம், பேபால் போன்ற செயலிகள் மூலமாக உள்நாட்டுக்கு தந்திரமாக மாற்றிக்கொள்கின்றனர்.

இந்தப் பரிவர்த்தனைகளை போலீஸ் மோப்பம் பிடித்தாலும் பரிவரித்தனையில் ஈடுபட்டது யார் எனும் விவரங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் அளிக்க மறுப்பதால் போலீசுக்கு இன்றும் இது தீராத தலைவலியாக உள்ளது. அறியாமைக் காரணமாக இந்தக் கில்லாடிகளிடம் பலரும் தங்களது சுயவிவரங்களை தெரிவித்து பணத்தை தொலைக்கின்றனர். எனவே, அறிமுகம் இல்லாதவர்கள் தகவல் கேட்டால் பகிர வேண்டாம் என நெட்வொர்க் சேவை நிறுவனங்களும் வங்கிகளும் பொது அறிவிப்பு வெளியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. பொதுவாக இதுபோல சிக்கிக்கொள்வதில் பெண்கள்தான் அதிகம் என ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களிலிருந்து போட்டோக்களைத் திருடியோ அல்லது அந்த பெண்ணிடம் நயவஞ்சகமாக பேசி, அவர்களின் போட்டோவை வாங்கும் சைபர் கிரைம் குற்றவாளிகள் அதனை மார்பிங் முறையில் நிர்வாணமாக்கி குறிப்பிட்டப் பெண்ணுக்கே மிரட்டல் விடுத்து பணம் பறிப்பதும் ஒரு திருட்டு கலையாக வளர்ந்து வருகிறது. இது ஒரு உதாரணம் தான். இதுபோல் பல சைபர் குற்றங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். இனிவரும் இதழ்களில் சைபர் கிரைம் குற்றங்கள் நிகழ்ந்த விதம், கண்டுபிடித்த சாமர்த்தியம், குற்றவாளிகளைச் சிக்கவைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் என தொடர்ந்து விரிவாகப் பார்ப்போம்....

(வலை விரியும்....)

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: