முத்துப்பேட்டை பகுதியில் ஆசியாவில் மிகப்பெரிய அலையாத்தி காடுகள்: டிரோன் கேமரா மூலம் அதிகாரிகள் ஆய்வு

முத்துப்பேட்டை: ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய முத்துப்பேட்டை அலையாத்தி காடுகளை டிரோன் கேமரா மூலம் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பரப்பளவு கொண்ட காடாகும். இந்த காடு புயல் மற்றும் சூறாவளி காற்றிலிருந்தும், சுனாமியிலிருந்தும் கடலோர கிராமங்களையும் கிராம மக்களையும் பாதுகாக்கும் அரணாக விளங்குகிறது. தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம் மேற்கு பகுதியில் துவங்கி நாகை மாவட்டத்தின் கோடியக்கரை கிழக்கு பகுதி வரை நீண்டுள்ளது.

இந்த காடுகளின் நடுவே உள்ள லகூன் பகுதியும் மிகவும் அரியதானது. மினி கடல் போன்று உள்ள இப்பகுதி சேறு நிறைந்த பகுதி. இதில் இனப்பெருக்கம் செய்து வளரும் மீன் வகைகள் இறால் நண்டுகள் தனி சுவை கொண்டதாகும் இதனால் இந்த மீன் வகைகளுக்கு இப்பகுதியில் மவுசு உண்டு. முத்துப்பேட்டை லகூன் மற்றும் அலையாத்திக்காடுகளுக்கு சுற்றுலா பயணிகள் ஆற்றின் வழியே படகில் நெடுந்தூரம் பயணம் செய்து மனதை சொக்க வைக்கும் இயற்கை அழகை கண்டு ரசிப்பர்.

இந்த காட்டின் அழகை ரசிக்க ஆண்டு முழுவதும் தமிழகம் மற்றுமின்றி இந்தியாவில் பல்வேறு பகுதியிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வந்து செல்கின்றனர். திமுக தேர்தல் அறிக்கையில் இந்த அலையாத்திகாடு மேம்படுத்தப்படும் என்று வாக்குறுதி வழங்கப்பட்டதின் எதிரொலியாக தமிழக அரசு சார்பில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள சுற்றுலாத்துறை முடிவு செய்து உள்ளது. இதையொட்டி நேற்று திருவாரூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சி அலுவலர் மாதவன் தலைமையில் குழுவினர் டிரோன் கேமரா மூலம் வீடியோ மற்றும் போட்டோ எடுத்து ஆய்வு செய்தனர்.

மேலும் இந்த வீடியோ மற்றும் படங்கள் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு அனுப்பப்படும் என்றும், விரைவில் அலையாத்தி காட்டில் அனைத்து அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள இந்த முதல் கட்ட ஆய்வு நடைபெற்றதாகவும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: