தஞ்சையில் இறைச்சி, மீன் கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

தஞ்சை: தஞ்சையில் உள்ள இறைச்சி, மீன் கடைகளின் நேற்று மக்களின் கூட்டம் அதிகளவில் அலை மோதியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 18ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. நேற்று மாட்டுப்பொங்கல் (கரி நாள்) என்பதால் பெரும்பாலானோர் வீட்டில் அசைவ உணவு முக்கிய இடத்தை பிடிக்கும். இதற்காக பொதுமக்கள் மட்டன், சிக்கன், மீன்களை அதிகளவில் வாங்கி செல்வர். நேற்று மாட்டுப் பொங்கல் என்பதாலும், இன்று முழு ஊரடங்கால் கடைகள் அடைப்பு என்பதாலும் தஞ்சையில் இறைச்சி, மீன் கடைகளில் நேற்று வழக்கத்தைவிட அதிகளவில் கூட்டம் காணப்பட்டது.

சிலர் இன்றைக்கும் சேர்த்து மீன் வகைகளை வாங்கிச் சென்றனர். தஞ்சை பீரங்கி மேடு பகுதியில் உள்ள மீன் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதனால் மீன்களின் விலையும் கணிசமாக உயர்ந்தது. விரால் மீன் கிலோ ரூ.500க்கும், உயிர் கெண்டை மீன் ரூ.200க்கும் விற்கப்பட்டது. இதேபோல் மற்ற மீன் வகைகளின் விலையும் அதிகமாகவே இருந்தது. விலையை பற்றி யோசிக்காமல் பொதுமக்கள் அதிகளவில் மீன்களை வாங்கி சென்றனர்.

சிலர் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் வந்திருந்தனர். இதேபோல் இறைச்சி கடைகளிலும் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. 1 கிலோ இறைச்சி ரூ.800 முதல் ரூ.850 வரை விற்பனையானது. 1 கிலோ சிக்கன் ரூ.220 முதல் 250 வரை விற்கப்பட்டது. வழக்கமாக மதியம் வரை மட்டுமே செயல்படும் இறைச்சிக் கடைகளும் நேற்று மாலை வரை செயல்பட்டது.

Related Stories: