×

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்தவர் பணமோசடி வழக்கில் கைது..!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த விஜய் நல்லதம்பி கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக விஜய் நல்லதம்பி மீது ரவீந்திரன் என்பவர் அளித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 30 லட்சம் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக குறிப்பிட்டுள்ளார். அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக அவர் மீது கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதன்பின்னர்,பணமோசடி செய்த புகாரில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் டிசம்பர் 17-ஆம் தேதி தள்ளுபடி செய்ததால் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருந்தார். இதனையடுத்து,கர்நாடகாவில் வைத்து அவரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதற்கிடையில்,ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்திருந்த நிலையில்,கைதுக்கு பின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து,அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்நிலையில்,முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பணமோசடி புகார் கொடுத்த முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் விஜய நல்லதம்பி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக ரவீந்திரன் என்பவர் அளித்த புகாரில்,ஒரு மாத காலம் தலைமறைவாக இருந்த விஜய நல்லதம்பியை கோவில்பட்டி பகுதியில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து, விருதுநகர் குற்றப்பிரிவு காவல்நிலையத்திற்கு அவரை அழைத்து வந்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். பணமோசடியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தவுள்ளனர் என்று கூறப்படுகிறது. விஜய நல்லதம்பி கொடுத்த ரூ.3 கோடி பணமோசடி புகாரில்தான் ராஜேந்திர பாலாஜி கைதாகி சிறை சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Rajandra Balaji , Former AIADMK minister Rajendra Balaji arrested for money laundering
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர...