ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மோடி அழைப்பு இந்தியாவுக்காக கண்டுபிடியுங்கள்

புதுடெல்லி : ‘இந்தியாவுக்காக கண்டுபிடியுங்கள்’ என ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு  பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். புதிதாக தொழில் தொடங்குபவர்களை ஊக்குவிப்பதற்காக ‘ஸ்டார்ட் அப்’ என்ற திட்டத்தை கடந்த 2015ம் ஆண்டு ஒன்றிய அரசு தொடங்கியது.

 இந்நிலையில், ஸ்டார்ட் அப் திட்டத்தின் கீழ் உருவாகி உள்ள புதிய  தொழில் முனைவோருடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி  நேற்று கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:   நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் ஆனவுடன் ஸ்டார்ட் அப் தொழில் முனைவோரின் பங்கு முக்கியமானதாக இருக்கும். இந்தியாவுக்காக கண்டுபிடியுங்கள். இந்தியாவில் இருந்து கொண்டே கண்டுபிடியுங்கள். தொழில் முனைவோர், கண்டுபிடிப்பாளர்கள் அரசின் நிர்வாக நடைமுறைகளால் காலதாமதம் உள்ளிட்ட  பிரச்னைகளை சந்தித்து வந்தனர்.  

இந்த சிக்கல்களை அகற்றுவதற்கும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும்  அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. புதிய தொழில் முனைவோர்களே புதிய இந்தியாவின் முதுகெலும்பாக மாற இருக்கிறார்கள். ஸ்டார்ட் அப் என்பது கண்டுபிடிப்பு என்பது மட்டுமில்லாமல், வேலை வாய்ப்பை உருவாக்குவதிலும் பங்காற்றுகிறது.  இந்த ஆண்டு தொழில் முனைவோர்களுக்காக, பல்வேறு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படும். இனி, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 16ம் தேதியில், ‘தேசிய ஸ்டார்ட் அப் தினம்’ கொண்டாடப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

திருவள்ளுவருக்கு புகழாரம்

உலக பொதுமறை நூலான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை போற்றும் வகையில் ஆண்டுதோறும் தை மாதம் 2ம் தேதி (ஜனவரி 15) திருவள்ளுவர் தினமாக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இந்த நாளில்  திருவள்ளுவருக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத் திறன்மிக்கவை. நடைமுறைக்கு ஏற்றவை. பன்முகத்தன்மை மற்றும் அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன்’ என்று கூறி, அந்த காணொலியையும் பகிர்ந்துள்ளார்.

Related Stories: