வருமானவரித்துறையினர்போல் நடித்து லாரி உரிமையாளர் வீட்டில் ₹20 லட்சம் கொள்ளை

கிணத்துக்கடவு : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வடபுதூர் கோவை-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் பரோடா பேங்க் அருகே வசிப்பவர் பஞ்சலிங்கம் (53). லாரி உரிமையாளர். இவர் நேற்று மதியம் வீட்டில் இருந்தார். அப்போது காரில் 5 பேர் வந்தனர். டிப்டாப் உடையணிந்திருந்த அவர்கள், ‘‘நாங்கள் வருமான வரித்துறையிலிருந்து வருகிறோம். உங்கள் வீட்டை சோதனை செய்ய வேண்டும்’’ என கூறினர்.  செல்போன்களை வாங்கி வைத்துக்கொண்டு வீட்டை தாழிட்டுவிட்டு சோதனை செய்வதுபோல் நடித்துள்ளனர்.

பீரோவில் வைத்திருந்த ₹20 லட்சம் ரொக்கம், பரோடா வங்கி கணக்கு புத்தகம், செக் புக் ஆகியவற்றை எடுத்துக்கொண்டதுடன், சிசிடிவி கேமரா காட்சிகள் பதிவான ஹார்ட் டிஸ்க்கையும் எடுத்துச்சென்றனர். சந்தேகம் அடைந்த பஞ்சலிங்கம் அவர்கள் பற்றி விசாரித்தார்.

அப்போது அவர்கள் வருமான வரித்துறையினர்போல நடித்த கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து இது பற்றி கிணத்துக்கடவு காவல் நிலையத்திற்கு அவர் தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வீட்டை ஆய்வு செய்தார். கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: