தாம்பரம், காட்பாடி ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு எக்ஸ்பிரஸ் ரயில்களில் மேம்பாட்டு கட்டணமாக ₹50 வசூலிக்க முடிவு

*ரயில்வே அதிகாரிகள் தகவல்

சென்னை : தாம்பரம், காட்பாடி ரயில் நிலையங்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு மேம்படுத்தபடும் நிலையில் இரண்டு ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் மேம்பாட்டுக் கட்டணமாக ₹50 வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

ரயில் நிலையங்களின் மேம்பாடு மற்றும் மறுசீரமைப்புக்கு ரயில்வே துறையிடம் பல்வேறு திட்டங்கள் உள்ளன.

அவை பல்வேறு கட்டங்களாக செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தாம்பரம் மற்றும் காட்பாடி ரயில் நிலையங்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன. இதற்காக இந்த இரண்டு ரயில் நிலையங்களில் இருந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் இருந்து மேம்பாட்டுக் கட்டணம் வசூலிக்க மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி தாம்பரம் மற்றும் காட்பாடி ரயில் நிலையங்களில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்ய படுக்கை வசதி கொண்ட வகுப்புக்கு ₹25 கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. அதைப்போன்று ஏசி வகுப்பில் பயணம் செய்ய ₹50 கட்டணம் உயர்த்தப்படுகிறது. மேலும் தற்போது சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் என பல்வேறு வகையாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் ரயில் டிக்கெட்டுகள் அதிகமாகவும், குறைந்தும் காணப்படுகிறது.

இந்நிலையில் மேம்படுத்துதல் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதால் பயணிகள் இன்னும் கூடுதல் கட்டணம் செலுத்தப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.  மேலும் இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்:  ரயில் நிலையங்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன. எந்தெந்த ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தற்போது தாம்பரம், காட்பாடி ரயில் நிலையங்கள் மட்டும் மேம்படுத்தப்பட உள்ளன.

இதனால் அங்கிருந்து செல்லும் பயணிகளுக்கு மேம்பாட்டு கட்டணம் உயர வாய்ப்பு உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Related Stories: