×

எம்ஜிஆர் ஆட்சியை அமைக்க இயக்கத்தை ஒன்றிணைப்பது காலத்தின் கட்டாயம் : சசிகலா அறிக்கை

சென்னை : எம்ஜிஆர் ஆட்சியை அமைக்க இயக்கத்தை ஒன்றிணைப்பது காலத்தின் கட்டாயம் என்று சசிகலா கூறியுள்ளார். இதுகுறித்து, சசிகலா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கட்சி தொடங்கிய ஐந்தே ஆண்டுகளில் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தவர் எம்ஜிஆர். நமது இயக்கம் விருட்சமாக பரந்து இருப்பதற்கு முழு முதற் காரணமாக இருப்பது வேர்களாகிய தொண்டர்கள் தான்.

அதனால் தான் சட்ட விதிகளில் கூட தொண்டர்கள் தான் தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதிமுறையை கொண்டு வந்தார் எம்ஜிஆர். அதுபோன்று அடிமட்ட தொண்டர்கள் விரும்பும் தலைமையால் தான் நம் கட்சியை நல்ல நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என்று கருதியே பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறினார்.

எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் வளர்த்த இயக்கத்தை ஒன்றிணைப்பது காலத்தின் கட்டாயம் என்று தொண்டர்கள் அனைவரும் கருதுகிறார்கள். இதே வேண்டுகோளைத் தான் நானும் தொடர்ந்து முன் வைத்து வருகிறேன். அனைவரும் இதை உணர்ந்தால் மட்டுமே தமிழகத்தில் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சியை அமைக்க முடியும்.


எம்ஜிஆரின் 105வது பிறந்த நாளில் ஏழை, எளியவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்தும், கொரோனா விதிமுறைகளை பின்பற்றி எம்ஜிஆர் பிறந்த நாளை கொண்டாட கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : MGR Aatchi, Sasikala
× RELATED எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக...