மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நாள் : கட்சியினருக்கு திருமாவளவன் வேண்டுகோள்

சென்னை : மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நாள் குறித்து கட்சியினருக்கு திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நாளை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி அன்று கடைபிடித்து வருகிறோம். இந்தித் திணிப்புக்கு எதிரான உணர்வை அதன்மூலம் பாதுகாத்து வருகிறோம். இந்தித் திணிப்புக்கு எதிராக 1937 முதல் 1940 வரை சுமார் 3 ஆண்டுகள், முதல் மொழிப்போர் நடைபெற்றது.

மொழிப் போராட்டங்களில் உயிர் நீத்தவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதியை மொழிப்போர் ஈகியர் வீர வணக்க நாள் என நாம் கடைபிடித்து வருகிறோம். இந்த ஆண்டும் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நாள் கூட்டங்களை இணையவழியிலேயே நடத்துவதென திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாண்டு முதல், முதல் களப்பலியான நடராசனின் வீரவணக்க நாளான ஜனவரி 15 முதல் சின்னசாமி தீக்குளித்த ஜனவரி 25ம் தேதி வரை இணைய வழியில் பல்வேறு தலைப்புகளில் நடத்துவது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளது.அதன்படி, ஜனவரி 15,18,20,23 மற்றும் 25 ஆகிய 5 நாட்களில் மாலை 6 முதல் இரவு 8 வரை இந்த இணையவழிக் கூட்டங்கள் நடைபெறும்.

ஜனவரி 15ம் நாள் மொழிப்போரின் முதல் ஈகி நடராசனின் நினைவேந்தலாகவும், 18ம் நாள் ‘வழக்காடு மொழியாகத் தமிழ்’ என்னும் தலைப்பிலும், 20ம் நாள் ‘பயிற்று மொழியாகத் தமிழ்’ என்னும் தலைப்பிலும், 23ம் நாள் ‘ஆட்சி மொழியாகத் தமிழ்’ என்னும் பொருண்மையிலும், 25ம் நாள் மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நாள் எனவும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.ஒவ்வொரு நாளிலும் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர் குறித்து விரிவான நிகழ்ச்சி நிரலில் அறிவிக்கப்படும்.

இந்த இணையவழி நிகழ்வுகளில் தவறாமல் பங்கேற்பதோடு இயன்ற இடங்களிலெல்லாம் இந்த நாட்களில் மொழிப்போர் ஈகியர் நினைவைப் போற்றும் வகையில் நிகழ்ச்சிகளை விடுதலைச் சிறுத்தைகள் ஒருங்கிணைக்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: