தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு சீர்திருத்தங்களை செயல்படுத்தியவர் எம்ஜிஆர்

*ஓபிஎஸ்-இபிஎஸ் அறிக்கை

சென்னை : தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு சீர்திருத்தங்களை செயல்படுத்தியவர் எம்ஜிஆர் என்று ஓபிஎஸ்- இபிஎஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தொண்டர்களுக்கு நேற்று எழுதியுள்ள மடலில் கூறியிருப்பதாவது:எம்.ஜி.ஆர் ஒரு தனி மனிதராக, கலைத் துறையின் நாயகராக, ஓர் இயக்கத்தின் தலைவராக, மக்களின் பேராதரவைப் பெற்ற முதல்வராக இருந்தவர்.

தனக்கென அவர் ஒருபோதும் வாழ்ந்ததில்லை. தன் திறமையாலும், உழைப்பாலும் பாடுபட்டு ஈட்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பெரும் செல்வத்தை ஏழைகளுக்கும், எளியவர்களுக்கும், உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கும், உயில் எழுதி வைத்துவிட்டுமறைந்தவர்.

அதிமுகவை தோற்றுவித்து, வளர்த்து, ஆட்சியையும், அதிகாரத்தையும் சாமான்ய மக்களின் கைகளுக்குக் கொண்டுசென்ற ஏழைகளின் தோழன். உலகம் போற்றும் சத்துணவுத் திட்டம், தந்தை பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், திராவிட இயக்கம் காணத் துடித்த சாதிப் பெயர்கள் நீக்கம், பெண்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தனி ஒதுக்கீடு என்று எல்லா வகையிலும் போற்றத்தக்கவையும், எந்நாளும் நிலைத்திருக்கக் கூடிய பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியவர்.அவர் வகுத்துத் தந்த பாதையில், வீரத்தோடும், விவேகத்தோடும் செயல்பட வேண்டிய காலம் இது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Related Stories: