வடலூரில் வருகிற 18ம் தேதி தைப்பூச ஜோதி தரிசன விழா

*பக்தர்களுக்கு தடை- ஆட்சியர் உத்தரவு

கடலூர் : தமிழ்நாட்டில்  கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த நடைமுறையில் இருந்து வரும் ஊரடங்கை கூடுதல் கட்டுப்பாடுகளுடன் 31.01.2022 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த 06.01.2022ல் இருந்து இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் பின்பற்ற உத்தரவிடப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,  வழிபாட்டு தலங்களில் நடைபெறும் விழாக்களின்போது பொது மக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் அதிக கூட்டம் கூட வாய்ப்புள்ளது.

இதனால்  கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து,  பரவல் கட்டுப்படுத்த இயலாததாக மாறக்கூடிய அபாயத்தை உணர்ந்து மருத்துவ வல்லுநர்களின் கருத்தின் அடிப்படையில் 14.01.2022  முதல் 18.01.2022 வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டத்திலும்  பொதுமக்கள் நலனை கருத்திற்கொண்டு 18.01.2022 வரையிலான நாட்களில், அனைத்து மத ஆலயங்களிலும் நடைபெறும் விழாக்களையும், பொதுமக்கள் பங்களிப்பின்றி ஆலய பணியாளர்களால் நடத்தப்பட வேண்டும்.

வடலூர் சத்தியஞானசபை திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் 18.01.2022 அன்று நடைபெறும் 151 வது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவின் போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை. தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்படுவதால் பக்கதர்கள் ஜோதி தரிசன நிகழ்ச்சியை வீட்டிலிருந்தே காணுமாறு மாவட்ட நிர்வாகத்தின்  மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள இதர நாட்களில் அனைத்து மத ஆலயங்களிலும் வழிபாட்டிற்காக ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் அதிக நபர்கள் பங்கேற்பதை தவிர்க்க இடத்தின் பரப்பளவில் 50 அல்லது அதிக பட்சம் 100 நபர்கள் இவற்றில் எது குறைவோ அந்த எண்ணிக்கைக்குள் நோய் அறிகுறியற்ற, இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய பக்தர்களை முகக்கவசம் அணிந்து  சமூக இடைவெளியுடன் அனுமதிக்கலாம்.

கொரோனா - ஒமிக்ரான் வைரஸ் நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் அதிக கூட்டம்  சேருமிடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும், வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது கட்டாயம் முக கவசம் அணிந்து செல்லவும், நோய் அறிகுறி இருப்பின் உடனே மருத்துவ ஆலோசனை பெறவும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Related Stories: