வியாபாரியிடம் நூதன முறையில் ரூ.1.70 லட்சம் கொள்ளை

நவிமும்பை:  வாஷி கோபர்கயினே பகுதியை சேர்ந்தவர் அமித் சேலார் (28). இவர் இனிப்பு, பலகார கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் கடைக்கு  பொருள் வாங்குவதற்காக ரூ.1.70 லட்சம் பணத்தை ஒரு பையில் வைத்து தனது காரில் சென்று கொண்டிருந்தார். சரியாக வாஷி வழியாக சென்று கொண்டிருந்த போது காரை பின் தொடர்ந்து வந்த பைக் ஆசாமிகள் பார்த்து அமித் காரை முந்திக் கொண்டு அருகில் வந்தனர். அவரிடம், காரில் பெட்ரோல் கசிவதாக கூறினர்.

உடனே அமித் காரை ஓரமாக நிறுத்தி வெளியே வந்த அவர் பெட்ரோல் கசிகிறதா என்று பார்த்தார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய பைக் ஆசாமிகள், காரில் வைத்திருந்த ரூ.1.70 லட்சம் பணப்பையை திருடி கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அமித் உடனே அருகிலுள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: