96 வயதிலும் திமுகவை வளர்த்தவர் கலைஞர் வழியை பின்பற்றி ஆட்சியை பிடிப்பேன்: குமாரசாமி பேச்சு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை பலப்படுத்தி மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வைப்போம். அதற்காக கலைஞர் வழியை பின்பற்றுவேன் என்று முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியின் சகாப்தத்தை திருப்பி போட்ட பெருமை ஜனதா பரிவாரங்களுக்கு உள்ளது. பல பலமான தலைவர்கள் இருந்த காங்கிரஸ் கட்சியை நிலைகுலைய செய்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே, கடந்த 1983ல் நடந்த சட்டபேரவை தேர்தலில் முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத ஜனதா கட்சி ஆட்சியை ஹெக்டே கொடுத்தார். சமூக சிந்தனையாளர்கள், சோசலிஸ்ட் சிந்தாந்தங்களை ஏற்று கொண்ட தலைவர்கள் ஹெக்டே பின்னால் அணி வகுத்தனர்.

இப்படி பலமான சக்தியாக ஜனதா பரிவாரங்களை ஹெக்டே உருவாக்கினார். ஆனால் தலைவர்கள் இடையில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக ஜனதா பரிவாரங்களில் பிளவு ஏற்பட்டது. கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதையாக ஜனதா பரிவாரங்கள் உள்ளது. அதில் இருந்த மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பலர் காங்கிரஸ் மற்றும் பாஜவில் ஐக்கியமாகி விட்டனர். தற்போது தேவகவுடா, குமாரசாமி ஆகிய இருவரின் ஆதிக்கத்தில் மட்டுமே ஜனதா பரிவாரங்களில் ஒன்றாக இருக்கும் மஜத உள்ளது. இந்நிலையில் ராம்நகரம் மாவட்டம், சென்னபட்டனாவில் நேற்று நடந்த மகர சங்கராந்தி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய முன்னாள் முதல்வர் குமாரசாமி, ‘மஜத அழிந்து விட்டதாக சிலர் நினைக்கிறார்கள்.

பினிக்ஸ் பறவையாக உயிர் பெறும். மாநிலத்தின் வளர்ச்சிக்கு மாநில கட்சிகள் அவசியம். இதை புரிய வைத்த பெருமை மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியை சாரும். அவர் 96 வயதிலும் வீல் சேரில் சென்று திமுகவை வளர்த்தார். அவரை ரோல்மாடலாக ஏற்றுகொண்டு நானும் கட்சி வளர்ச்சி பணியில் ஈடுபடுவேன். கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற  ஜனதாதளம் கட்சியை பலப்படுத்தி மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வைப்போம்.  அதற்காக மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் வழியை பின்பற்றுவேன்’ என்றார்.

Related Stories: