அமைச்சரவை விஸ்தரிப்பு அனுமதி கிடைக்குமா? கர்நாடக முதல்வர் அடுத்த வாரம் மீண்டும் டெல்லி பயணம்

பெங்களூரு: அமைச்சரவை விஸ்தரிப்பு அனுமதி பெற அடுத்த வாரம் மீண்டும் டெல்லிக்கு முதல்வர் செல்ல உள்ளார். கர்நாடக மாநிலத்தில் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜ ஆட்சி அமைந்து 7 மாதம் முடியும் நிலையில் இன்னும் முழு அளவில் அமைச்சரவை விஸ்தரிப்பு நடக்கவில்லை. சட்டப்பேரவை இடைத்தேர்தல் மற்றும் நகர உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் அமைச்சரவை விஸ்தரிப்பு நடக்கும் என்று பாஜ மூத்த தலைவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், பாஜ எதிர்ப்பார்த்த வெற்றி கிடைக்காததால், இடைத்தேர்தல் முடிந்து ஒருமாதம் கடந்தும் இன்னும் அமைச்சரவை விஸ்தரிப்பு  நடக்கவில்லை. இதுதொடர்பாக பாஜ மேலிட தலைவர்களை சந்தித்து பேசுவதற்காக 5 முறை முதல்வர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் பாஜ மேலிட தலைவர்களை சந்திப்பதற்காக அடுத்த வாரம் டெல்லி செல்வதாக முதல்வர் பசவராஜ்பொம்மை தெரிவித்துள்ளார். அவர் பயணம் திட்டமிட்டபபடி நடக்குமா? அப்படி சென்றாலும் மேலிட தலைவர்களை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைக்குமா? வாய்ப்பு கிடைத்தாலும் அவர் விரும்பும் அனைவரையும் அமைச்சரவையில் சேர்த்து கொள்ள அனுமதி கிடைக்குமா? என்ற பல கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் எதிரொலித்து வருகிறது. ஆரம்பத்தில் ஆட்சி நீடிக்குமா? என்ற அக்னி பரீட்சையை சந்தித்து வந்த முதல்வருக்கு தற்போது அமைச்சரவை விஸ்தரிப்பு அக்னிபரீட்சையாக அமைந்துள்ளது.

Related Stories: