×

பாஜவில் இருந்து விலகிய 2 மாஜி அமைச்சர்கள் சமாஜ்வாடியில் ஐக்கியம்: 5 எம்எல்ஏக்களுடன் சேர்ந்தனர்

லக்னோ, ஜன.15: உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதில், உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ ஆட்சி நடந்து வருகிறது. இங்கு அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதி வரை, 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில், யோகி அமைச்சரவையில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சராக இருந்த சுவாமி பிரசாத் மவுர்யா, கடந்த 11ம் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டரில், `தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், விவசாயிகள், வேலையற்ற இளைஞர்கள், சிறுகுறு வணிகர்கள் ஆகியோர் மாநில அரசால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர்.

இதனால், யோகி தலைமையிலான அமைச்சரவையில் இருந்து பதவி விலகுகிறேன்,’’ என்று தெரிவித்திருந்தார். இவரைத் தொடர்ந்து, தின்ட்வாரி தொகுதி எம்எல்ஏ. பிரஜேஷ் பிரஜாபதி, தில்கார் தொகுதி எம்எல்ஏ. ரோஷன் லால் வர்மா, பிலாகர் தொகுதி பகவதி பிரசாத் சாகர் ஆகியோரும் பிரசாத் மவுர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து, உபியில் ஆளும் பாஜவில் இருந்து, மேலும் பல எம்எல்ஏக்கள் விலகி வருவார்கள் எனவும், அவர்கள் சமாஜ்வாடி கட்சியில் இணைவார்கள் எனவும் தகவல்கள் வெளியாகின. பாஜவில் கடும் அதிருப்தி நிலவுவதாகவும், எம்எல்ஏக்கள் பலர் விலக தயாராக உள்ளதாகவும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உட்பட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், பாஜவில் இருந்து விலகிய அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் சமாஜ்வாடியில் சேர்ந்து வருகின்றனர். பாஜவில் இருந்து சுவாமி பிரசாத் மவுரியா, தரம் சிங் சைனி ஆகிய இரு அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இவர்களை தவிர ரோஷன்லால் வர்மா, பிரிஜேஷ் பிரஜாபதி, முகேஷ் வர்மா, வினய் சாக்கியா மற்றும் பகவதி சகார் ஆகிய 5 எம்.எல்.ஏக்களும் பாரதிய ஜனதாவில் இருந்து விலகிவிட்டனர். இந்த 7 பேரும் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் முன்னிலையில் நேற்று சமாஜ்ராடி கட்சியில் சேர்ந்தனர். அப்போது முலாயம் சிங் யாதவ் கூறுகையில், 403 உறுப்பினர்களை கொண்ட உ.பி.சட்டமன்றத்தில் நான்கில் மூன்று இடங்களில் பாரதிய ஜனதா வெற்றி பெறும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார். அவர் கூறிய உண்மையில் நான்கில் மூன்று இடங்கள் அல்ல 3 அல்லது நான்கு இடங்கள் என்று கிண்டல் அடித்தார்.

Tags : Baja ,United ,Samajwadi , BJP, Ministers, Samajwadi Party, MLA,
× RELATED 3வது அணிக்கு இடம் கொடுத்தால் பாஜ...