×

வாகன நெரிசலை குறைக்க சோழிங்கநல்லூரில் போக்குவரத்து மாற்றம்: போலீஸ் கமிஷனர் உத்தரவு

துரைப்பாக்கம்: சென்னை ராஜிவ்காந்தி சாலை சோழிங்கநல்லூர் சந்திப்பில் தினசரி  காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள் ளாகி வருகின்றனர்.  இப்பிரச்னைக்கு தீர்வுகாண, தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி, போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டார். தற்போது, கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து கலைஞர் கருணாநிதி சாலை வழியாக வரும் வாகனங்கள் இடதுபுறம் ராஜீவ்காந்தி சாலை சாலையில் திரும்பி, பின்னர் ஆவின் பால் பண்ணை சென்று, அங்கு ‘யு டர்ன்’ எடுத்து, சோழிங்கநல்லூர் சிக்னல் வரும்.

பின்னர், இடதுபுறம் வழியாக மேடவாக்கம் செல்லும் சூழ்நிலை இருந்து வருகிறது. மேலும், மேடவாக்கத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை செல்லக்கூடிய வாகனங்கள் மேடவாக்கத்தில் இருந்து சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே,  இடதுபுறம் ராஜீவ்காந்தி சாலையில் திரும்பி, 200 மீட்டர் சென்று அங்குள்ள சிக்னலில் ‘யு டர்ன்’ எடுத்து, பின்னர் கலைஞர் கருணாநிதி சாலை வழியாக, கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்லக்கூடிய நிலை இருந்து வருகிறது. எனவே, இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.

இதனை தவிர்க்கும் வகையில், கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து வரும் வாகனங்கள் சோழிங்கநல்லூர் சிக்னலில் இருந்து நேராக மேடவாக்கம் செல்வதற்கும், மேடவாக்கத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்லும் வாகனங்கள்  சிக்னலில் இருந்து நேராக கலைஞர் கருணாநிதி சாலை வழியாக, கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்லவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதசாரிகள் பாதுகாப்பாக சாலையை கடக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து மாற்றம் இன்று (14ம் தேதி) முதல் நடைமுறைக்கு வருகிறது.

Tags : Choliganallur , Traffic congestion, Cholinganallur, traffic change, Commissioner of Police
× RELATED சோழிங்கநல்லூரில் கடையை உடைத்து...