×

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் பெண்ணின் கணவரை கொல்ல கூலிப்படையை ஏவிய வக்கீல்: கைதான 2 பேர் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (38). இவருக்கு சுடர்மதி என்ற மனைவியும், 9 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு புளியந்தோப்பு பேசின் பிரிட்ஜ் சாலை வழியாக பைக்கில் சென்றபோது, பின் தொடர்ந்து வந்த 4 பேர், தினேஷ்குமாரை மடக்கி, அரிவாளால் வெட்டினர். அப்போது, அவ்வழியே ரோந்து பணியில் ஈடுபட்ட பேசின்பிரிட்ஜ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், இதை பார்த்து அங்கு விரைந்தார். இதனால், அந்த 4 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அவர்களை விரட்டி சென்று, 2 பேரை மடக்கி பிடித்தார். மற்ற இருவர் தப்பினர். பிடிபட்ட 2 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

முன்னதாக காயமடைந்த தினேஷ்குமாரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சகிச்சை அளிக்கப்படுகிறது. பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், அயனாவரத்தை சேர்ந்த சஞ்சீவ்குமார் (25), அயனாவரம் ரயில்வே குடியிருப்பு பகுதியை சேர்ந்த பிரதீப் குமார் (28) என்பதும், தப்பி ஓடியவர்கள் அயனாவரத்தை சேர்ந்த அஸ்வின் (23), அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்பதும் தெரியவந்தது. இதில், அஸ்வின் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கும், சஞ்சீவ்குமார் மீது கொலை முயற்சி வழக்குகளும் இருப்பது தெரியவந்தது.

இவர்கள் அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியதாவது:
சஞ்சீவ்குமாருக்கு வியாசர்பாடியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் வழக்கறிஞராக செயல்பட்டு வருகிறார். வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்ட சஞ்சீவ்குமாரை சமீபத்தில் சந்தித்த வழக்கறிஞர் ராஜேஷ், ‘‘திருமங்கலம் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்பவன், எனது தங்கைக்கு தொடர்ந்து தொல்லை செய்து வருகிறான். அவனை கொலை செய்ய வேண்டும்,’’ என்று கூறியுள்ளார். அதற்கு சஞ்சீவ்குமார் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சஞ்சீவ்குமாரை ராஜேஷ் ஜாமீனில் வெளியே எடுத்துள்ளார். இதையடுத்து, சஞ்சீவ்குமார் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, சம்பவத்தன்று தினேஷ்குமாரை கொலை செய்வதற்கு வந்துள்ளார். அவர்களுடன் வந்த வழக்கறிஞர் ராஜேஷ், தினேஷ்குமாரை அடையாளம் காட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். பின்னர், சஞ்சீவ்குமார் தனது கூட்டாளிகளுடன் தினேஷ்குமாரை வெட்டியபோது போலீசில் சிக்கினர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.

இதையடுத்து, மருத்துவமனையில் இருந்த தினேஷ்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், தனது மனைவி சுடர்மதி, வழக்கறிஞர் ராஜேசுடன் கள்ளத்தொடர்பில் உள்ளார். இதை நான் கண்டித்ததால் மனைவி என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். எனது மனைவி தூண்டுதலின் பேரில், வழக்கறிஞர் ராஜேஷ் கூலிப்படை வைத்து என்னை வெட்டி கொல்ல முயன்றார், என தெரிவித்துள்ளார். கள்ளக்காதல் விவகாரத்தை மறைத்து, தங்கை பிரச்னை எனக்கூறி, பெண்ணின் கணவரை கொல்ல கூலிப்படையை தயார் செய்த வழக்கறிஞர் ராஜேஷ் மற்றும் அஸ்வின் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags : False love, woman's husband, mercenary, lawyer, confession
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...