×

மடிப்பாக்கத்தில் பாதாள சாக்கடை திட்ட பணி விவகாரம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அதிகாரிகள் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட மடிப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை பணிகளை நிறைவேற்றாதது குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆஜராகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அய்யம்பெருமாள் என்பவர் 2019ல் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட மடிப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தவில்லை. ஆனால், அருகில் உள்ள புழுதிவாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. மடிப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் இல்லாததால் அடுக்குமாடி கட்டிடங்களில் உள்ள செப்டிக் டேங்குகள் நிரம்பி சாலைகளில் வழிகிறது. இதனால், நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

பாதாள சாக்கடை அமைப்பது தொடர்பாக அனுப்பிய மனு மீது சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய நிர்வாக இயக்குனர் நடவடிக்கை எடுக்காததால் பாதாள சாக்கடை திட்டத்தை அமைக்க குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயித்து உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.  இந்த வழக்கில், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், மடிப்பாக்கம் பகுதிக்கு 160 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் பாதாள சாக்கடை அமைப்பது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. திட்ட அறிக்கை கிடைத்தவுடன், நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் கோரப்பட்டு பணிகள் தொடங்கும். டெண்டர் பணிகளை முடிக்க 6 மாதமும், அதன்பின்னர் 36 மாதங்களில் பணிகள் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளை 2020ம் ஆண்டு டிசம்பருக்குள் முடிக்க வேண்டும் என்று கடந்த 2019 ஜூலை 15ம் தேதி உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி பணிகள் முடிக்கப்படவில்லை என்பதால் கடந்த ஆண்டு அய்யம்பெருமாள் உயர் நீதிமன்றத்தில்,  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மடிப்பாக்கம் பகுதியை தவிர மற்ற பகுதிகள் தொடர்பான விவரங்கள் இடம்பெற்றுள்ளது.

ஆனால் நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் மடிப்பாக்கத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் ஏதும் தொடங்கப்படவில்லை. பணிகளை முடிக்க கூடுதல் கால அவகாசம் கூட கேட்கவில்லை. எனவே, நீதிமன்ற உத்தரவை அவமதித்தது உறுதியாகியுள்ளதால் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய நிர்வாக இயக்குனர் மற்றும் செயற் பொறியாளர் ஆகியோர் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Folding, Sewerage Project Work, Court Contempt Case, Authorities, High Court,
× RELATED தேர்தல், கொரோனா விதிமீறல்: பிறந்த நாள் கொண்டாடிய பாஜக எம்பி மீது வழக்கு