×

பாடமாகும் சுவர்கள்!

நன்றி குங்குமம் தோழி

கல்வி என்பது ஒரு சமுதாயம் பெற்ற தலை சிறந்த அறிவு மற்றும் அதன் திறன்களை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் கருவி. கல்வி ஒரு குழந்தையின் படைப்புத் திறனை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வாய்ப்புகளை வழங்கும் தன்மையுடையது. கல்வி மனிதர்களுக்கு உலகம் பற்றிய அறிவை கொடுக்கிறது. கல்வியறிவு ஒருவருக்குச் சரியான கண்ணோட்டத்தில் தகவல்களைப் புரிந்து கொள்ளும் திறனை அளிக்கிறது.

குழந்தையின் உடல், மனம், உயிர் அவற்றின் உணர்வுகள், மனப்பான்மைகள், தொடர்புகள், குணநலம், ஆளுமை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. இயல்பாகவே உள்ளார்ந்த ஆற்றல்களுக்கும் சுய வெளிப்பாட்டுக்கும் ஒரு வடிகால். உரிமையும் கடமையும் கொண்ட சமுதாய உறுப்பினர்களை உருவாக்குகிறது. மனிதர் நல்வாழ்க்கை வாழ, வளம் பெற வழிகாட்டும் ஓர் அறப்பணி… என்று பல பரிமாணங்களில் கல்வியை விவரித்துக் கொண்டே போகலாம்.
இவ்வளவு முக்கியத்துவம் கொண்ட கல்வியில், முக்கியமானதாகப் பார்க்கப்படுவது ஆரம்பக் கல்வி.

ஒருவரது ஆரம்பக் கல்வி எவ்வாறு அமைகிறது என்பதைப் பொறுத்து அவர்களது வாழ்வு தீர்மானமாகிறது. இதை உணர்ந்த மகேஷ்வர் என்கிற இளைஞர் தங்கள் நண்பர்களுடன் இணைந்து, ஆரம்பக் கல்விக்காகப் பல முன்னெடுப்புகளில் ஈடுபட்டுள்ளனர். அதில் முதன்மையானதாகப் பள்ளியின் சூழலைப் பொறுத்தே, அங்குள்ள மாணவர்களின் மனநிலை அமைகிறது என்பதற்காக அதற்கான வேலைகளும் செய்து வருகின்றனர். “சொந்த ஊர் பாண்டிச்சேரி. பி.டெக்., MBA, படித்திருக்கிறேன். பெற்றோர் இருவருமே அரசுப் பள்ளி ஆசிரியர்கள். அம்மா தலைமை ஆசிரியர். அவங்க எந்த அளவுக்கு மாணவர்களுக்கு செய்வாங்க என்பது தெரியும்.

இறக்கும் அன்றைக்கும் கூட மாணவர்களை குயின்ஸ் லேண்ட் கூட்டிட்டு போனாங்க. இது மாதிரி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பல முன்னெடுப்புகளை செய்து வருகின்றனர். ஆனால், பள்ளியைச் சுற்றியுள்ள இடம் எப்படி இருக்கிறது என்பதுதான் கவலையாக இருக்கிறது. இதனால் தனியார் பள்ளிகள் மீது மக்களின் பார்வை விழுகிறது. ஒரு இடத்தில் அரசுப் பள்ளி இருப்பது எவ்வளவு முக்கியம் என்பது எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். அடிப்படை கல்வி கொடுத்தால்தான் எந்த நாடும் முன்னேறும். அதனால் இலவசமாகக் கொடுப்பது அவசியம். ஆனால், இங்கு தனியார் பள்ளிக்கு இடம் பெயர்ந்து வியாபாரமாகியுள்ளது.

எவ்வளவு காசு கொடுத்தாலும் படிக்க வைப்பேன் என்கிற மனநிலையில்தான் பெற்றோர்கள் இருக்கிறார்களே தவிர, அங்கு என்ன கற்றுக் கொடுக்கிறார்கள் என்பது என்றாவது ஒரு நாள் சோதனை செய்திருக்கிறார்களா? அரசுப் பள்ளிகளில்தான் ஆசிரியர் ஆசிரியராக இருக்கிறார்கள். தனியார் பள்ளிகளில் ஓர் பணியாளர் அவ்வளவே. தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க ஆயிரம் காரணம் இருந்தாலும், நூற்றில் 30% look and feel தான் மாணவர்களையும், பெற்றோர்களையும் ஈர்க்கிறது” என்கிறார் மகேஷ்வர். ஒரு சில அரசுப் பள்ளிகளின் சுவர்களை நாம் கடந்திருப்போம். அதில் உள்ள குறைகளையும் கண்டும் காணாமல் செல்கிறோம். அவ்வாறு இல்லாமல் இந்த இளைஞர் பட்டாளம் அச்சுவர்களை வண்ணமயமானதாக மாற்றி வருகின்றனர்.

“தனியார் பள்ளிகளில் எவ்வாறு கலர், கலரா பெயிண்ட் அடுச்சு கவர்கிறார்களோ, அதற்கு நிகராக அரசுப் பள்ளிகளும் இருக்க வேண்டுமென்று என் நண்பர்களுடன் விவாதித்த போது, அதற்கான மாற்றங்கள் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இது வரை 37க்கும் மேற்பட்ட பள்ளிகள்,அங்கன்வாடிகளை வண்ணமயமாக்கியிருக்கிறது எங்கள் கரங்கள். இந்த கரங்களோடு மற்றவர்களும் இணைய விரும்புகிறோம். குறிப்பாக  அரசு எங்களைப் போன்றவர்களை ஊக்குவிக்க கோரிக்கை விடுக்கிறோம். ஒருவரது வாழ்க்கையின் பிள்ளையார் சுழியே இந்த ஆரம்ப பள்ளிகள்தான். எல்லோராலும் தனியார் பள்ளிகளுக்குச் செல்ல முடியாது. இதனை அரசாங்கம் உணர வேண்டும்.

இதனால் நாங்கள் கவனம் எடுப்பது ஆரம்ப பள்ளிகள். சாலையிலிருந்து பாக்கும் போது எந்த அளவு அழகாக ஆக்க முடியுமோ அந்த அளவு செய்கிறோம். வகுப்பறைக்குள்ளும் Illustrating Painting பண்றோம். அதேபோல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு என்ன கற்க முடியுமோ அதையும் வரைகிறோம். அந்த சுவர்கள் அழகாவதோடு பாடமும் கற்க முடிகிறது. இது போன்ற ஒரு சூழல் உருவாகும் போது தானாகவே மாணவர்களுக்குப் பள்ளி செல்ல ஆசை வரும்.
தனியார் பள்ளிகளில் பணம் வாங்கிக் கொண்டு செய்துவிடுகிறார்கள். புரெஜக்டர் இருக்கு, அது இருக்கு இது இருக்கு என்று சொல்லி அதற்கான சூழலை உருவாக்குகிறார்கள். அரசுப் பள்ளி களின் சூழலை யாரும் கண்டு கொள்வதில்லை. அதனால் இதை முன்னெடுக்கலாம் என்று ஆரம்பித்ததுதான் “பெயின்ட் பாண்டிச்சேரி.”

இந்தியாவில் இந்த மாதிரி கான்ஃபிலிட்டான ஐடியா வச்சு பண்றது, எனக்குத் தெரிந்து என்னுடைய தொண்டு நிறுவனமாகத் தான் இருக்கும் என்று நம்புகிறேன். மற்றவர்கள் நிறைய பெயிண்டிங் ஆக்டிவிட்டி செய்றாங்க. எல்லாம் பண்றாங்க ஆனால், கல்விக்காக ஃபோக்கஸ் செய்து பண்றது பெரிதாகத் தெரியவில்லை. ஆர்ட் மூலமாக மாணவர்களிடையே ஓர் மாற்றத்தை ஏற்படுத்துகிறோம் என்பது சந்தோஷமாக இருக்கிறது. சனி, ஞாயிறுதான் எங்கள் வேலை. திங்கள் காலை மாணவர்கள் வந்து பார்க்கும் போது அவர்களின் மனநிலையில் எந்த மாதிரி இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை அறியும் போது ஓர் இனம் புரியா பேரானந்தம்.
பொதுவாக அரசுப் பள்ளிகள் மீது குற்றச்சாட்டினை வைக்கின்றனர். அதே குற்றச்சாட்டுத் தனியார் பள்ளிகள் மீதும் இருக்கும்.

ஆனால், அது வெளியே வராது. பணம் கட்டி படிக்க வைப்பதால் புகார் சொல்ல மனம் வருவதில்லை. அவர்கள் தங்கள் பிள்ளைகள் மீதுதான் புகார் சொல்வார்கள். 100-ல் பத்து அரசுப் பள்ளி அப்படி இருக்கிறதென்றால், தனியார் பள்ளியிலும் அப்படி இருக்கத்தான் செய்கிறது. அரசாங்கத்தினால் மட்டும்தான் இலவசமாகக் கல்வி கொடுக்க முடியும். தனியார் பள்ளிகளால் வியாபாரம் மட்டுமே செய்ய முடியும்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் மகேஷ்வர்.

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!