உத்தரப்பிரதேசத்தில் 48 மணி நேரத்தில் 2 அமைச்சர்களும் 5 பாஜக எம்எல்ஏக்கள் பதவி விலகல்: உ.பி. அரசியலில் பெரும் பரபரப்பு

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ முகேஷ் வர்மா ராஜினாமா செய்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியில் இருந்து 48 மணி நேரத்தில் விலகியுள்ள 7வது எம்.எல்.ஏ முகேஷ் வர்மா ஆவார். உ.பி.யில் 48 மணி நேரத்தில் 2 அமைச்சர்களும் 5 பாஜக எம்எல்ஏக்களும் விலகி உள்ளதால் ஆளுங்கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு அடுத்த மாதம் 10ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதி வரை 7 கட்டமாக சட்டசபை  தேர்தல் நடைபெறுகிறது. பாஜ,சமாஜ்வாடி,பகுஜன் சமாஜ், காங்கிரஸ்  ஆகிய கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டாலும் பாஜ, சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையே முக்கிய போட்டி நிலவுகிறது.

தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் பாஜ அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த  சுவாமி பிரசாத் மவுர்யா நேற்றுமுன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து அக்கட்சியை சேர்ந்த அவரின் ஆதரவு  எம்எல்ஏக்கள்  5 பேரும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் தாரா சிங் சவுகான் என்ற அமைச்சர் நேற்று ராஜினாமா செய்தார்.  அவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தில்,‘யோகி ஆதித்யநாத் அரசு பிற்பட்டோர், தலித், நலிவடைந்த பிரிவினர், விவசாயிகள் மற்றும் வேலை இல்லாத இளைஞர்களை முழுமையாக புறக்கணித்துள்ளது. இதனால் ராஜினாமா செய்தேன்’ என குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில் இன்று மற்றொரு எம்.எல்.ஏ முகேஷ் வர்மா ராஜினாமா செய்துள்ளார்.  2 நாட்களில் 2 அமைச்சர்கள்,5 பாஜக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது பாஜவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

Related Stories: