பேலட் ஆஃப் நாராயமா

நன்றி குங்குமம் தோழி

ஜப்பானில் பழங்காலங்களில் ஒரு வழக்கம் இருந்தது. நாட்டில் இயற்கை சீற்றத்தாலோ அல்லது விளைச்சல் குறைபாட்டாலோ பஞ்சமேற்பட்டு மக்கள் பட்டினியால் மடியும் போது ஒரு சட்டத்தை அமலுக்குக் கொண்டு வருவார்கள். அந்தச் சட்டத்தின், வழக்கத்தின் பெயர் உபாசூட்.

அந்த வழக்கத்தின் படி 70 வயதான முதியவர்களை ஊருக்கு ஒதுக்குபுறத்தில் இருக்கும் மலைப்பகுதிகளிலோ aஅல்லது ஆள் அரவமற்ற இடங்களிலோ தனியாக விட்டுவிட்டு வந்துவிடுவார்கள். அங்கு அவர்களுக்கு தண்ணியோ, உணவோ எதுவுமே கிடைக்காது. அவர்கள் மரணம் வரை அங்கேயே இருந்து மடிந்து

விடுவார்கள். இந்த வழக்கத்தை முதியவர்கள், பெரும்பாலும் பெண்கள் மகிழ்ச்சியுடனும், தியாக உணர்வுடனும் தங்களின் அடுத்த தலைமுறைக்காக ஏற்றுக்கொண்டார்கள். இதுவரைக்கும் தங்களுக்கு கிடைத்த உணவு பட்டினியால் வாடும் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் இனிமேல் கிடைக்கும் என்று

நம்பினார்கள். இப்படி உபாசூட் காலத்தில் வாழ்ந்த ஒரு தாயின் கதை தான் ‘பேலட் ஆஃப் நாராயமா’.

நாராயமா மலைக்கு அருகிலிருக்கும் கிராமத்தில் வசித்து வருகிறாள் 70 வயது நிரம்பிய ஒரு அம்மா. அங்கே கடுமையான பஞ்சம் நிலவுகிறது. அதனால் உபாசூட் அமலுக்கு வருகிறது. சுற்றியிருக்கும் குழந்தைகளும் , இளைஞர்களும் பட்டினியால் வாடுவதை காணும் போது அந்த அம்மாவால் சாப்பிடவே முடிவதில்லை.

தனக்கு கிடைக்கும் கொஞ்ச சாப்பாடும் இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் கிடைக்குமென்றால் இப்பொழுதே மலைக்கு சென்று உயிர் துறக்க விருப்பப்படுகிறேன் என்கிறாள். ஆனால், மகனை பற்றிய சிந்தனை அவளைத் தடுக்கிறது. வேறு எதையும் விட மகனை அவள் நேசிக்கிறாள். மகனும் அம்மாவின் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளான். ஆனால், அந்த மகனின் மனைவி சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டாள். தான் மலைக்கு சென்றுவிட்டால் மகன் தனிமையாகி விடுவான் என்று பயப்படுகிறாள். அவனுக்கு வேறு கல்யாணம் செய்யவும் விருப்பமில்லை.

இப்படி மகனை தனியாக தவிக்க விட்டுட்டு போய் எந்த அம்மாவால் நிம்மதியாக சாக முடியும். மகனுக்கு அருகிலிருக்கும் கிராமத்தில் ஒரு பெண்ணை பார்க்கிறாள். அந்தப் பெண்ணும் ஒரு விதவை. மகனும் அந்தப் பெண்ணை ஏற்றுக்கொள்கிறான். பஞ்சம் அதிகமாகிறது. அவர்களுடைய நாட்கள் பசியோடும், பட்டினியோடும் கழிகிறது. உபாசூட்டை நிறைவேற்ற வேண்டிய நாளும் வருகிறது. மிகுந்த தயக்கத்திற்குப் பிறகு மகன் தன் முதுகிலே அம்மாவைச் சுமந்து கொண்டு நாராயமா மலையில் விட்டுவிட்டு வீடு திரும்புவதோடு படம் நிறைவடைகிறது. நாராயமா மலைக்குச் செல்லும் போது பயணத்தை அதிகாலையில் யார் கண்ணிலும் படாமல் தொடங்க வேண்டும்.

பயணத்தின் போது மகனும், அம்மாவும் பேசக்கூடாது. மலையில் அம்மாவை விட்டுட்டு திரும்பி பார்க்காமல் மகன் வந்துவிட வேண்டும் போன்ற பல

கட்டளைகள் இருக்கின்றன. பல மைல்கள் ஒரு குழந்தையைப் போல அம்மாவை முதுகில் சுமந்துகொண்டு மலையில் சேர்த்துவிடுகிறான். இனி உணவில்லாமல்,

தண்ணியில்லாமல் மரணத்தைச் சந்திக்க காத்திருக்கும் நாட்கள் தரும் துயரைவிட, ஊரில் இருந்த போது இளைஞர்கள் எல்லாம் நமக்கே சோறு இல்லை. இந்தக் கிழவி மட்டும் அரக்கன் மாதிரி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறாள் என்று சொன்னதை எண்ணி மனம் வருந்தியதை விட பயணத்தின் போது மகன் என்னுடன் பேசியபோது பதில் சொல்ல முடியவில்லையே என்ற வேதனையும், மகன் திரும்பி பத்திரமாக வீடு போய் சேர்ந்துவிடுவானா என்ற கவலையும் தான் அந்த அம்மாவை அலைக்கழிக்கிறது.

இந்தப்படம் ஜப்பானில் முதியவர்களின் வாழ்க்கை இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய காலகட்டத்தில் எப்படி இருந்தது என்பதை காட்டும் கண்ணாடியாக இருக்கிறது. உபாசூட்டை சட்டமாகவோ, வழக்கமாகவோ பார்க்காமல் ஒரு குறியீடாக அணுகினால், பிள்ளைகளால் முதியவர்கள் பட்டினி போடப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு சாகடிக்கப் படுகிறார்கள். இல்லை அவர்களை தற்கொலை செய்து கொள்ள வைக்கிறார்கள். இதைத்தான் ஜப்பானின் சூழலும், இன்றும் ஜப்பானில் அதிகரித்துக் கொண்டிருக்கும் முதியவர்களின் தற்கொலையும் மெய்ப்பிக்கிறது. ஜப்பானில் தற்கொலையை ஒரு கௌரவமான செயலாக கருதுகிறார்கள்.மகனிடம் புதிய மனைவி ஒன்றை சொல்வாள் வயது 70 ஆனபிறகு நாம ரெண்டுபேரும் சேர்ந்தே நாராயமா மலைக்கு போலாம். இந்தக் கூற்றும் இதைத்தான் நிரூபணம் செய்கிறது.

பேலட் ஆப் நாராயமா காட்சி ரீதியாக தரும் அனுபவம் மிக அழகான ஒன்று.ஜப்பானில் அழிந்து கொண்டிருக்கும் கபுகி நாடக (நம்ம ஊரில் கோவில் திருவிழாக்களில் போடப்படும் கூத்துகளில் ராமரை போலவோ, கிருஷ்ணனை போலவோ வேடமிட்டு பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் கதை சொல்லுவது போன்றது) பாணியில் இயக்குனர் கினொசித்தா படமாக்கியிருப்பது புதிய அனுபவம்.

தொகுப்பு: த.சக்திவேல்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: