மனநல நிபுணர்களுக்கும் மருத்துவ ஆலோசனை தேவை

நன்றி குங்குமம் டாக்டர்

அதிர்ச்சி


சில நேரங்களில், மனநல நிபுணர்களுக்கும் அவர்களிடம் ஆலோசனைக்கு வரும் நபர்களை கையாளும்போது உணர்ச்சி சோர்வு மற்றும் பச்சாத்தாபத்தால் ஏற்பட்ட  மன அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள். மேலும், சில நேரங்களில் குற்ற உணர்ச்சி அல்லது இடைவிடாத வேலைப்பளுவும் கூட அவர்களுக்கு சுமையாக  மாறிவிடுகின்றன.

இது தொடர்பான உலகளாவிய நடப்பு என்ன சொல்கிறது? உலகின், சைக்கோ அனலிஸ்டின் தந்தையாக கருதப்படும் சிக்மண்ட் பிராய்ட் கூட போதைப்பொருள்  துஷ்பிரயோகம், ஆயுத துஷ்பிரயோகம், மூட நம்பிக்கைகள் மற்றும் தனிமையால் அவதிப்பட்டிருக்கிறார். மனநல வல்லுநர்கள், எப்படி தங்கள் மனநிலைகளுடன்  போராடுகிறார்கள் என்பதற்கு இவரே ஒரு உதாரணமாகிறார். ‘தற்கொலைகள் மற்றும் மனச்சோர்வினால் பாதிக்கப்படுவதைத் தவிர்த்து, மனநல நிபுணர்கள்  குடிப்பழக்கம் மற்றும் போதைப் பொருள் பாவனைக்கு அதிக ஆபத்தில் இருக்கிறார்கள் என்பதை சில வெளிநாட்டு மனநல நிபுணர்களே ஒப்புக்கொள்கிறார்கள்.

உலக சுகாதார அமைப்பும் மனநல மருத்துவர்களுக்கு இருக்கும் எரிமலையாக வெடித்தல் (Burnout) என்று சொல்லக்கூடிய மனநிலையை ஒரு மருத்துவ  நிலையாக அங்கீகரிக்கிறது. மேலும், இதை நிவர்த்தி செய்வது மிகவும் முக்கியமான ஒன்று என்ற கருத்தையும் தெரிவிக்கிறது. ‘அதிலும், மனநலத் துறையில்  இருப்பவர்களுக்கு இருக்கும் தொழில் ஆபத்து காரணிகளில் Burnout மிக முக்கியமான தொழில் ஆபத்து’ என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள்.  அதிகரித்துவரும் மனநோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் உள்நோயாளிகளுக்கான வார்டுகளும், அதிகபட்ச வேலைப்பளு போன்றவை இத்தொழில்  வல்லுநர்களின் மனநலத்தை பாதிப்புக்குள்ளாக்குகின்றன.

உலக மனநல சங்கத்திலிருந்து வெளிவரும் இதழான ‘உலக உளவியல்’-ல் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை, ‘நீண்டகால வேலை தொடர்பான  அழுத்தங்களுக்கு உட்படுவதன் கடுமையான விளைவுதான் Burnout’’ என்கிறது. இப்படி உலகளாவிய பேசு பொருளாகியிருக்கும் மனநல மருத்துவர்களின்  நிலைதான் என்ன? தங்கள் மன ஆரோக்கியம் மோசமாக மாறும்  சந்தர்ப்பங்களில், உளவியலாளர்களும், மன நல மருத்துவர்களும் என்ன செய்வார்கள்?!

மனநல மருத்துவரான தாரா ஸ்ரீனிவாசனிடம் பேசினோம்…

‘‘பயிற்சிக்கால ஆரம்பத்தில் எங்களிடம் ஆலோசனைக்கு வருபவர்கள் அவர்களின் கதையைப்பற்றி சொல்லும்போது பச்சாதாபத்தால் மன அழுத்தம்  ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு. ஏனெனில், அப்போதுதான் பயிற்சி முடித்துவிட்டு வந்திருப்போம். மனம் பக்குவம் ஏற்படாத நேரம் அது. போகப்போக எங்களுக்கு  பழகிவிடும். பயிற்சிக்காலத்திலேயே எங்களுக்கு சொல்லிக் கொடுத்திருந்தாலும், அதை மறந்துவிட்டு மன சஞ்சலப்படுவோம். மன அழுத்தம் வரும் அளவிற்கு  எனக்கு அனுபவம் எதுவும் இல்லாவிடினும், சில நோயாளிகள் தற்கொலை செய்து கொள்ளும் சூழலில், 2 நாட்களுக்கு முன்புதானே பேசினோம்.

இப்படி செய்து கொண்டுவிட்டார்களே என்று சிறிது நாட்களுக்கு வருத்தத்தில் இருப்பேன். சமீபத்தில் 14 வயது பெண் என்னிடம் ஆலோசனைக்கு வந்தாள்.  அவளுக்கு அப்பா இல்லை. தன்னுடைய சித்தப்பாவிடம் பாசமாக இருந்தாள். அம்மாவும் சித்தப்பாதானே என்று ரொம்பவும் எதார்த்தமாக இருந்திருக்கிறார்.  ஒருநாள் அவர் திடீரென்று ஒருநாள் அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டார். அந்தப் பெண்ணுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இதனால்  மாபெரும் அதிர்ச்சி ஏற்பட்டுவிட்டது.

தானே சுதாரித்துக் கொண்டு மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளாள். நம்பிக்கைதான் அடிப்படை உறவுக்கு ஆதாரம் எனும்போது, அப்பா மாதிரி நினைத்துக்  கொண்டிருந்தவர் தன்னிடம் உறவு கொண்டதால், உறவின் மீதான நம்பிக்கையே அவளுக்கு போய்விட்டது. அதனால் அவளது மனம் மிகவும் பாதித்துவிட்டது.  இதனால் அவளது படிப்பும் பாதித்தது. அவள் படிக்கும் பள்ளி நிர்வாகத்திடம் எடுத்துச் சொல்லி அனுமதி வாங்கியுள்ளோம்.

தொடர்ந்து கவுன்சிலிங் கொண்டிருக்கிறோம். இப்போது ஓரளவு சரியாகிவிட்டது. கண்டிப்பாக அவள் தன் படிப்பைத் தொடர்வாள். குறிப்பிட்ட அந்தப் பெண்ணுக்கு  நடந்த கொடுமை என்னை மிகவும் பாதித்தது. சில நாட்கள் வரையிலும்கூட என்னால் அந்த மன நிலையிலிருந்து விடுபட முடியவில்லை.  இதுபோல் சில  விஷயங்கள் எங்களை பாதிப்பதுண்டு. மனநல மருத்துவர்களாக இருந்தாலும், நாங்களும் மனிதர்கள்தான்...’’ என்கிறார்.

மனநல மருத்துவர் சுனில்குமார் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்கிறார்

‘‘வெளிநாடுகளிலெல்லாம், ஒருவர் மனநல மருத்துவராகவோ அல்லது மனநல ஆலோசகராகவோ ஆக வேண்டுமென்றால், முதலில் ஒரு மனநல மருத்துவரிடம் சென்று முழுமையான பயிற்சி பெற்ற பிறகே மருத்துவராக முடியும். ஆனால், நம்மூரில் அந்த மாதிரியான விஷயம் கிடையாது. படித்து முடித்த  பின் யார் வேண்டுமானாலும் நேரிடையாக ஆகலாம். பொதுவாகவே, எல்லாத்துறையிலுமே தொழில்சார்ந்த ஆபத்துக்கள் இருக்கிற மாதிரியே மனநலத்  துறையிலும் தொழில் ஆபத்து இருப்பது இயற்கையானதுதான். நாங்கள் உணர்ச்சிகளையும், உறவுகளையும் வைத்து சிகிச்சை செய்வதால்  இந்த தாக்கம்  அதிகமாகவும் வரலாம்.

மனநல மருத்துவர்கள் தங்களுக்கு இருக்கும் மனநிலைப் பிரச்னையை வெளியே சொல்ல மாட்டார்கள். பொதுவாகவே இவர்கள் தங்கள் மனநலத்திற்கு  முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பொது மருத்துவர்களேகூட தங்கள் உடல் மற்றும் மனநலத்தை கவனிப்பதில்லை என்கிறபோது, மனநல மருத்துவர்களும்  விதிவிலக்கல்ல. குறிப்பாக எங்களுக்கு மனநல ஆபத்துக்கள் சற்று அதிகம்தான். உதாரணத்திற்கு, என்னால் ஒரு நாளைக்கு 3 அல்லது 4 நோயாளிகளைத்தான்  பயனுள்ள முறையில் கவனிக்க முடியும். ஆனால் 3, 4 பேரை மட்டுமே பார்க்கும் அளவிற்கு மருத்துவர்களின் எண்ணிக்கை இல்லை. இன்று நான்கில்  ஒருவருக்கு மனநலப் பிரச்னை இருக்கிறது எனும்போது அவர்களுக்குத் தேவையான மருத்துவர்கள் இருப்பதில்லை.

இதன் காரணமாக, குறைந்த நேரத்தில் அதிக நோயாளிகளை கையாளவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் தொழில்ரீதியான மனவெடிப்பு  (Professional Burnout)-க்கு உள்ளாகிறோம். வருமான அடிப்படையில் பார்த்தால், பிரதான மருத்துவமனைகளில் தொழில் பயிற்சி  மேற்கொண்டிருப்பவர்கள், கூடுதலாக தனிப்பட்ட கிளினிக்குகளும் வைத்திருப்பார்கள். இது அதிகப்படியான சுமையை கொடுக்கிறது. இதுதான் பெரும்பாலான  மருத்துவர்கள் அனுபவிக்கும் Burnout-க்கு காரணமாகிறது. இரண்டாவதாக, மருத்துவர்களின் குணாதிசயங்களைப் பொறுத்து வருகிறது.

மருத்துவர்களும் மனிதர்கள் என்பதால் அவரவர் குணாதிசயங்களில் பெரிய சிக்கல்கள் வரும். உதாரணத்திற்கு சில மருத்துவர்கள் என்னிடம் வரும் நோயாளிக்கு  நான் நல்லமுறையில் மருத்துவம் செய்ய வேண்டும்; அவர்களை பூரண குணப்படுத்த எல்லா முயற்சியும் செய்ய வேண்டும் என்பன போன்ற தர நிலைகள்   வைத்திருப்பார்கள். அதிலிருந்து கொஞ்சம் குறைந்தால் கூட மன அழுத்தத்திற்கு ஆளாகும் நிலை அவர்களுக்கு வரக்கூடும். Transference எனப்படும்  மனமாற்றம். அதாவது நோயாளிகளுக்கு டாக்டர் மீது ஏற்படும் ஈர்ப்பு. அது காதல், நம்பிக்கை  என நேர்மறையாகவோ அல்லது வெறுப்பு, அவநம்பிக்கை என  எதிர்மறையாகவோ வரலாம்.

மற்றொன்று Counter Transference - மருத்துவருக்கு நோயாளி மீது ஏற்படும் ஈர்ப்பு மற்றும் வெறுப்பு. ‘ஒவ்வொரு மருத்துவரும் தொழில் ரீதியான  தரநிலை வகுத்துக் கொள்ள வேண்டும். இருவருக்கும் இடையே ஒரு மெல்லிய கோடு இருக்க வேண்டும்’. என்பன போன்ற நடத்தை விதிமுறைகள் உளவியல்  படிக்கும் காலத்திலேயே சொல்லிக் கொடுக்கப்படும். அவை வெறும் பாடத்திட்ட அளவில் மட்டுமே இருக்கின்றன. புறக்கணிக்கப்பட்ட பிரிவாகத்தான் இருக்கிறது.  அந்த நடத்தை விதிமுறைகளை நடைமுறையில் கடைபிடிக்காத போதுதான் இந்த சிக்கல்கள் எழுகின்றன.  

ஒரு நோயாளியை எப்படி கையாளவேண்டும் என பயிற்சியும் கொடுக்கப்படுவதில்லை. அதன் முக்கியத்துவமும் தெரிவதில்லை. நடைமுறைச் சிக்கல்கள்  வரும்போதுதான் உணர்கிறார்கள். மேலும், நிறைய மருத்துவர்கள் தங்களுக்கென தனிப்பட்ட நேரத்தை ஒதுக்குவதே இல்லை. ஆரோக்கியம், உணவு, ஓய்வு,  தூக்கம், கேளிக்கை இவற்றையெல்லாம் தியாகம் செய்துவிட்டுத்தான் மருத்துவத் தொழிலைச் செய்கிறார்கள். அவ்வப்போது விடுமுறைக்காலத்தை ஒதுக்குவதும்  அவசியம் என்பதை உணரவில்லை. மருத்துவர் என்றில்லை யாராக இருந்தாலும் இவற்றை விட்டுக் கொடுக்கக் கூடாது.

நோயாளிகளிடமிருந்து வரக்கூடிய உணர்ச்சி ரீதியான தாக்குதல்களுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைத்துவிடுவேன். ‘சில நோயாளிகள் தற்கொலை  செய்து கொள்வேன்... எங்கள் வீட்டாருடன் சேர்ந்து நீங்களும் சதி செய்கிறீர்கள்’ என்றெல்லாம் சொல்வார்கள். இது அவர்களின் நோயுடைய ஒரு பாகம்.  Borderline Personality Disorder உள்ள நோயாளிகள் மருத்துவர் மீது அதிக ஈர்ப்பு கொள்வார்கள். இவர்களுடைய நடை உடை பாவனைகளை  வைத்து, கண்டுபிடித்துவிடலாம். அந்த இடத்தில் ஒரு கோடு கிழித்து, அதைத்தாண்டி அவர்களை வரவிடாமல் செய்துவிடுவோம்” என்கிறார்.

- உஷா நாராயணன்

Tags :
× RELATED தேங்காய் மகிமை!