நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்!

நன்றி குங்குமம் தோழி

ஃப்ரான்சைசி (Franchise) தொழிலை தொடங்க விரும்புபவர்கள் அதற்கான நோக்கத்தை தெளிவாக மனதில் இருத்திக்கொள்ள வேண்டும். முதலில் சுயஆய்வு (Self Evaluation) செய்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாக இருக்கிறது. ஏனென்றால் ஒரு தொழில்முனைவோர் ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் பணியை விட்டுவிட்டு தொழில் தொடங்கும் போது இதில் எவ்வளவு நேரம் செலவிட போகிறார் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதாவது அவர் தினமும் எத்தனை மணி நேரம் செலவிட திட்டமிட்டுள்ளார், குறைந்த அளவிலான நேரத்தைதான் செலவிட போகிறாரா என்பதை முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும் அவருக்கு எந்த துறையில் ஆர்வம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு இத்தொழிலில் களமிறங்குவது மிகவும் அவசியமாகிறது.

நேரம் மட்டுமல்லாமல் எந்த மாதிரியான சப்போர்ட் உங்களது குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து தொழில் தொடங்குவதற்கு கிடைக்கும் என்பதையும் நீங்கள் ஆராய்ந்துகொள்ள வேண்டும். நீங்கள் தற்போது எந்த மாதிரியான லைஃப் ஸ்டைலில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு அதற்கு தகுந்தாற்போல் ஒரு ஃப்ரான்சைஸி தொழிலை தேர்வு செய்வதும் நன்மையே...தற்போது இந்தியாவில் ஜவுளி, வாகனம், உணவு, ஃபேஷன், ரீடெய்ல், எஜுகேஷன், ஆட்டோமொபைல், பியூட்டி அண்ட் வெல்நெஸ், ஃப்னான்சியல் சர்வீசஸ் உள்ளிட்ட 4500 முதல் 5000 வரையிலான ஃப்ரான்சைசி தொழில் வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே புதிதாக இத்தொழிலை தொடங்க விரும்புவோர், இதில் எதை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் இருக்க வாய்ப்புள்ளதால் முதலில் ஃப்ரான்சைசி ஆலோசனை நிறுவனத்தை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் தேவையில்லாத இடர்பாடுகளைத் தவிர்க்கலாம்.

குறிப்பாக தொழில் நஷ்டமடைவதில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும். வெறும் பிராண்டின் பெயரை வைத்துக் கொண்டு தொழில் தொடங்கினால் அது எந்தளவிற்கு வெற்றியை தேடித் தரும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியாது. எனவே ஒரு தொழிலை குறித்து முழுமையாக தெரிந்து கொண்டு களமிறங்குவதுதான் சாலச் சிறந்தது. ஒரு தொழில்துறையை நீங்கள் தேர்வு செய்துவிட்டீர்கள் என்றால், அதில் எந்த ப்ராடக்ட் மற்றும் எந்த சர்வீஸ் என்பதை தேர்வு செய்வது மிக முக்கியம். நீங்கள் தேர்வு செய்த ப்ராடக்ட் மற்றும் சர்வீசுக்கு எந்த மாதிரியான எதிர்கால வியாபாரம் இருக்கும் என்பதையும் நன்கு அறிந்துகொள்ளுங்கள். அதற்கு இத்துறை சார்ந்த வல்லுனர்களின் ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் மிகவும் அவசியம்.

அடுத்ததாக இத்தொழிலுக்கான முதலீடு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

புதிதாக தொடங்க உள்ள தொழிலை நமது சொந்த மூலதனத்தில் அல்லது வங்கி கடன் மூலமாக தொடங்க திட்டமிட்டுள்ளோமா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட பிராண்டை தேர்வு செய்யும்போது அது குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். இதில் குறிப்பாக அந்த நிறுவன பிராண்டின் உரிமையாளர், எத்தனை ஆண்டு காலம் அத்தொழிலை நடத்தி வருகிறார், இதுவரை எத்தனை ஃப்ரான்சைசி வழங்கப்பட்டுள்ளது, அந்த நிறுவனம் ஃப்ரான்சைசி எடுத்துள்ளவர்களுக்கு அளிக்கும் ஒத்துழைப்பு, ஆதரவு, சந்தையில் அதற்கு உள்ள வரவேற்பு போன்ற அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். மேலும் அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் மீதுள்ள பிரச்னைகள், வங்கி கடன் தொடர்பான விவரங்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.

பிராண்டின் ஃப்ரான்சைஸி உரிமையாளர்களை சந்தித்து அவர்களுக்கு எந்த மாதிரியான சப்போர்ட் கிடைக்கிறது என்பதையும் நன்கு ஆராய்ந்து பார்த்துக்கொள்ள வேண்டும். இதன்பின்னர் அந்த ஃப்ரான்சைசி நிறுவனத்தை நேரில் சென்று பார்க்க வேண்டும். நிறுவனத்தின் அக்ரிமென்ட் விவரங்களை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு ஃப்ரான்சைசியை தேர்ந்தெடுக்க வேண்டும். எவ்வளவு காலத்திற்கு ஒப்பந்தம் (Agreement) போடப்படுகிறது, அதை மீண்டும் புதுப்பிக்கும்போது அதற்கு கட்டணம் வாங்குகிறார்களா என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். அதனோடு மட்டுமல்லாமல் அந்த நிறுவனத்திடமிருந்து ஃப்ரான்சைஸி உரிமத்தை பெற்றவர்களிடம் நேரில் சென்று எந்த மாதிரியான டிரெய்னிங், மார்க்கெட்டிங், இனிசியல் ஸ்டோர் செட்டப், லாஜிஸ்டிக்ஸ் போன்ற முழு சப்போர்ட் விவரங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

அந்த நிறுவனத்தின் விதிமுறைகளை நன்கு தெரிந்து கொண்டு அதில் தொடர்ந்து நாம் நடத்த முடியுமா என்பதையும் ஆய்வு செய்து கொள்ள வேண்டும். ஃப்ரான்சைசி தொடங்கும் இடத்தை தேர்வு செய்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த இடத்தின் மக்கள் தொகை, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகள், விஷயங்கள் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும். இத்தொழிலில் நாம் செய்த முதலீடு எத்தனை ஆண்டுகளில் கிடைக்கும் என்பதையும், மாதாந்திர செலவு, மொத்த லாபம், நிகர லாபம் போன்றவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இத்தொழிலை திறன்மிகுந்த தொழில் முனைவோர், சிறு தொழி்ல் முனைவோர், நேர்த்தியான தொழில்முனைவோர் ஆகியோர் தொடங்குவதற்கு, நடத்துவதற்கு சற்று சிரமமாக இருக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் ஃப்ரான்சைசிக்கு என்று தனியாக கட்டுப்பாடுகள், விதிமுறைகள் இருக்கின்றன. அவற்றை கண்டிப்பாக கடைப்பிடித்துதான் ஆக வேண்டும். நம் விருப்பத்திற்கு எந்த முடிவும் எடுக்க இயலாது. விதிமுறைகளையும் மாற்றிக்கொள்ள இயலாத நிலை இத்தொழிலில் இருக்கிறது. ஃப்ரான்சைசியில் அனைத்துக்குமே ஒரு யுனிமார்ம்மிட்டி இருக்கிறது. எனவே இதை கடைப்பிடித்து தொழிலை நடத்துவது கடினமாக இருக்கலாம்.

பெரிய அளவில் தொழி்ல் செய்ய விரும்புவோர், அதிகம் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், ஒரு நிலையான தொழில் செய்ய விரும்புபவர்கள், தொழில் நடத்துவது குறித்து அதிகம் தெரியாதவர்கள், ஒரு முறையான கட்டமைப்பு வசதிகளுடன், விதிமுறைகளுடன் தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு இந்த ஃப்ரான்சைசி தொழி்ல் உகந்ததாக இருக்கும். இந்த ஃப்ரான்சைசி தொழில் தொடங்குவதற்கு ரூ.10 லட்சம் முதலீடு தேவைப்பட்டால் அதில் ரூ. 3 லட்சம் செயல்பாட்டு மூலதனமாக (Working Capital) வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தொழில் மந்த நிலையின் போதோ, தொழில் தொடர்பான பிரச்சனைகள் வரும் போதோ தொழிலை தொடர்ந்து நடத்துவதற்கு இந்த செயல்பாட்டு மூலதனம்தான் கைகொடுக்கும், உதவியாக இருக்கும்.

Related Stories:

>