கற்பித்தல் என்னும் கலை

நன்றி குங்குமம் தோழி

சிறு வயதில் அறிந்தோ, அறியாமலோ நாம் ஒவ்வொருவரும் அவசியம் தவறுகள் செய்திருப்போம். ஆனால் அவற்றையெல்லாம் பெரிதாக நினைப்பதில்லை. சிலர் மறக்காமல் அவற்றை நினைத்து, சில சமயங்களில் ‘அப்படிச் செய்தேனா’ என்று தனக்குத்தானே ஆதங்கப்படுவதுண்டு. சில பெரிய மனிதர்கள், வெளிப்படையாகவே பொதுக்கூட்டங்களில் கூட அவற்றைப் பற்றி பேசுவதுண்டு. இந்த வயதில் நான் இப்படியெல்லாம் செய்திருக்கிறேன் என்று உண்மையாகச் சொல்லி உருக்கமாகப் பேசுபவர்களும் உண்டு. எனக்குத் தெரிந்து ஒரு சிறுவன், ‘மிக்ஸி’யை ஓட்டி தாய் முகத்தில் மிளகாய்ப்பொடியை வாரி இறைத்திருக்கிறான். அவன் அல்லது யாராக இருந்தாலும் அப்படி செய்திருக்க மாட்டார்கள். அவன் தாய் பொடி செய்ய, தயாராக வைத்திருந்திருக்கிறார். பையன் விளையாட்டாக ‘சுவிட்ச்’-ஐத் தட்டியிருக்கான். அவ்வளவுதான்.

பிரித்த பிஸ்கெட்டுகளை, மீண்டும் முழு பாக்கெட் வடிவில் பிரிக்காமல், அதே இடத்தில் தரவேண்டும் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளை பார்த்திருக்கிறோம். அழுது புரண்டு யானை கேட்டு, அந்த யானை பானைக்குள் நுழைய வேண்டும் என்று அடம் பிடித்த குழந்தையை தெனாலிராமனின் வாயால் கேட்டறிந்திருக்கிறோம். இதற்கெல்லாம் கோபப்பட்டு, டென்ஷனை வரவழைத்துக் கொள்வதென்பது, நம்மை நாமே வருத்திக்கொள்வதற்குச் சமம். குழந்தைப் பருவத்தின் சிறப்பே வினோத செயல்கள் புரிவதைக் கண்டு பூரிப்பதுதான். கேட்கும் கேள்விகளுக்கு அலுக்காமல் பதில் தந்து அரவணைத்துச் சென்றால்தான், அவர்களின் ஊக்க சக்தி அதிகரிக்கும். அனைத்தையும் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர்களின் ஆர்வம் அதிகரிக்கும். இவற்றைப் புரிந்துகொண்டு நடந்தால், பிள்ளைகள் செய்யும் சிறு பிழைகள், நமக்குப் பெரிதாகத் தெரியாது.

ஏன் பிள்ளைகள் படிப்பில் பின் தங்குகிறார்கள், அவர்கள் மனம் படிப்பில் ஏன் கவனம் செலுத்துவதில்லை போன்றவற்றை அன்புடன் பழகி, நட்புடன் நடந்துகொண்டாலே அவர்கள் மனம் விட்டு நம்மிடம் பகிர்ந்துகொள்ள ஆரம்பிப்பார்கள். அப்பொழுது அவர்களுக்கு நம் ஆறுதல் வார்த்தைகளோடு, ஒத்துழைப்பையும் தந்துவிட்டால் போதும். மோசமான நிலையிலிருந்து சிறிது சிறிதாக முன்னேறி, ‘பெயில்’ ஆகக்கூடியவன் ‘பாஸ்’ செய்வான். நாற்பது மதிப்பெண் எடுப்பவன் அறுபது எடுப்பான். அவன் தரம் கண்டிப்பாக உயரும். மாணவனின் மனதை புரிந்துகொள்வதற்காக அவன் குடும்ப விஷயங்களை அலச வேண்டும் என்ற அவசியமேயில்லை.

நிறைய மாணவ நண்பர்கள் எங்களிடம் வந்து தனியே சில பிரச்னைகளை பகிர வருவார்கள். அந்த சமயம், நாம் ஒரு குரு என்பதை நினைக்காமல், அவர்களுடன் கலந்து பேசி, எப்படியெல்லாம் செய்தால் பிரச்னைகளை சுலபமாகத் தீர்க்கலாம் என்பதற்காக நண்பர்களாகவே பழகி ஆறுதல் அளிப்பதுண்டு. அதுபோல் நிறைய மாணவ, மாணவிகள் என்னிடம் உடன்பிறந்தவர்கள் போல பழகி வந்தனர். வகுப்பறையில் நுழைந்துவிட்டால், ஒரு ஆசிரியைதான் வெளியிலோ, வகுப்பறை வேலை முடிந்தாலோ அவர்கள் எங்களை தாய் போன்றோ, சகோதர, சகோதரிகளாகவோ, நண்பர்களாகவோ நினைக்கும் விதத்தில், அவரவர் வயதைப் பொறுத்து உறவு முறை கொள்ளலாம். சில நெருக்கமான பிள்ளைகளை பெயரைக்கூட சுருக்கி அழைப்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம் கிடைக்கும்.

‘வீடு’ என்கிற அழகான சிறிய குடும்பத்திலிருந்து, தினமும் பள்ளி என்னும் ஒரு பெரிய குடும்பத்துக்கு வரும்பொழுது, அது ஒரு சுகம். பல்வேறு விதமான முகங்கள் பார்க்கலாம். பலவிதமான நிகழ்வுகள் நடைபெறும், நாமும் சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும். ஆண்டு விழா வந்துவிட்டால் போதும். ஒரு மாதத்திற்கு முன்பாகவே நாட்டியம், நாடகம் போன்றவற்றிற்கு ஒத்திகை ஆரம்பித்துவிடுவோம். அப்பொழுது, எங்கள் பள்ளியில் சுமார் மூன்று மணி நேரம் விழா நடைபெறும். ஒரு சினிமாவுக்குச் சென்ற சந்தோஷம் என்று பலர் பேசிக்கொள்வார்கள். பல நாடகங்கள் எழுதி அரங்கேற்றுவேன். அப்பொழுது, விருந்தினர்களாக வந்து போகும் பல பெரிய மனிதர்கள் அறிமுகம் எனக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாக இருந்து, இன்றும் மனதில் கண் முன்னே வந்து செல்கிறது.

அப்பொழுது எனக்கு திடீரென திருமணம் நிச்சயமாயிற்று. என் பிள்ளைகளுக்கு (மாணவர்) நான் வேலையை விட்டுச்சென்று விடுவேனோ என்கிற பயம். ‘‘ஏன் மிஸ், கல்யாணம் பண்ணிக்காமல்  இருக்கக் கூடாதா?’’ வெகுளித்தனமான அவர்களின் கேள்விகளுக்கு இன்று வரை நான் குழம்பிக்கொண்டுதான் இருக்கிறேன். திருமணம் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், என் தந்தை ஊரின் பெரிய எழுத்தாளராகவும் இருந்ததால், பெரிய வகுப்பு மாணவர்கள் அனைவரும் பெற்றோருடன் வந்து குழுமி விட்டனர். என்னை ஒரு மணப்பெண்ணாகக்கூட நினைக்காமல், அவர்களுக்குத்தான் நான் சொந்தம் என்பதுபோல், பின்னாலும், பக்கத்திலும் வந்து அமர்ந்துகொண்டு ‘போட்டோ’வுக்காக போட்டி போட்டனர். நானும் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். இதைக்கண்ட பலர், என்னிடம் சைகை காட்டினர்.

நானோ அனைவரையும் திருப்திப்படுத்த நினைத்தேன். அதனால் மாணவர்கள் ஒவ்வொருவரையும் சாப்பிட்டார்களா என்று விசாரித்துக் கொண்டிருந்தேன். ‘ஏய், சீரினி நீ சாப்பிடாமல் போகக் கூடாது, புரிஞ்சுதா சீரினி’ என்று உரக்கப் பேசிவிட்டேன் போலும்! அனைவரும் என்னைப் பார்த்து முறைத்துக்கொண்டிருந்தனர். அப்பொழுதுதான் எனக்கு தூக்கி வாரிப்போட்டது. காரணம் கணவர் பெயரும் ‘சீனிவாசன்.’ இதை யோசிக்காத நான், மாணவன் பெயரைச் சொல்லி அன்பு கட்டளையிட்டுக் கொண்டிருந்தேன். மரியாதையில்லாமல், இவர் பெயரை நான் சுருக்கிக் கூப்பிடுவதாக அவர்கள் நினைத்திருக்கலாம். அதனால்தான் முறைத்திருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். பிள்ளைகள் மூலம் நானும் சில பாடங்களைக் கற்றுக்கொண்டதாகவே கருதுகிறேன்.

இடம், பொருள் அறிந்து பேச வேண்டும் என்பதற்கு இது ஒரு அனுபவச் சான்றாக நினைக்கிறேன். நிறைய அனுபவங்கள் நமக்கு மலரும் நினைவுகளாக என்றும் கண் முன் தெரிந்துகொண்டுதான் இருக்கும். என்னிடம் படித்துக்கொண்டிருந்த அழகான ஒரு மாணவியின் தந்தையிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதுவும் ‘துபாயி’லிருந்து, அவள் என் வீட்டிற்கு வந்து படித்துக் கொண்டிருந்தாள். வெகு வருடங்கள் கழித்துப் பிறந்த பெண் என்பதால் செல்லமாக வளர்ந்தவள். உயர்ந்த பதவியில் அவள் தந்தை இருந்தபோதிலும், ஒரு சில நாட்களில் வேலையை ‘ராஜினாமா’ செய்துவிட்டு குடும்பத்துடன் துபாய் சென்றார். தட்டு நிறைய பழங்கள் தந்து, அவளுக்கு ஆசி வழங்கும்படி கூறினார். ஞாபகார்த்தமாக அவளின் ஒரு புகைப்படத்தையும் எனக்குக் கொடுத்துச் சென்றார்.

எனக்கும் அவளைப்பிரிய மனம் வரவில்லை. ஒரு குட்டி சகோதரி போன்று ‘துறு துறு’ வென்றிருப்பாள். என்ன செய்வது? காலங்கள் ஓடிக்கொண்டேதான் இருக்கும். அவளின் பழத்தட்டும், குண்டு மூஞ்சியும் என் கண்முன் அவளை ஞாபகப்படுத்திக்கொண்டேதான் இருக்கும். திடீரென இப்பொழுது அவள் தந்தை கடிதம் எதற்கு எழுதியிருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு கவரைப் பிரித்தேன். அது கடிதமல்ல. ஒரு பெரிய கட்டுரை என புரிந்துகொண்டேன். அவர் பெண் அங்கு சென்றது முதல் படிக்க விரும்பவில்லையாம். பள்ளிக்குப் போகவே விரும்பவில்லையாம், இந்திய கலாச்சாரம், ஆசிரியர் அணுகுமுறை, நடை உடை இவையெல்லாம் மாறுபட்டதால், அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையாம்.

தாய், தந்தை இருவரும் ரொம்ப கவலைப்படுவதாகவும், திரும்பவும் வந்து விடலாமாவென யோசிப்பதாகவும் உருக்கமாக எழுதியிருந்தார். இங்கு இருந்தபோது, இதன் மதிப்பு தெரியாமல் போய்விட்டதாகவும், அங்கு சென்று புதிய சூழலில் அனைத்தையும் தங்கள் குடும்பம் இழந்ததாகவும் வருத்தப்பட்டிருந்தார். தங்கள் பெண்ணிற்கு இவ்வளவு ஊக்கம் தந்து உதவிய அனைத்து ஆசிரிய, ஆசிரியைகளுக்கும் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் எழுதி முடித்திருந்தார். கடிதத்தைப் படித்த தாளாளர் முதல் ஒவ்வொரு ஆசிரியரும் கண்ணீர் வடித்தனர். எந்த ஒரு தொழிலுக்கும் கிடைக்க முடியாத பெருமை இக் ‘கற்பித்தல்’ என்னும் கலைக்கு உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது. நாளைய முதன் மந்திரியோ, கலெக்டரோ, முதல்வரோ இன்றைய ஆசிரியர்கள் கையில்.

நம் இந்திய கலாச்சாரத்தின் முக்கியமான அம்சம் பாசம், பந்தம் என்பது. எத்தகைய தொழிலுக்குச் சென்றாலும் அல்லது சொந்தத் தொழில் நடத்தினாலும் சரி, அது ஒரு குடும்பம்போல் அமைந்து, ஆலமரம்போல் தழைத்து ஓங்கும். நம்மோடு இணைந்து வேலை செய்பவர் நமக்கு நெருக்கமாகி விடுவார். ‘நட்பு’ என்பது விரிந்து குடும்பங்கள், உறவு போன்று நட்பாகி விடும். பெரியவர்களாகிய நமக்கே இப்படியென்றால், பிள்ளைகள் பள்ளியில் எவ்வளவு பேர்களுடன் பழகுகிறார்கள். சிறு சிறு சண்டைகள், பிரச்னைகள் ஏற்பட்டாலும் அவ்வப்பொழுது சரியாகி விடும். எல்.கே.ஜி. முதல் 12ம் வகுப்பு வரை ஒன்றாக படித்த மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் நல்ல நண்பர்களைப் பெற்று விடுகிறார்கள். கல்லூரிப் படிப்பு வெவ்வேறு துறைகளில் பயின்றாலும், பள்ளிப் படிப்புதான் இறுதி வரை அவர்களை நண்பர்களாக்கி வைக்கிறது. கல்லூரியிலிருந்து வேண்டுமானால், மேலும் புதிய நண்பர்களைப் பெறுவார்கள்.

அதுபோல்தான் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளின் நட்பும்கூட. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான தொடர்பு என்பது ஒரு இனிமையான பந்தம். ஆசிரியர்கள் பல பேருக்கு கற்பிப்பதால், சில சமயங்களில் சில பெயர்களை மறக்க வாய்ப்புண்டு. ஆனால், எத்தனை பெரியவர்களானாலும் மாணவர்கள் கற்பித்த ஆசிரியர்களை மறக்க மாட்டார்கள். அதிலும் அவர்கள் மனதிற்குப் பிடித்தவர்களென்றால் கேட்கவே வேண்டாம். படிக்கும்பொழுது கண்டிக்கும் ஆசிரியர்களை சில பிள்ளைகளுக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், வளர்ந்து முதிர்ச்சி அடைந்தபிறகு ஏன் கண்டிப்பாக இருந்தார்கள் என்பது புரிய வரும். பழைய மாணவர் கூட்டத்தில் நிறைய பேர் சொல்வது இதுதான் -‘‘நீங்க அன்னிக்கி என்னை கண்டிச்சு, அழகாக எழுதச்சொல்லி வற்புறுத்தவில்லை என்றால் இன்று நான் இவ்வளவு பெரிய ஆளாக இருந்திருக்க மாட்டேன்’’ இதுபோல் பலவற்றைக் கேட்கும்பொழுதுதான் எத்தனை ஆனந்தம்!

அந்த ஒரு நிறைவு, ஆத்ம திருப்தி இவைதான் கற்பித்தல் என்னும் கலை செய்யும் மாயம்! நம் பிள்ளைகளாக பாவித்து, தவறுகளை திருத்தும்பொழுதுதான், அவர்களை நல்வழிப்படுத்துகிறோம் என்ற திருப்தி மட்டும் போதுமானது. கிட்டத்தட்ட இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன் என நினைக்கிறேன். ஒரு ஆசிரியை குட்டையான கை வைத்த ‘ஜாக்கெட்’ அணிந்திருந்தார். அவரைப்பற்றி சொல்லும்பொழுது யாரோ ஒரு மாணவனை வகுப்பாசிரியர் யார் என்று கேட்டிருக்கிறார்கள். அவன் சொன்ன பதில் ‘‘அந்த கையில்லாத டீச்சர்’’ என்பதுதான். இப்பொழுது அவனை திட்டவா முடியும், அல்லது கோபப்பட முடியுமா? அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். அவனுக்குத் தெரிந்த அடையாளத்தை அவர்கள் பெயர் தெரியாததால், கூறியிருக்கிறான். இத்தகைய சிறுபிள்ளைத்தனத்தை நாம் பெரிதுபடுத்தாமல், பதிலுக்கு ஆசிரியர் பெயர் அவனுக்குத் தெரியவில்லை என்பதை புரிந்து ‘இனி இப்படிச்சொல்’ என்றுதான் சொல்லித்தர வேண்டும்.

ஒருமுறை வெளியூரிலுள்ள பிரபலமான ஒரு கோயிலுக்குச் சென்றிருந்தோம். அன்று மிக முக்கியமான விசேஷ நாள் என்பதால் ரொம்பக் கூட்டம். தெருவரை வரிசை நின்றிருந்தது. அதுவும் ஸ்பெஷல் தரிசனத்திற்கே அப்படி ஒரு கூட்டம். நாங்களும் சிறப்பு தரிசனத்திற்கு டிக்கெட் எடுத்திருந்தோம். இருப்பினும், கூட்டம் நகர நகரத்தான் உள்ளே போகும் வாய்ப்பு கிடைக்கும். திடீரென ‘மிஸ், மிஸ்’ என்ற கூக்குரல். இங்குமங்கும் நோக்கினேன். கூட்டத்தின் (வரிசையின்) முன்னாலிருந்து ஒரு பையன் கையசைத்துக் கூப்பிட்டான். என் இடத்தில் மற்றவர்களை நிற்க வைத்துவிட்டு நான் சென்று அவனை சந்தித்தேன். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன், என்னிடம் படித்தவன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, அவன் நின்ற இடத்தில் எங்களை நிற்க வைத்துவிட்டு, வரிசையின் கடைசியில் நாங்கள் நின்ற இடத்திற்கு அவன் சென்றான். தரிசனம் முடித்து நாங்கள் வெளியில் வந்த பிறகும் அவன் வரிசையில் நின்றிருந்தான். இதயப்பூர்வமாக அவனை வாழ்த்தினோம். என்றோ கற்பித்தாலும், அதன் பலன் என்றும் உண்டு. கற்பித்ததின் பரிசு - கலைக்குப் பரிசு!

தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீநிவாஸன்

Related Stories: