கருவில் இருக்கும் குழந்தைக்கும் இசை புரியும்!

நன்றி குங்குமம் தோழி

‘‘நானும் நந்தினியும் இசைத்துறையைப் பொறுத்தவரை நாலாவது தலைமுறை. எங்க முதல் குரு என் தாத்தா லட்சுமி நாராயணன் அவர்கள் தான். அவர் வயலின் வித்வான் மட்மல்ல பாட்டும் பாடுவார். அவருக்கு பின் எங்க அம்மா சுப்புலட்சுமி முத்துசுவாமி தாத்தாவின் பொறுப்பை ஏத்துக்கிட்டாங்க. அவங்களும் வயலின் வித்வான். நிறைய கச்சேரிகள் எல்லாம் செய்து இருக்காங்க’’ என்று பேசத் துவங்கினார் மூத்தவரான லலிதா.

‘‘இசைக் குடும்பம் என்பதால், எங்க வீட்டில் 24 மணி நேரமும் இசை ஒலிச்சிட்டே இருக்a. ஒரு பக்கம் கச்சேரிக்கான பயிற்சி எடுத்துக் கொண்டு இருப்பாங்க. மறுபக்கம் வயலின் அல்லது பாட்டு வகுப்பு நடக்கும். அதனால நானும் நந்தினியும் குழந்தையில் இருந்தே ஏன் கருவில் இருக்கும் போதே இந்த இசையைக் கேட்டு தான் வளர்ந்தோம்ன்னு சொல்லணும். அந்த காலத்தில் அம்மா நிறைய கச்சேரிக்கு போவாங்க. பெரிய பெரிய வித்வான்களுக்கு எல்லாம் அம்மா வாசித்து இருக்காங்க. அப்ப நாங்க சின்ன குழந்தைங்க. அம்மா போகும் எல்லா கச்சேரிக்கும் எங்களையும் அழைச்சிட்டு போவாங்க. அம்மாவும் தாத்தாவிடம் தான் கத்துக்கிட்டாங்க.

அதன் பிறகு சங்கீத பிதாமகன் செம்மங்குடி நிவாஸ் அவர்களிடம் சிக்ஷை எடுத்து இருக்காங்க. அவரிடம் பயிற்சிக்கு போன போது அம்மா கர்ப்பமாக இருந்தாங்க. அவர் சொல்வாராம், ‘‘கர்ப்பமா இருக்கேன்னு பயிற்சிக்கு வராம இருந்திடாத. உன் கருவில் இருக்கும் குழந்தைக்கும் இசை புரியும்’’ன்னு சொல்வாராம். அதனால் அம்மா அந்த நேரத்திலேயும் காலையில் எழுந்து சிரமம் பார்க்காம பயிற்சிக்கு போவாங்களாம். எங்களுக்கு இசை மேல ஆர்வம் ஏற்பட அதுவும் ஒரு காரணமா இருக்கலாம். சின்ன வயசில் அம்மா, வீட்டில் பாட்டு பயிற்சி எடுக்கும் போது நாங்களும் கூட சேர்ந்து எங்க மழலை மொழியில் பாடுவோம். அதே போல் முருங்கைக்காய் மற்றும் கரண்டி வைத்துக் கொண்டு வயலின் போல் வாசிப்போம். எங்களின் ஆர்வத்தை பார்த்து, அம்மா எங்களுக்கு இரண்டு வயசில் இருந்தே வாய்ப்பாட்டு மற்றும் வயலின் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்படித்தான் எங்களின் இசை பயிற்சி துவங்கியதுன்னு சொல்லலாம்’’ என்றவரை தொடர்ந்தார் நந்தினி.

‘‘அம்மாவை பொறுத்தவரை நாங்க இசை கத்துக்கணும். ஆனால் அப்பாவுக்கோ இசை ஒரு பக்கம் இருந்தாலும் படிப்பும் அவசியம்ன்னு நினைச்சார். அதனால விடுமுறை நாட்களின் போது எங்களை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலெயன்ஸ் பிரான்சை மையத்தில் பிரஞ்ச் மொழி கத்துக்க அனுப்பினார். காரணம் தமிழ்நாட்டில் எங்கு போனாலும், தமிழ் பேசலாம். அதுவே வெளிநாட்டிற்கு போகும் போது, அவங்க அங்க பேசும் மொழியை தெரிந்துக் கொள்வது அவசியம்ன்னு நினைச்சார். லலிதாவும் நானும் பிரஞ்ச் கத்துக்கிட்டோம். நான் ஜெர்மன் மொழியும் சேர்த்து கத்துக்கிட்டேன்’’ என்றவர் வயலின் போட்டி ஒன்றில் இருவரும் முதல் பரிசை வென்றுள்ளனர்.

‘‘அந்த சம்பவம் இன்றுமே எங்க இருவரின் மனதிலும் ரொம்ப ஆழமாக பதிந்த விஷயம்’’ என்று பழைய நினைவுகளை அசைப்போட்டார் நந்தினி. ‘‘காஞ்சி காமக்கோடி பீடம் சென்னையில் மாநில அளவிலான ஒரு போட்டியை நடத்தினாங்க. நாங்க இருவரும் அதில் முதல் பரிசை பெற்றோம். பரிசு கிடைச்சதால அம்மா காஞ்சி பெரியவரை தரிசனம் செய்திட்டு வரலாம்ன்னு சொன்னாங்க. நாங்க போன போது அவர் எங்களை வாசித்து காண்பிக்க சொன்னார். அதன் பிறகு ஆசியும் வழங்கினார். அப்பா அம்மா நாங்க போட்டியில் ஜெயித்த விவரத்தை சொன்னாங்க. எங்களின் தக்கப்பதக்கத்தை பார்த்த ஜெயந்திரர், அதில் குங்குமம் வைத்தது மட்டும் இல்லாமல் ஏப்ரலுக்கு பிறகு கச்சேரி எல்லாம் செய்ய ஆரம்பிச்சிடுவீங்கன்னு வாழ்த்தினார்.

ஆனா அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தாத்தா முன்னிலையில்அரங்கேற்றம் செய்த பிறகு தான் மற்றது எல்லாம்ன்னு விரும்பினாங்க. ஜெயந்திரர் சொன்னது போல, எங்களுக்கு கச்சேரிக்கான வாய்ப்பும் வந்தது. அதுவும் நாங்க பிரஞ்ச் படிக்கும் பயிற்சி பள்ளியில். எங்க பயிற்சி மையத்திற்கு பிரான்ஸ் நாட்டு பாடகர் பாட வருவதால், அவருக்கு நம் கலாச்சார இசையை காண்பிக்க விரும்பினார் எங்க மையத்தின் இயக்குனர். எங்களை வாசிக்க சொன்ன போது, அம்மாவுக்கு ஒரு பக்கம் தயக்கம் இருந்ததால், தாத்தாவிடம் கேட்டார். அவரும் ஆசிர்வதிக்க, பிள்ளையார் கோயிலில் முதல் கச்சேரி செய்திட்டு எங்க பள்ளியில் கச்சேரி செய்தோம். அதன் பிறகு இன்று வரை இங்கு மட்டும் இல்லை வெளிநாட்டிலும் கச்சேரிகள் செய்து கொண்டு இருக்கிறோம்’’ என்றவர்கள் வெஸ்டர்ன் கிளாசிக்கள் இசையும் பயின்றுள்ளனர்.

‘‘எங்களின் பக்க பலமே அம்மாவும் அப்பாவும் தான்’’ என்று பேச துவங்கினார் லலிதா. ‘‘இசையில் பல வகை இருக்கு. கர்நாடக சங்கீதம் தான் அடித்தளம். அதனால் வயலின் இசையைப் பற்றி முழுமையா தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், மற்ற இசை குறித்த ஞானமும் இருக்கணும். அப்பதான் ஒவ்வொரு இசையும் எவ்வாறு வேறுபடுகிறதுன்னு தெரியும். லண்டன் டிரினிட்டி கல்லூரியில் வெஸ்டர்ன் இசையை கத்துக்கிட்டோம். அடுத்து உலக இசையை நான் அமெரிக்காவிலும், நந்தினி லண்டனிலும் சென்று படிச்சோம். உலக இசை என்பது பல்வேறு நாடுகளின் இசை வடிவங்கள். அமெரிக்காவில் ஜாஸ், யுரோப்பில் நாட்டுப்புற இசைன்னு... ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு இசை வடிவங்கள் உள்ளது. அதை எல்லாம் கற்றுக் கொண்டோம். காரணம் அப்பாவிற்கு எல்லா இசைகளையும் ஒரே மேடையில் கொண்டு வரவேண்டும் என்பது ஆசை’’ என்றவர்கள் தெரியாத இசையும் இதன் மூலம் அறிந்துக் கொண்டுள்ளனர்.

‘‘எல்லா இசையையும் பயிலும் போது, அதை கர்நாடக சங்கீத இசையோடு ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்தோம். கர்நாடக கச்சேரி மட்டும் இல்லாமல் வயலினில் ப்யூஷனும் சேர்த்து இணைக்க ஆரம்பிச்சோம். எங்க ஆல்பமான, ‘‘ரெவலேஷன்ஸ் அண்ட் திங்கிங் ஆப் யு’’ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அது மட்டுமில்லை சுனாமி, கார்கில் போர், சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் போன்றவற்றுக்கு நிதித் திரட்டவும் நாங்க கச்சேரி செய்து இருக்கோம். மேற்கத்திய இசை கலைஞர்களுடன் மட்டும் இல்லாமல் வட இந்திய இசைக் கலைஞர்களுடன் சேர்ந்தும் நாங்க கச்சேரி செய்து இருக்கோம். வயலினில் இது போல் பல இசைகளுடன் இணைந்து கச்சேரி செய்த முதல் பெண் வயலின் சகோதரிகள் என்ற பெருமை எங்களுக்குண்டு.

பல உலகளாவிய இசைக் கருவிகளை இணைத்து ப்யூஷன் இசை அமைக்கவும் கற்றுக் கொண்டோம். பியூஷனுக்கு தனி இசை வடிவம் கிடையாது. பல இசைகளை ஒன்றாக சேர்க்கும் போது, அதற்கென ஒரு அளவுகோள் இருக்கும். அதை நாம சரியா புரிந்து கொள்ளணும். இல்லைன்னா மொத்த இசையும் சிதைந்திடும். கர்நாடக சங்கீதம் பொறுத்தவரை வாய்ப்பாடு அவசியம். முதல்ல வாய்ப்பாடு கத்துக்கணும். அதை அப்படியே வாத்தியத்தில் கொண்டு வரணும். வாசிக்கும் போது பாடுவது போல் இருக்கணும். கர்நாடக சங்கீதம் பொறுத்தவரை எல்லா இசை தொகுப்புமே வார்த்தைகள் தான். வார்த்தைகள் மூலம் தான் இசையின் அளவை நீட்டவோ குறைக்கவோ முடியும். காரணம் வயலின் பொறுத்தவரை பக்க வாத்தியமாக தான் இருக்கும். நாங்க அதை ஒரு தனி வாத்தியமா கொண்டு வர நினைச்சோம், அதை கொஞ்சம் கொஞ்சமாக சாத்தியப்படுத்தி வருகிறோம். காரணம் வெளிநாடுகளில் வயலினை கிங் ஆப் இன்ஸ்ட்ருமென்ட்ன்னு சொல்வாங்க.

வயலின் இசை மேல் ரொம்ப மரியாதை வச்சிருக்காங்க. அதனால நாங்க வெளிநாட்டில் பெரும்பாலும் வயலின் கச்சேரி மட்டுமே தனியா செய்வோம். அதை மாஸ்டர் செய்வது ரொம்ப கடினம். காதால கேட்டு வாசிக்கணும். வாய்ப்பாட்டா என்ன செய்ய முடியுமோ அதை வயலினில் கொண்டு வரமுடியும். இந்த இசைக் கருவியில் தான் இரண்டு ஸ்வரங்களை சேர்த்து வாசிக்கலாம்’’ என்றவரை தொடர்ந்தார் இளைய சகோதரி. ‘‘வெளிநாட்டைப் பொறுத்தவரை இந்திய இசை என்றால் ஹிந்துஸ்தான் இசை வாசிக்க கூடிய சித்தார் மற்றும் தபேலா தான் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். மற்ற வாத்தியங்கள் மற்றும் கர்நாடக சங்கீதம் குறித்து அவர்களுக்கு தெரியவில்லை. அதனால் நாங்க இது போல் தெரியாத நாடுகளுக்கு சென்று அங்கு நம்ம கர்நாடக இசை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இன்னும் சொல்லப்போனால் ‘சிட்டி ஆப் வயலின்ஸ்’ என்று அழைக்கப்படும் கிமோனா என்னும் நகரத்தில் தான் பெஸ்ட் வயலின்களை தயாரிக்கிறாங்க.

இங்குள்ளவர்கள் தலைமுறை தலைமுறையா இதை செய்து கொண்டு இருக்காங்க. அங்கு சென்று கர்நாடக இசையை அறிமுகம் செய்தோம். அதே போல் காந்திஜி அவர்களின் 150வது பிறந்தநாளுக்காக போப் முன்னிலையில் கச்சேரி செய்தோம். அங்கும் அன்று தான் முதல் முறையாக கர்நாடக சங்கீதம் எங்கள் மூலமாக அரங்கேறியதுன்னு நினைக்கும் போதே ரொம்பவே சந்தோஷமா இருக்கு. ஒவ்வொரு நாடுகளுக்கு செல்லும் போது கர்நாடக இசை என்றால் என்ன? ராகம், தாளம், பல்லவி, கமக்கம்... என அனைத்து குறித்தும் விளக்கம் அளிப்போம். அதன் பிறகு தான் கச்சேரியை ஆரம்பிப்போம். அவங்களும் முழு கச்சேரியும் ரசிப்பாங்க. எங்களுக்கும் தென்னிந்திய இசையை அங்கு கொண்டு போய் சேர்க்க முடிகிறதுன்னு ஒரு திருப்தி’’ என்ற நந்தினி வெளிநாட்டில் கச்சேரி செய்த போது ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

‘‘ஒரு முறை நார்வே சர்வதேச இசை திருவிழாவில் வாசித்தோம். அப்போது, பல நாட்டு இசைக்கலைஞர்களுடன் இணைந்து ஒரு ப்யூஷன் தரமுடியுமான்னு கேட்டாங்க. கல்யாணி ராகத்தை கம்போஸ் செய்து அதை அவங்க எல்லாரையும் வாசிக்க வைத்தோம். அந்த திருவிழாவில் இசைக்கான பரேட் நடக்கும். அதில் இந்திய கொடியை ஏந்தி நாங்க இருவரும் சென்றோம். நம்ம தாய்நாட்டுக் கொடியை கையில் கொண்டு போன போது அவ்வளவு பெருமையா இருந்தது. அது ஒரு உணர்வு. தற்போது நாங்க பயின்ற கலை எங்களோடு அழிந்து விடக்கூடாதுன்னு பயிற்சி அளித்து வருகிறோம். இந்த இசையை அடுத்தடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பது தான் எங்களின் எண்ணம்’’ என்ற சகோதரிகள் கலைமாமணி, நாதகலா விபஞ்சி மற்றும் சர்வதேச அளவிலான விருதுகள் பல குவித்துள்ளனர்.

தொகுப்பு: ஷம்ரிதி

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: