×

சிலம்பம் கற்று உனக்கான வருமானத்தை ஈட்டு!

நன்றி குங்குமம் தோழி

இளம் பனிப்பொழுதுடன் ஓர் இனிய விடியல். இருள் அகலாமலும் லேசான சூரிய ஒளிக்கதிர் பின்னணியில் வெளிநாட்டுப் பறவைகள் ஆக்கிரமித்த  வேளச்சேரி ஏரிக்கரையிலிருந்து பறவைகள் கீச்சிடும் சத்தத்தை தாண்டி காற்றைக் கிழித்துக் கொண்டு அந்த சத்தம் நம் செவிகளுக்குள் ஒலித்தது. ஆர்வத்துடன் அருகில் சென்ற நமக்கு ஆச்சரியம் காத்திருந்தது. இளம் பெண் ஒருவர் இடது கையில் லாவகமாக சிலம்பத்தை சுழன்றுக்  கொண்டிருந்தார். அவரைப் போல் இருபது பேர் உடன் கம்பினை சுற்றி பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர். பயிற்சி முடிந்து புறப்படத் தயாரான  ஜெயபார்வதி நம்முடன் அவரின் அனுபவங்களை பேசத்துவங்கினார்.

‘‘தமிழர்களின் பாரம்பரியமான விளையாட்டு களில் வீர விளையாட்டு மட்டுமல்லாமல், உயிர் மூச்சாக மதித்த விளையாட்டு சிலம்பம். எங்கள்  குடும்பத்தில் ஆண் வாரிசுகளுக்கு மட்டும்தான் சிலம்பம் சொல்லித் தருவாங்க. அவங்க தான் ஆசானாகவும் இருப்பாங்க. அந்த மரபினை என் தாய்  அல்லிராணி தான் உடைத்தெறிந்தார். ஆண்களுக்கு பயிற்றுவிக்கப்பட்ட சிலம்பக்கலையை ஏகலைவியாக எனது அம்மா கற்றுத் தேர்ந்தார். எனினும்,  அந்த காலத்தில் விதிக்கப்பட்ட சம்பிரதாயங்களைக் கடந்து அவரால் முன்னேற முடியவில்லை. அவரின் இந்த செயலைக் கண்ட உறவினர்கள்  அவரை உதறித்தள்ளினார்கள். ஐந்து வயதான என்னை கையில் பிடித்துக் கொண்டு அம்மா தன் வாழ்க்கைப் போராட்டத்தைத் தொடங்கினார்.  நமக்குத்தான் வாய்க்கவில்லை, மகளையாவது ஒரு நல்ல நிலைக்கு உருவாக்குவோம் என நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த என்னை  தாம்பரத்தில் உள்ள ஒரு சிலம்பம் பயிற்சி கூடத்திற்கு அனுப்பினார்.

ரத்தத்தில் ஊறியதாலோ என்னவோ அப்போது தொடங்கி சிலம்பம் மீது எனக்கு அதீத ஆர்வம் ஏற்பட்டது. ஆசான்களே வியக்கும் அளவில்  கற்றுக்கொண்டேன். கூடவே, யோகா பயிற்சியும் தொடர்ந்தது’’ என்றவர் தன் 17 வயதிலேயே சிலம்ப பயிற்சி அளிக்க ஆரம்பித்துள்ளார். ‘‘ஒரு பக்கம்  பள்ளிப் படிப்பு மறுபக்கம் சிலம்ப பயிற்சி என நாட்கள் கடந்தன. நானும் என்னுடைய பன்னிரெண்டாம் வகுப்பை வெற்றிகரமாக முடித்தேன்.  எட்டாண்டு நான் எடுத்துக் கொண்ட தீவிர பயிற்சியின் காரணமாக 17 வயதிலேயே சிலம்ப ஆசானானேன். காரணம் அம்மா என்னை மிகவும்  கஷ்டப்பட்டு தான் படிக்க வைத்தார். அதன் பிறகு அம்மாவுக்கும் சொல்லிக்கொள்ளும் அளவில் வருமானம் இல்லை. எனக்கோ படிப்பின் மீது தீராத  காதல் இருந்தது.

துணிச்சலோடு பி.காம். படிக்க கல்லூரியில் சேர்த்துவிட்டேன். ஆனால் கட்டணம் எவ்வாறு செலுத்துவது என்று கவலையாக இருந்தது. அம்மாவையும்  எனக்கு தொந்தரவு செய்ய மனமில்லை. அந்த சமயத்தில் தான்... அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு சிலம்பக்கலையை சொல்லிக்கொடுக்கலாம் என  விளையாட்டாகத் தொடங்கினேன். ஆரம்பத்தில் ஒரு பத்து பேர் சேர்ந்தார்கள். அவர்களுக்கு இந்த கலை மேல் பிடிப்பு ஏற்பட, அவர்கள் மூலமாக பலர்  சேரத் துவங்கினார்கள். என்னுடைய கல்விக் கட்டணம் மட்டும் இல்லாமல் குடும்பத்திற்கும் உதவியாக இருந்தது.

இதனிடையே தாம்பரத்தில் நான் பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்தேன். அங்கு பேருந்தில் தான் செல்ல வேண்டும். மஞ்சள் நிற போர்டு போட்ட  பேருந்தில் கட்டண விலை அதிகம் என்பதால், சாதாரண பேருந்துக்காக காத்திருந்து தான் பயணிப்பேன். இதற்காக மாலை நான்கு மணிக்கு துவங்கும்  பயிற்சிக்கு ஒரு மணிக்கே பேருந்து நிலையத்தில் சாதாரண கட்டண பஸ்சுக்காக காத்திருப்பேன். சிலம்பம் எனக்குள் ஏற்படுத்திய மாற்றத்தை  வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மனதளவில் தீவிர வைராக்கியத்தை ஏற்படுத்தியது. இந்த பாரம்பரியக் கலை அழிந்துவிடக்கூடாது என்னும்  உத்வேகத்தில் மிக்க உற்சாகத்துடன் எனது தாயாரின் பெயரில் ராணி அகாடெமி என்ற பயிற்சி மையத்தை தொடங்கினேன்’’ என்றவரின் பயிற்சி  கூடம் சென்னையில் ஏழு கிளைகளாக பரந்து விரிந்துள்ளது.

பயிற்சி கூடம் ஒரு பக்கம்... பட்டப்படிப்பு மறுபக்கம் என்று இந்த 24 வயதில் சிலம்பம் மூலமாக மாதம் முப்பதாயிரம் ரூபாய் வருமானம் ஈட்டி  வருகிறார். ‘‘நான் பயிற்சி அளிப்பது மட்டும் இல்லாமல் சிலம்பம் மாஸ்டர்களையும் வேலைக்கு நியமித்திருக்கிறேன். சிலம்பம் மட்டும் இல்லாமல்  யோகா பயிற்சியும் அளித்து வருகிறேன். யோகா மனதை ஒருமுகப்படுத்தி உடல் ஆரோக்கியம் அளித்தாலும் சிலம்பம் அதற்கும் ஒருபடி மேலே  என்று சொல்லலாம். சிலம்பத்தை நாம் இரண்டு கைகள் பயன்படுத்தி விளையாடுவதால், உடலில் உள்ள நாடி நரம்புகள் அத்தனையும் அற்புதமாகத்  தூண்ட உதவுகிறது. கடந்த பதினாறு ஆண்டுகளில் டி.வி பார்க்க கூட நேரமில்லை, விருப்பமுமில்லை. வீடு, படிப்பு, காலை மற்றும் மாலை பயிற்சி  இதுவே நான் கடந்து வந்த வெற்றிப் பாதை.

இளம் வயதிற்கே உரிய மகிழ்ச்சியைத் தொலைத்துவிட்டேன் என்றாலும், இந்த வயதில் என்னால் ஒரு குடும்பத்தை வழிநடத்த சம்பாதிக்க முடிகிறதே  என்று நினைக்கும் போது பெருமையாக உள்ளது’’ என்றவர் 14 வயதிற்குற்பட்டோர் பிரிவில் மாவட்ட விருதுகள், 18 வயதில் சீனியர் லெவலில்  மாநில விருதுகள், தேசிய அளவில் விருது என நூறுக்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றுள்ளார். சிலம்ப பயிற்சி மட்டும் இல்லாமல் ஜெயபார்வதிக்கு  ஓவியம் தீட்டுவதிலும் ஆர்வமாம். ‘‘நான் ஓவியப் பயிற்சி வகுப்புகளும் நடத்தி வருகிறேன். சிறுவர்களுக்கு டியூஷனும் எடுக்கிறேன். ஆண்டு  இறுதிக்குள் எனது மாத வருமானம் ஒரு லட்சமாக இருக்க வேண்டும் எனும் குறிக்கோளுடன் பெருங்குடியில் ஒரு கிளை தொடங்கியுள்ளேன். இந்த  சாதனை மொத்தத்துக்கும் காரணம் எனது தாய். அவர்களின் தைரியம் தான் என்னை இன்றும் வழிநடத்தி செல்கிறது.

மறுபடியும் உறுதியாகச் சொல்கிறேன் இந்தக் கலைகளைக் கற்பதால் தன்னம்பிக்கை, பிரச்னைகளை எதிர்கொள்ளும் துணிச்சல், தற்காப்பு என  பெண்கள் வியத்தகு மாற்றங்களை எட்ட முடியும். புடவைக் கட்டிய ஒரு பெண் ஓட வேண்டும் என ஒரு நிலை வரும்போது ஏற்படும் கூச்சத்தை  சிலம்பக் கலை முற்றிலும் தகர்க்கும், தடுக்கிவிழாமல் தடையைத் தாண்டும் வேகத்துடன் புடவையுடன் ஓட முடியும் எனும் வைராக்கியத்தை  ஏற்படுத்தும். என்னிடம் பயிற்சிக்கு வரும் பெண்களும் பல போட்டிகளில் பங்கு பெற்று விருதுகளை குவித்து வருகிறார்கள். தொழில்துறையில்  மட்டுமே பெண்களால் மாற்றம் ஏற்படுத்த முடியும் என்ற கொள்கைகளிலிருந்து விடுபட்டு நம் பாரம்பரியக் கலை மூலமும் வருமானம் ஈட்ட முடியும்  என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதே எனது விருப்பம்’’ என்ற ஜெயபார்வதி சிலம்பத்தில் பிளாக் டான் பட்டமும், விளையாட்டு  துறையில் யுனிவர்சிட்டியில் சான்றிதழும் பெற்றவர்.

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

Tags :
× RELATED தமிழகத்தின் முதல் பெண் கட்டைக்கூத்து கலைஞர்!