டிரம்புக்கு கோயில் கட்டி விரதம் இருக்கும் இளைஞர்

நன்றி குங்குமம் தோழி

திருவள்ளுவருக்கு கோயில் இருக்கு, தமிழ்த்தாய்க்கு கோயில் இருக்கு, ஏன் குஷ்புக்கு கூட கோயில் கட்டியிருக்கோம்... இவர்களின் வரிசையில்  அமெரிக்க அதிபர் டிரம்பும் இடம் பெற்று இருக்கிறார். தெலங்கானாவின், ஜங்கோன் மாவட்டம், கொன்னே கிராமத்தை சேர்ந்தவர் புஷ்ஷா கிருஷ்ணா.  இவருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மேல் அலாதி பிரியம். அந்த அன்பினை வெளிப்படுத்துவதற்காகவே  அவருக்கு கோயில் கட்டி, கடவுளாக மதித்து  தினமும் வழிபட்டு வருகிறார். இதற்காக அவர் 2 லட்சம் ரூபாய் செலவில் டிரம்பின் சிலை அமைத்து தினமும் பூஜை செய்து வழிபட்டு வருகிறார். டிரம்பிற்கு கோயில் கட்ட என்ன காரணம் என்று அவரிடம் கேட்ட போது.. ‘‘எனது கனவில் ஒரு நாள் டிரம்ப் வந்து கோயில் கட்ட சொன்னார்.  அதனால் கட்டினேன்’’ என்று கூறும் இவர் தன் வீட்டின் முகப்பில் உள்ள டிரம்பின் ஆறு அடி உயர சிலைக்கு தினமும் குங்குமம் வைத்து வழிபாடு  செய்து வருகிறார். இப்போதெல்லாம் அவரை யாரும் புஷ்ஷா கிருஷ்ணா என அழைப்பதில்லை.

டிரம்ப் கிருஷ்ணா என்றால்தான் கொன்னே கிராம மக்களுக்கு அடையாளம் சொல்ல தெரிகிறது. டிரம்ப்  இந்தியாவுக்கு வரப்போவதை அறிந்து அவரை  கடவுளாக கருதி வரவேற்பு போஸ்டரும் வைத்திருந்தார். தினமும் டிரம்ப் என்ற பெயர் பொறித்த டி- சர்ட்டைதான் அணிகிறார். அவரின் செல்போன்  கவர் முதல் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்  கணக்கு புரபைல் பிக்சர் வரை டிரம்பின் படமே  திரும்பிய திசையெல்லாம் காட்சியளிக்கிறது. டிரம்ப்  இந்தியாவுக்கு வரும்போது அவரை சந்திக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார் கிருஷ்ணா. இதை எல்லாம்  விட உச்சகட்டமாக டிரம்ப் நலமுடன் வாழவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வழிபாடு செய்கிறார். இதை  எல்லாம் ஏன் செய்கிறீர்கள் என கேட்டபோது, ‘‘இந்தியா -அமெரிக்கா உறவு வலுப்படவேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம்’’ என்ற கிருஷ்ணா  டிரம்பை வாழ்நாளில் ஒரு முறையாவது  சந்தித்திட வேண்டும் என்று எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கிறார்.

தொகுப்பு: கோமதி பாஸ்கரன்

Related Stories: