×

செஞ்சுரி காதல்!

நன்றி குங்குமம் தோழி

அந்த பாட்டிக்கு 105 வயது. அவரது கணவருக்கு 106. இந்த வயதிலும் இணைபிரியாது வாழ்கின்றனர் என்பது அமெரிக்கா போன்ற நாடுகளில் மிக அதிசயமான நிகழ்வு. குழந்தை பெற்ற பின் திருமணம், திருமணம் செய்யாமலே இணைந்து வாழும் தம்பதி என்ற கலாச்சாரத்தில் கொடிகட்டி பறக்கும் அமெரிக்காவில் இது போல் அன்யோன்யமாக வாழும் இந்த ஜோடி 80 வருடம் இன்றும் அதே காதலுடன் வாழ்ந்து வருகிறார்கள். திருமணம் செய்து கொண்டு நீண்ட நாட்கள் ஜோடியாக வாழும் தம்பதி என்ற முறையில் இவர்கள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர். இந்த தம்பதியின் பெயர் ஜான் ஹென்டர்சன் - கரோலோட்டே. தற்போது வயதில் சதம் அடித்துள்ள இந்த தம்பதி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி தங்களது 80வது திருமண நாளை கொண்டாடியுள்ளனர். இவர்கள் இணைந்து வாழ்ந்து 85 ஆண்டுகள் ஆகிறது. முதல் 5 ஆண்டுகள் இருவரும் திருமணம் செய்யாமல் கணவன்-மனைவியாக வாழ்ந்தனர்.

பின்னர் கடந்த 1931ம் ஆண்டு ‘மனைவி வற்புறுத்தியதால் திருமணம் செய்துகொண்டேன்’ என்கிறார் புன்னகை தவழும் முகத்துடன் ஜான். ஜானுடன் மலர்ந்த காதல் குறித்து கரோலோட்டே கூறுகையில், ‘‘1934ம் ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது விலங்கியல் வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது என் பின்னால் இருந்த ஜான் என்னை காதலுடன் பார்த்தார். அவரின் அந்த பார்வைக்கே அந்த நிமிடமே நான் என் மனதை பறிகொடுத்தேன்’’ என்றார் வெட்கம் கலந்த புன்னகையுடன் கரோலோட்டே.

1912ம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள போர்ட் ஒர்த்தில் ஜான் பிறந்தார். கரோலோட்டே லோவாவில் 1914ல் பிறந்தார். கரோலோட்டே ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். ஜான் கால்பந்து வீரர். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை என்றாலும் இருவருக்கும் இடையே இருக்கும் காதலுக்கு எந்த ஒரு குறையும் இல்லை. குழந்தை இல்லை என்ற காரணத்தால் இருவரும் தற்போது முதியோர் இல்லத்தில் வசித்து வருகின்றனர். அவர்களின் நீண்ட ஆயுள் ரகசியம் என்ன என்று கேட்டபோது, ‘சரியான நேரத்துக்கு சாப்பிடுவோம். அதிகம் மது குடிக்கமாட்டோம்’ என்றனர் இருவரும் கோரசாக.

தொகுப்பு: கோமதி பாஸ்கரன்

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!