×

காதல் கண்ணாமூச்சி

நன்றி குங்குமம் தோழி

இந்த வயதில் உடல் ரீதியாய் பல மாற்றங்கள் நிகழ.. உள்ளே என்னதான் நடக்கிறது…? எதுவும் புரியாத இந்த வயதில் ஏன் காதல் வலையில் இளசுகள் விழுகிறார்கள்…? காதலில் விழுந்த இவர்களை எப்படிக் கையாள்வது… இந்தப் பருவத்தை எப்படி அவர்களுக்குப் புரிய வைப்பது  என்கிற  கேள்விகளுடன் பிரபல தனியார் கல்லூரியின் உயிர்த்-தொழில்நுட்பத்துறை (bio technology) பேராசிரியர் முனைவர் தி.ஞா.நித்யாவைச் சந்தித்தபோது… தங்களது டீன் ஏஜ் பருவத்தில் இருபாலருமே உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உள்ளேயும் வெளியேயும் சந்திக்கும் மிகப் பெரும் மாற்றங்களே இதற்கு மிக முக்கியக் காரணம். காதலுக்கு கண்ணில்லை என்கிற அறிவுரை எல்லாம் இவர்களிடத்தில் செல்லுபடியாகாது.  காரணம் இந்தப் பருவத்தில் மூன்று விதமான மாற்றங்களை இவர்கள் சந்திப்பர்.

முதலாவது மாற்றம் காதல் அல்லது  காமம்(lust), இரண்டாவது எதிர்பாலின ஈர்ப்பு(attraction).  மூன்றாவது அன்பு(attachment). இவை மூன்று மாற்றங்களுமே பருவ வயதினரிடம் ஒருங்கிணைந்து ஒன்றாக வரும். இதைத்தான் காதல் வயப்பட்டு என்கிறோம். ஒவ்வொரு  மாற்றம்  நிகழும் போதும் நம் கண்களுக்கு புலப்படாத ஹார்மோன்கள் உடலில் சுரந்து ரத்தத்தில் கலக்கின்றன. இவை பாலினம் சார்ந்த ஹார்மோன்கள். இவை உச்சந்தலையில் தொடங்கி, இனப்பெருக்க உறுப்புகளில் கலந்து, பிறப்புறுப்புகளின் திசுக்களை உசுப்பேற்றி உடலில் மாயாஜாலங்களைச் செய்ய ஆரம்பிக்கின்றன. விளைவு, இனப்பெருக்க உறுப்பின் செல்கள் வீரியம் பெற்று, பல்கிப் பெருகுவதோடு.. பெண் மாதவிடாய் சுழற்சிக்கு ஆளாகி கட்டுப்பாட்டு வளையத்திற்குள் வருகிறாள். ஆண்கள் பெண்கள் மீது ஈர்ப்புக் கொண்டு கவனம் செலுத்தத் துவங்குகிறார்கள். காதல், கல்யாணம், தாம்பத்யம் பற்றிய கற்பனைகள் மனதில் றெக்கை கட்டிப் பறக்கும் வாலிப பருவம் இது. இந்தப் பருவத்தினரை நாம் ரொம்பவே கவனமாகக் கையாள வேண்டும்.

காதல் அல்லது காமம் என்கிற உணர்வு தோன்ற மூளையில் சுரக்கும் ஹைபோதலமஸ்(hypothalamus) ஹார்மோன் சுரப்பியே மிக முக்கியக் காரணம். இந்த சுரப்பியானது ஆண் என்றால் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோனையும், பெண் என்றால் ஈஸ்ட்ரோஜன் ஹார் மோனையும் சுரக்க வைக்கும். இதனாலேயே இவர்களுக்கு உடல் தேவை பல மடங்கு அதிகரித்து, எதிர்பாலின ஈர்ப்பிற்கு ஆளாகுகிறார்கள். இந்த ஹார்மோனின் அளவு பெண் என்றால் 6 மடங்கும். அதுவே ஆண் என்றால 20 மடங்கும் அதிகமாகிறது. இதனால் பெண்களின் மீது ஆண்களுக்கு இயல்பாகவே ஈர்ப்பு வருகிறது. வாலிப வயதில் இருக்கும் ஆண்கள், பெண்களின் பின்னால் சுத்த ஆரம்பிக்கிறார்கள்.

காதல் வயப்பட்டவர்களிடத்தில் ஒருவித எக்ஸைட்மென்ட் உணர்வு  எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். தன் காதலன் அல்லது காதலியை பார்க்கச் செல்வதில் இவர்களுக்கு சோர்வு என்பதே இல்லாமல் எனர்ஜியின் லெவல் பலமடங்கு அதிகமாய் இருக்கும். எதற்கும் தயாராகத் தொடங்குவார்கள். இவர்களை எப்போதும் ஆக்டிவாக வைத்திருக்கும் இந்த ஈர்ப்பு உணர்வுக்கு டோபமைன் (dopamine), நார்அட்ரனலின்(noradrenaline), செரட்டோனின் (serotonin) எனும் மூன்றுவிதமான ஹார்மோன் சுரப்பியே காரணம். நாம் தெருவில் நடக்கும்போது கால் அடிபட்டு இருந்தாலும், நாய் துரத்தினால் வலி தெரியாமலே வேகமாக ஓடத் தொடங்குவோம். காரணம் டோபமைன் மற்றும் நார்அட்ரனலின் சுரப்பியே. காதலிலும் இதே நிலைதான். எதைப் பற்றியும் கவலை தெரியாது. இதில் முதல் இரண்டு சுரப்பிகளும் குறிப்பிட்ட பருவம் வரை இருவரையும் ரொம்பவே ஆக்டிவாக வைத்திருக்கும். இதில் டோபமைன் சுரப்பியானது நீரோ டிரான்ஸ்மிட்டராய் செயல்படுகிறது.

காதல் ஒரு நோய் எனச் சொல்லும் அளவுக்கு செரட்டோனின் சுரப்பியும் தன் பங்குக்கு அதிக அளவில் சுரக்கும். இது காதலில் விழுந்தவர்களை ஹேப்பியாகவே வைத்திருக்கும். சுருக்கமாய் இதை ஹேப்பி கெமிக்கல் என்பர். அதே நேரம் காதலில் முறிவு ஏற்பட்டுவிட்டால், குறைவாய் சுரக்கத் தொடங்கும். அதனாலே காதலைப் பற்றியே எப்போதும் சிந்திக்கிற உணர்வு ரீதியான மாற்றங்களை இருவரும் சந்திக்க நேர்கிறது. ஆங்கிலத்தில் இதை obsessive composing disorder என்பர். அதாவது வெறித்தனமான காதல்(obsessive love). இதனால்தான் சிலர் காதல் என்கிற உணர்வைத் தாண்டி சிந்திக்காமல் கொலை, தற்கொலை, பொறாமை, ஆசிட் வீச்சு போன்றவற்றில் ஈடுபட்டுவிடுகிறார்கள். இந்த எதிர்மறை சிந்தனைகள் அனைத்துமே ஹார்மோன் மாற்றங்களால் நிகழ்வது.

13 வயதை எட்டிப்பிடிக்கும் ஆண், பெண் இரு பாலரும் இந்த மூன்றுவிதமான உணர்வில் ஏதாவது ஒன்றில் சிக்காமல் ஹார்மோன்களிடம் இருந்து தப்பிக்க முடியாது. மேலும் அட்டாச்மென்ட்(attachment) எனும் மூன்றாவது மாற்றத்தில் ஒரு அழகான விஷயம் நிகழ்கிறது. இதில் இரண்டு முக்கியமான ஹார்மோன்கள் அதாவது ஆக்ஸிடாசின்(oxytocin)  மற்றும் வாசோபிரிசின்(vasopressin) சுரக்கின்றது. இதில் ஆக்ஸிடாசின் சுரப்பு அதிகமான பிணைப்பை உருவாக்கும் தன்மை கொண்டது. குழந்தை பேன்றின்போது தாய்க்கு ஆக்ஸிடாசின் அதிகமாய் சுரப்பதாலே, குழந்தையிடத்தில் அதீத பிணைப்பு ஏற்படுகிறது. இதற்கு ‘ஹடுல்’ ஹார்மோன்(cuddle hormones) என்றும் ஆங்கிலத்தில் பெயர் உண்டு. ஹடுல் என்றால் அணைப்பில் வைத்துக்கொள்வது. இதனால்தான் காதலர்கள் பிரியும்போது மிகப் பெரும் துயரைச் சந்திக்கிறார்கள். தன் காதலன் அல்லது காதலியை கஷ்டப்படுத்திவிடக் கூடாது எனக் காதலில் மென்மையான உணர்வைச் சுமக்கிறார்கள்.

ஆக்ஸிடாசின் மற்றும் வாசோபிரிசின் சுரப்பிகளால், படிப்பு சுமையாகி, ரெகுலர் வேலைகளில் ஆர்வம் குறைவதும், யார் சொல்வதும் மூளையில் ஏறாத நிலையும் உருவாகும். தான் செய்வது மட்டுமே சரி என்று நினைத்து, சொல்பேச்சு கேட்காதவர்களாய் மாறுகிறார்கள். இதனால் சிலர் வழிதடம் மாறும் நிலையும் ஏற்பட்டுவிடுகிறது. பருவ வயதில் இந்த மாற்றங்கள் எல்லா ஆணுக்குள்ளும், எல்லா பெண்ணுக்குள்ளும் நிகழ்ந்தே தீரும் என்பதை பெற்றோர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். எப்படி நமக்கு பசிக்கிறதோ, எப்படி தண்ணீர் தவிக்கும் உணர்வு வருகிறதோ, கண்கள் சொக்கி எப்படித் தூக்கம் கண்களைத் தழுவுகிறதோ அதுபோலதான் காதல் வருவதும்.  ஹார்மோன்கள் மாற்றத்தால் தானாகவே நிகழ்வது.

நீ அவனை அல்லது அவளைக் காதலிச்சுட்ட..நீ அவனோடு அல்லது அந்த பெண்ணோடு ஊர் சுத்துற.. என்கிற மாதிரியான கூப்பாடெல்லாம் இவர்களிடத்தில் செல்லுபடியாகாது. இதில்தான் இளசுகள் எதிர்ப்பை மீறி வீட்டைவிட்டுச் சென்று விடுகிறார்கள். முதலில் வீட்டில் இருப்பவர்கள் அவர்களைப் புரிந்துகொண்டு, அவர்களுக்கான இடைவெளியைச் சரியான முறையில் வழங்க வேண்டும். எப்போதும் அவர்களைத் திட்டிக்கொண்டே இருக்காமல், சரியான பாதையில் அவர்களை வழிநடத்தி, ஆலோசனை வழங்குபவர்களிடம்(counseling) அழைத்துச் செல்லுதல் வேண்டும். காதல் என்பது ஒரே ஒருமுறை மட்டும் நிகழும் அற்புதமில்லை.

வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு சந்தர்ப்பங்களில், வெவ்வேறு காரணங்களுக்காக, வெவ்வேறு மனிதர்களை, வெவ்வேறு விதங்களில் நம்மால் காதல் செய்ய முடியும். இதுவே நிதர்சனம்.  இதைப் புரிந்துகொண்டால், நல்லவேளை என் முதல் காதல் கல்யாணத்தில் முடியவில்லை என்ற தெளிவோடு வாழ்க்கையில் முன்னேற முடியும்.  மாணவர்களில் இரண்டு வகை உண்டு. தன்னைத் தானே சரிசெய்து கொண்டு வெளியில் வருபவர்கள் முதல் வகை. இன்னொரு வகைக்கு டூல் தேவைப்படும். யாராவது அவர்களை அரவணைத்துச் செல்லவேண்டும். அது ஆசிரியராகவோ, பெற்றோராகவோ அல்லது கவுன்சிலிங் தரும் மனநல ஆலோசகராகவோ இருக்கலாம். காதல் என்பது மாய வலை.. பருவ வயதில் உடல் காட்டும் கண்ணாமூச்சி விளையாட்டு.. அதில் சிக்கினாலும் வெளியில் வரலாம் என புரிய வைத்து நம்பிக்கை கொடுத்துவிட்டால், இளம் பருவத்தில் குழந்தைகள் தவறான வழிகளை தேர்ந்தெடுப்பது தடுக்கப்படும்.

தொகுப்பு: மகேஸ்வரி

Tags :
× RELATED சோதனைகளும் சாதனைக்கே!