×

கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

* மிளகு, மிளகாய் வற்றல், துவரம்பருப்பு, சீரகம் ஆகியவற்றை அரைத்து புளித்த மோருடன் கலந்து, கறிவேப்பிலை, கடுகு தாளித்துக் கொட்டி கொதிக்க வைத்தால் புதுவித ரசம் தயார்.

* குடைமிளகாய், கத்தரிக்காய், கோவைக்காய்களில் பொடி அரைத்து கறி செய்யும் போது மசாலாப் பொடியுடன் நான்கு ஸ்பூன் பொட்டுக்கடலை மாவையும் கலந்து செய்தால் கறி அதிக மொறுமொறுப்புடன் சுவையாக இருக்கும்.

* தக்காளி சாதம் தயாரிக்கும்போது சிறிதளவு மசாலா பொடியை மேலாகத் தூவி விட்டால் மிகவும் சுவையாக இருக்கும்

- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

* ஊத்தப்பத்தின் நடுவில் துவாரம் செய்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டால் போதும். கரகரப்பாகவும், ருசியாகவும் இருக்கும்.

* ஆம்லெட் மேல் உப்பு மிளகாய்த்தூளுடன் சிறிதளவு சீரகத்தையும் சேர்த்துப் பொடி செய்து தூவலாம். மிகுந்த ருசியுடன் இருக்கும்.

* தட்டை செய்யும்பொழுது மைதாவிற்குப் பதிலாக கோதுமை மாவை ஆவியில் வேக வைத்து செய்தால் அதிக ருசியுடன் இருக்கும்.

* கத்தரிக்காய், கோவைக்காய், வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட் போன்றவற்றுடன் வெங்காயம் நன்றாக சேரும். எனவே இந்த வகைப் பொரியல்களில் உப்பு அதிகமானால் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை எண்ணெயில் வதக்கிச் சேர்த்து விடலாம்.

- ஆர். அஜிதா, கம்பம்.

* பாலைக் காய்ச்சும்போது பாத்திரத்தை முதல் இரண்டு நிமிடங்கள் மூடி வைத்துக் காய்ச்சி விட்டு, பிறகு திறந்து காய்ச்சினால் சீக்கிரமே காய்ந்துவிடும். கேஸ், நேரம் இதனால் மிச்சமாகிறது!

* கட்லெட் வகைகளை எண்ணெயில் பொரிக்காமல் மேலாக எண்ணெய் தடவி பேக்கிங் அவனில் வைத்து, பேக் செய்தால் சாப்பிடச் சுவையாக இருக்கும். ஹெல்த்தியானதும்கூட!

* மாங்காய், எலுமிச்சை, பூண்டு, வெங்காயம் போன்றவற்றில் தொக்கும் செய்யும்போது அதில் சிறிது சர்க்கரையையும் சேர்த்தால் ருசி கூடும்.

- அமுதா அசோக்ராஜா, ஓசூர்.

* முருங்கைக்கீரையில் அவரை கொட்டை, துவரைக் கொட்டை சேர்த்து பொரியல் செய்யலாம். சுவையாக இருக்கும்.

* பிஞ்சு வெண்டைக்காயுடன் 1 தக்காளி, சின்ன வெங்காயம் 1, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கடைந்தால் நன்றாக இருக்கும்.

* நார்த்த இலையையும், புதினா போல் துவையல் செய்தால் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

- சு.கண்ணகி, வேலூர்.

* வற்றல் குழம்பில் உப்பு அதிகமாகி விட்டால், அதில் சிறிது தேங்காய்ப்பால் சேர்த்தால் உப்பு குறைந்து சுவை கூடிவிடும்.

* வாணலியில் உப்புமா செய்வதைவிட, குக்கர் அல்லது வெண்கல உருளையில் செய்தால் கிளறுவது எளிது. அடிப்பிடிக்கவும் செய்யாது.

* காளான்களை முதலில் ஈரத்துணியால் துடைத்துவிட்டு, உப்பு கலந்த வெந்நீரில் இரண்டு நிமிடங்கள் போட்டு எடுத்து, பிறகு பயன்படுத்துவது நல்லது.

- எஸ்.ராஜம், ஸ்ரீ ரங்கம்.

* குளிர்சாதனப்பெட்டி உள்ளே கெட்ட வாசனை வராமல் இருக்க, புதினா, மல்லி இரண்டின் இலைகளையும் சாறு எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்தால் போதும்.

* முந்திரிப்பருப்பை நெய்யில் பொரித்து அதில் மிளகு மற்றும் சீரகத்தூளை லேசாகத் தூவி குழந்தைகளுக்கு ஆரோக்கியமான நொறுக்குத்தீனியாகக் கொடுங்கள்.

* கால் விரல்களின் இடுக்குகளில் லேசாக தேங்காய் எண்ணெயை தடவிக்கொண்டு கிச்சனில் வேலை செய்யலாம். எந்த அழுக்கும் விரல் இடுக்குகளில் சேராது.

- பி.கவிதா, சிதம்பரம்.

* பச்சை மிளகாய், ரசப்பொடி இல்லையா? மிளகு, சீரகம் சேர்த்து எலுமிச்சை ரசம் செய்ய வித்தியாசமான சுவையோடு எளிதில் செய்யக்கூடிய ரசம், தக்காளி சேர்க்க வேண்டும்.

* கோதுமை ரவை 1 பங்கு, பச்சரிசி 1 பங்கு சேர்த்து ரவை போல உடைத்து உப்புமா செய்ய வித்தியாசமான சுவையோடு கூடிய உப்புமா ரெடி.

- ராஜி குருசாமி, சென்னை.

* தக்காளி சூப் செய்யும்போது, மூன்று முந்திரிகளை அரைத்து சேர்த்தால் சூப்பும் கெட்டிபடும். சுவையும் கூடும்.

* ஐஸ் கியூப்களுக்காக தண்ணீர் வைக்கும் முன், டிரேயை வெந்நீரில் அலம்பிவிட்டு தண்ணீர் ஊற்றி வைத்தால் கியூப் எளிதில் எடுக்க வரும்.

- மல்லிகா குரு, சென்னை.

Tags :
× RELATED ஆரோக்கிய கூந்தலுக்கு உதவும் அர்கன் ஆயில்!