×

சர்வதேசப் போட்டியில் தங்கம் வெல்வேன்

நன்றி குங்குமம் தோழி

தடகள விளையாட்டுக்களில் கடினமான விளையாட்டாக கருதப்படுவது ஹேமர் த்ரோ என்று சொல்லப்படும் சங்கிலிகுண்டு எறிதல். ‘தலை கிறுகிறு’வென சுற்றும் வரை, பலமுறை குறுகிய வட்டத்துக்குள் சுழன்று, சங்கிலியின் மறுமுனையில் பொருத்தப்பட்டு இருக்கும் கனமான குண்டை இம்மி பிசகாமல் கோட்டுக்குள் எறிய வேண்டும். ஆண்களே பங்கேற்க தயங்கும் இவ்விளையாட்டில், சத்தம் இல்லாமல் சாதனைப்புரிந்து வரும் ஜானவி தனக்கும் சங்கிலிகுண்டு எறிதல் விளையாட்டுக்குமான உறவின் பின்னணியை விவரிக்கிறார்...

‘‘என் தாத்தா கமலசேகரன், அப்பா  ரத்தினவேலு இருவரும் தடகள விளையாட்டு வீரர்கள். குறிப்பாக சங்கிலிகுண்டு எறிதல் (Hammer Throe) போட்டியில் பங்கேற்று வந்தார்கள். அப்பா இப்போது மூத்தோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். என்னுடைய பயிற்சியாளரும் அவர்தான். இவர்களைப் பார்த்துதான் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் எனக்குள் வந்தது. ஆறாவது படிக்கும் போதில் இருந்தே பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தேன். அப்போது, வட்டு எறிதல் (Discus), குண்டு எறிதல் (Shot put), ஆகிய விளையாட்டுகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்தேன். எட்டாவது படிக்கும்போது மாநில அளவிலான போட்டியில் வட்டு எறிதலில் தங்கம் வென்றேன்.  

அந்தச் சமயத்தில் நிகழ்ந்த என் அம்மாவின் மறைவு என்னை நிலைகுலையச் செய்தது. இக்கட்டான அந்தச் சூழ்நிலையில் அப்பா தந்த ஊக்கத்தாலும், பயிற்சி முறைகளாலும் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினேன். அதுவரை வட்டு மற்றும் குண்டு எறிதல் போட்டிகளில் மட்டும் கலந்து கொண்டிருந்த நான், பதினோறாம் வகுப்பில் இருந்து சங்கிலிகுண்டு எறிதல் போட்டிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினேன். 2018-ம் ஆண்டு, சென்னையில் நடைபெற்ற ஓப்பன் ஸ்டேட் மீட் தான் நான் பங்கேற்ற முதல் மாநில அளவிலானப் போட்டி. அதில் ஹேமர் த்ரோவில் வெள்ளிப்பதக்கம் (37 மீட்டர்) வென்றேன். நூலிழையில், தங்கப் பதக்கத்தைத் தவறவிட்டேன்.

முதல் போட்டி அனுபவம் இவ்வாறு அமைந்தது. அதே வருஷம் ஜூனியர் ஸ்டேட் மீட் மற்றும் ஓப்பன் ஸ்டேட் மீட்டில் முதலிடம் பிடித்த வீராங்கனையை, 40 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றேன்’’ அதன் பிறகு எல்லா போட்டிகளிலும் பங்கு பெற்று வெற்றி வாகை சூடிஉள்ளேன். ‘‘கடந்த ஆண்டு ஜூனியர் ஓப்பன் ஸ்டேட் மீட்டில் தங்கம் வென்றேன். அதன்மூலம் சவுத்ஸோன் நேஷனல்ஸுக்கான தமிழக அணியில் இடம் பிடித்தேன். உடுப்பியில் நடைபெற்ற போட்டியில் வெண்கலம் வென்றதுதான் என்னுடைய சமீபத்திய சாதனையாகும். எனக்கு மறக்க முடியாத போட்டியும் இதுதான். ஏனென்றால் ஆறு தடவையும் சங்கிலிகுண்டு எல்லைக் கோட்டுக்கு வெளியே தான் போய் விழுந்தது. இரண்டு முறைதான் கோட்டுக்குள் விழுந்தது.

அதில் 42 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலம் வென்றேன். கோயம்புத்தூரில் உள்ள பிரபல பள்ளியில் +2 படித்து வருகிறேன். இதுவரை பள்ளிகளுக்கு இடையேயான 24 போட்டிகள், மாவட்டப் போட்டிகள் 50, ஆங்கிலோ இந்தியன் ஸ்கூல் மீட் 6, ஜூனியர் ஸ்டேட் மீட் 2 உட்பட, 6 மாநிலப்போட்டிகள் என எண்ணற்ற போட்டிகளில் கலந்துகொண்டு இருக்கிறேன். அந்த போட்டிகளில் கலந்துகொண்டதன் வாயிலாக, வட்டு மற்றும் குண்டு எறிதலில் 95 தங்கப்பதக்கம், சங்கிலி குண்டு எறிதலில் 4 தங்கப்பதக்கமும், 2 வெள்ளியும் வென்றுள்ளேன். சவுத்ஸோன் நேஷனல்ஸ் போட்டியில் 1 வெண்கலமும் வென்றிருக்கிறேன்.

ஆங்கிலோ-இந்தியன் பள்ளிகளுக்கு இடையேயான மாநிலப் போட்டிகளில் 14, 16 மற்றும் 18 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் வட்டு மற்றும் குண்டு எறிதலில் என் சாதனைகள் இன்னும் முறியடிக்கப்படவில்லை’’ என்றார் பெருமையாக. ‘‘பயிற்சி முறைகள் என்று சொல்லும்போது, போட்டி இல்லாத சமயங்களில் ஜிம்களில் உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்துவேன். ஒரு நாள் விட்டு ஒரு நாள் காலையில் ஏழரை மணி முதல் 9.30 வரையும், மாலையில் 4.30 முதல் 7.00 மணிவரையும் கடுமையாகப் பயிற்சி செய்வேன். இதற்காக 7 கிலோமீட்டர் நடந்தே போவேன். போட்டி நெருங்கும் சமயங்களில் பயிற்சிகள் எதையும் மேற்கொள்ளமாட்டேன். அந்த சமயம் உடலை ப்ளெக்சிபெல்லாக வைத்திருக்க தினமும் அரைமணி முதல் முக்கால்மணி வரை ஸ்டெச்சிங் எக்ஸசைஸ் மட்டும் செய்வேன்.

ஃபிட்னெஸ் தொடர்பாக, பீத்தோவன், சீனிவாசன் ஆகியோரிடம் பயிற்சி பெற்று வருகிறேன். ஹேமர் த்ரோ விளையாட்டின் நுணுக்கங்கள் பற்றி சத்தீஸ்வரன் பயிற்சி அளிக்கிறார். படிப்பு, விளையாட்டு இரண்டிலும் கவனம் செலுத்துவது சிரமமாக இல்லை. ஏனென்றால் எதையும் முழு ஈடுபாட்டுடன் செய்யும்போது, கஷ்டம் தெரியாது. விளையாட்டைப் பொறுத்தவரை முயற்சி செய்தால் முடியாது என்று ஒன்றுமில்லை. இந்தியாவிற்காக சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறவேண்டும் என்பதுதான்  என் லட்சியம்’’ என்றவாறு பயிற்சிக்குத் தயாரானார் ஜானவி.

தொகுப்பு: எஸ்.விஜயகுமார்

படங்கள்: சதீஷ் தனபாலன்

Tags :
× RELATED நெல் பல பொலிக! பொன் பெரிது சிறக்க!