×

அலெக்ஸாண்டர் முதல் அஸ்வினி பாட்டி வரை...அச்சுறுத்தும் பார்க்கின்சன் நோய்!

நன்றி குங்குமம் தோழி

வயோதிகத்திற்கே உரியதான கைகால் நடுக்கம், எளிய வேலைகளாய் இருந்தாலும் தாமதமாய் செய்வது, நடப்பதில் தள்ளாட்டம், மன நலனில் சோர்வு என இவை எல்லாம் ஒருவருக்கு தோன்றினாலும் அதில் வேறுபாடுகள் உள்ளன. மிகச் சாதாரணமாக எல்லாப் பெரியவர்களுக்கும் தோன்றும் அறிகுறிகள் தானே இவை என்று சிலர் நினைக்கலாம். ஆனால் இந்த அறிகுறிகள் எல்லாம் அகண்ட நோய்க்குறிகள் கொண்ட பார்க்கின்சன் என்னும் நோயிலும் தோன்றும். அது பாதிக்கப்பட்டவரை மட்டுமல்லாது அவருடன் வாழும் குடும்ப நபர்களையும் மனச்சோர்வுக்கு ஆழ்த்தும் என்பதால் இதைப்பற்றி அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டியது மிக அவசியம்.  

பார்க்கின்சன் என்பது?

ஒருவருக்கு வயது கூடக்கூட அவரது மூளையில் உள்ள நியூரான்கள் சேதமடைந்து செயலிழக்க ஆரம்பிக்கும். இது இயல்பான ஒன்றுதான். அப்படி செயலிழக்கும் போது அந்த பகுதி மூளையானது என்ன வேலை செய்ய வேண்டுமோ அதில் சிரமம் ஏற்படும். எடுத்துக்காட்டாக பெரியோர்களுக்கு வரக்கூடிய ஞாபகமறதியை சொல்லலாம். அதேபோல்  குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள நியூரான்கள் சேதமடைந்து கை கால்களில் நடுக்கம், தசைகள் இறுக்கம் பெறுவது, உடல் அங்கங்கள் மெதுவாக இயங்குவது போன்ற கோளாறுகள் உண்டாகும். இதையே பார்க்கின்சன் நோய் எனலாம். இந்நோய் குணமாக இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், இந்நோய் தொடக்கத்தில் மெதுவாக முன்னேறி காலப்போக்கில் இது மிக தீவிரம் அடையும் தன்மை கொண்டது.

டோபமைன் ஹார்மோன்கள் நம் உடலில் உள்ள ஹார்மோன்களில் முக்கியமான ஒன்று இந்த டோபமைன் ஹார்மோன். நாம் மனச்சோர்வுடன் இல்லாமல் இருக்க உதவும் இந்த ‘happy harmone’, உடல் அங்கங்கள் இயல்பாய் இயங்க உதவுகிறது.  பார்க்கின்சன் நோயால் மூளையில் குறிப்பிட்ட பாகங்கள் மட்டும் செயலிழக்கும் போது அங்கு சுரக்கும் டோபமைன் உற்பத்தி அளவு பாதிக்கப்பட்டவருக்கு குறைந்து கொண்டே இருக்கும். அதனால் எளிய செயல்களாய் இருந்தாலும் செய்வதற்கு தாமதம், நடையில் தாமதம், மனச்சோர்வு ஆகியவை ஏற்படும்.  

யாருக்கெல்லாம் வரலாம்?

ஆண், பெண் என இரு பாலருக்கும் வரும். எனினும் பெண்களை விட ஆண்களையே இது 50 சதவீதம் அதிகம் தாக்குகிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம். அத்தோடு, பத்து பேரில் ஒருவருக்கு பரம்பரை நோயாக வர வாய்ப்புண்டு என்றும் ஆராய்ச்சிகள் சொல்கின்றன. மேலும் இவை அமெரிக்கா, அர்ஜென்டினா போன்ற நாடுகளில் அதிகமான எண்ணிக்கையில் காணப்படுவதாகவும், அதில் பெரும்பாலானவர்கள் 45 வயதைக் கடந்தவர்கள் என்றாலும், 60 வயதுக்கு மேல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தான் அதிகம் என்றும், உலகளவில் 7 மில்லியன் மக்கள் இந்நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் தகவல்கள் சொல்கின்றன. இது நம்மில் பலருக்கும் அதிர்ச்சி தரும் செய்தியாகவே இருக்கக்கூடும்.

என்ன காரணம்?

இதுதான் காரணம் என இன்னும் கண்டறியப்படவில்லை. எனினும், ஹெராயின் போன்ற போதைப் பொருட்கள், சில நச்சுப் பொருட்கள், உலோகங்கள், பூச்சிக் கொல்லிகள் கூட இந்நோய் உண்டாக வாய்ப்பாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

நோய் அறிகுறிகள் நடுக்கம், மெதுவாக இயங்குதல், தசை இறுக்கம் இவை மூன்று அறிகுறிகளும் மிக முக்கியமானவை.

* பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு ஒருவருக்கு கை கால்களில் நடுக்கம் ஏற்படும். இது ஆரம்பகாலத்தில் ஏதேனும் ஒருபுறம் மட்டும் தோன்றும் நடுக்கம் நாளடைவில் இருபுறமும் தோன்றக்கூடும்.

* உடலின் தசைகள் எல்லாம் இறுக்கமாக மாறும். தசை இறுக்கமும், நடுக்கமும் பெரும்பாலும் ஒரு பக்க தசைகளையே பாதிக்கும்.

* நடுக்கமானது பெரும்பாலும் வெறுமனே இருக்கும் போதுதான் வரும். ஏதேனும் வேலை செய்யும் போது இருக்காது.

* தசைகளின் இறுக்கத்தினால் உடலில் அசைவுகள் குறைந்து போகும். அதனால் கழுத்து, தோள்பட்டை, முதுகு போன்ற இடங்களில் வலி ஏற்படும். அவற்றால் கழுத்து முன் வளைந்து கீழ் நோக்கியே இருக்கும் என்பதால், சட்டென்று நிமிர்ந்து பார்க்க சில வினாடிகள் எடுப்பார்கள்.

*  கையெழுத்து சிறியதாகவும், தெளிவற்றதாகவும் மாறும்.

*  தசைகளின் இறுக்கத்தினால் உடல் முன்னோக்கி (கூன் விழுந்தது போல்) வளைந்திருக்கும்.

*  நடக்கத் தொடங்கும் போதோ அல்லது நடந்து கொண்டிருக்கும் போதோ கால்கள் இயங்க வராமல் (freeze) கஷ்டப்படுவர். அதுபோல் கைகளை வீசி நடக்கவும் சிரமப்படுவர்.

* நடக்கும் போது இரு கால்களுக்கும் இடையே உள்ள நீளம் குறைய நேரிடும். அதாவது கால்களை முன் எடுத்து வைக்கும் தூரம் குறையத் தொடங்கி, சிறு குழந்தைகள் நடக்கப் பழக ஆரம்பிக்கும் போது இருக்கும் தடுமாற்றம் இருக்கும். அதனால் கீழே விழும் வாய்ப்பு அதிகமாகக்கூடும்.

* நடக்கும் தூரம் குறையத் தொடங்கி, நடக்கும் நேரம் அதிகமாக மாறும்.

* உமிழ் நீர் அதிகமாக சுரந்து வாயிலிருந்து ஒழுகும். உச்சரிப்பு தெளிவற்று இருக்கும். பேச்சு சத்தம் சீராய் இல்லாமல் கூடியும் குறைந்தும் இருக்கும். அத்தோடு உணவு விழுங்குவதில் சிரமம் ஏற்படும்.*     சிரிப்பது கூட சிரமமாகும். அதாவது தெரிந்தவர்கள் எதிரில் வந்தால் சிரிக்க வேண்டும் என்று தெரிந்திருந்தாலும் கூட சிரிக்க முடியாது அல்லது சிரிப்பதில் தாமதம் ஏற்படும். ஏனெனில் அனிச்சையாக செய்யும் அசைவுகள் எல்லாம் பாதிக்கப்பட்டிருக்கும். அதனால் சிரிப்பது, தும்பல், இருமல், கண் இமைப்பது என எல்லாம் சிரமமாய் தோன்றும்.

* மன நிலையில் மாற்றம் ஏற்படுவதால் ஞாபக மறதி உண்டாகும். அதனால் எப்போதும் பிரமை போன்ற மனரீதியான பாதிப்புகள் இருக்கும்.
என்னென்ன விளைவுகள்

* தினசரி வேலைகளை பாதிக்கக்கூடிய அளவு நடுக்கம் ஏற்படும்.

* தூக்கமின்மை, உடல் எடை இழப்பு, உணவருந்த, உடையணிய, குளிக்க, கழிவறை உபயோகப்படுத்த பிறர் உதவி தேவைப்படும்.

* எழவும், உட்காரவும், புரண்டு படுக்கவும் சிரமம் ஏற்படும்.

* சிலருக்கு எண்ணெய் பசை போன்ற தன்மையில் கூட தோள் மாறுபடலாம்.

* வயிற்றில் உள்ள தசைகளை பாதிப்பதால் ஜீரணக் கோளாறுகள், மலச்சிக்கல் உருவாகும் வாய்ப்பு எப்போதும் இருக்கும்.

* இரும்புவதற்கு உதவும் தசைகளும் பாதிக்கப்படுவதால் இரும்பி சளியை வெளியே எடுப்பதில் சிரமம் இருக்கும். அதனால் நுரையீரல் கோளாறுகளும் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

* எதிலும் பதட்டம் உண்டாகும்.

* அடிக்கடி நடுக்கம் ஏற்படும் என்பதால் இவர்களுக்கு மற்ற நபர்கள் முன்னிலையில் வருத்தமும், சினமும் தோன்றும். அதனால் பொது இடங்களுக்கு செல்ல முன்வரமாட்டார்கள்.  

என்ன தீர்வு?

அலோபதி மருத்துவத்தைப் பொறுத்தவரையில் ஒருவருக்கு பார்க்கின்சன் நோய் பாதிப்பு உள்ளதென கண்டறிந்து விட்டால் அது முதல் தொடர்ந்து அவர் வாழ்நாள் முழுவதும் மருந்து உட்கொள்ளல் வேண்டும். அதனால் அனைத்திற்கும் காரணமான குறைவான அளவு டோபமைன் ஹார்மோனை அதிகம் சுரக்க மாத்திரைகள் கொடுக்கப்படும். இதனால் டோபமைன் உற்பத்தி அளவு கூடி நடுக்கம், மெதுவாக இயங்குதல், தசை இறுக்கம் போன்றவை கட்டுப்பாட்டுக்குள் வரக்கூடும். இயன்முறை மருத்துவத்தை பொறுத்தவரையில் நோய் கண்டறிந்த பின் ஆயுட்காலம் முழுவதும் தொடர வேண்டும். ஏனெனில் மூட்டுகளின் அசைவுகள் குறைந்து விட்டால் உடலின் இயக்கம் பாதிக்கும். அதனால் படுக்கையில் முடங்கிக் கிடக்கும் சூழலில் சிக்கிக் கொள்வர்.

அது தொடர்ந்தால் படுக்கை புண், சுவாசப் பிரச்சனைகள் தோன்றி மரணத்திற்கு வழிவகுக்கும். அதனால் ஒருவர் நோயின் ஆரம்ப நிலையில் இருந்தாலும் சரி, அதற்கு மீறிய நிலையில் இருந்தாலும் சரி கட்டாயம் இயன்முறை மருத்துவம் அவசியம். ஒருவர் இயன்முறை மருத்துவத்தின் மூலம் உடற்பயிற்சி செய்வதினால் நோயின் தாக்கத்தைக் குறைக்கலாம். ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் பிறரின் உதவி நாடாமல் தன்னிச்சையாய் இயங்கலாம். காலம் உள்ள வரையில் இந்நோய் இருந்தாலும் பாதிக்கப்பட்ட நபர் மற்றவர்களின் குறைந்தபட்ச உதவியுடன் மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து மீதமுள்ள நாட்களை மனநிறைவுடன் கடத்தலாம்.

அதாவது பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு, தசைகளின் இறுக்கம் குறைய பயிற்சிகள், சுவாசக் கோளாறுகள் சீர்ப்பட பயிற்சிகள், உறங்கும் போதும் அமர்ந்து இருக்கும் போதும் எப்படியான நிலையில் (position) உடல் இருக்க வேண்டும் என கூறுவது, பல வகையான நடக்கும் பயிற்சிகள், கால் தடுமாற்றத்திற்கு (balance) உதவும் பயிற்சிகள், கை தடுமாற்றத்திற்கு உதவும் பயிற்சிகள், மற்ற தசைகளின் இயக்க பயிற்சிகள் என எப்போதும் நோயை எதிர்த்துப் போராட உதவும் இயன்முறை மருத்துவம் என்பது இந்நோய்க்கு இன்றியமையாத ஒன்று. மாவீரன் அலெக்ஸாண்டர், ஹிட்லர், குத்து சண்டை வீரர் முகமது அலி போன்ற பிரபலங்கள் பார்க்கின்சன் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது அனைவரும் அறிய வேண்டிய தகவல். எனவே, பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்நோய்க்கு அடிமை ஆகாமல் மீதமிருக்கும் வாழ்வை மன தைரியத்துடன் வாழ நிச்சயம் இயன்முறை மருத்துவம் துணை புரியும்.

Tags : Alexander ,Aswini ,
× RELATED அடையாளம் தெரியாத மூதாட்டி உடல்