×

நியூஸ் பைட்ஸ்

நன்றி குங்குமம் தோழி

தலைமையை எதிர்த்து போராட்டம்

தில்லியில், கார்கி கல்லூரியில் நடந்த ஆண்டு விழாவின் போது, பெண்கள் கல்லூரிக் குள் நுழைந்த போதை கும்பல் ஒன்று, மாணவிகளை பாலியல் சீண்டலுக்குள்ளாக்கித் துன்புறுத்தியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பல மாணவிகள் நிர்வாகத்திடம் புகார் செய்தும், அதை கண்டுகொள்ளாத தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி மாணவிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். கேரளாவில் கடந்த நான்கு ஆண்டுகளாக வயதான பெற்றோர்களைக் கவனிக்காமல் விட்ட பிள்ளைகள் மீது 15,650 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு மூன்று மாதம் சிறைத் தண்டனை அல்லது ஐயாயிரம் அபராதம் அல்லது இரண்டுமே சேர்த்து தண்டனையாக வழங்கப்படுகிறது. கேரளாவில் பெற்றோர்களை கவனிக்கத் தவறும் பிள்ளைகள் மீது குற்றம் சுமத்தி வழக்குப் பதியும் வசதி சட்டத்தில் உள்ளது.

முகம் மாறிய செவிலியர்கள்

சீனாவில் கொரோனா  வைரஸ் பாதிப்பால் இயல்பு வாழ்க்கை பாதித்து, ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறவே பயப்படும் மக்கள் மத்தியில், இரவு பகலாக குடும்பத்தைவிட்டு மருத்துவர்களும் செவிலியர்களும் பல ஆயிரம் கணக்கான கொரோனா வைரஸ் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் எப்போதுமே மாஸ்க் அணியும் கட்டாயத்திலிருக்கும் செவிலியர்கள், சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களால், பாராட்டுகளும் அனுதாபங்களும் குவிந்து வருகிறது. வெகு நேரம் அணியும் மாஸ்க்குகளால், முகத்தில் காயங்கள் ஏற்பட்டு, அடையாளம் தெரியாத வகையில் தடயங்கள் உருவாகியுள்ள முகங்களின் புகைப்படம்தான் அது.

அந்த 328 நாட்கள்

2019ல் அமெரிக்காவிலிருந்து விண்வெளிக்கு புறப்பட்ட 41 வயதான விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கோச், சுமார் 328 நாட்களுக்குப் பிறகு பூமிக்கு திரும்பியிருக்கிறார். இதன்மூலம் அதிக நாட்கள் விண்வெளியில் தங்கிய அமெரிக்க வீராங்கனை என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். இந்த நீண்ட பயணத்தின் மூலம், பல சுவாரஸ்யமான ஆராய்ச்சிகள் வெளிவரும் என்று நம்பப்படுகிறது.

தில்லி வெற்றி

அதிஷி மார்லேனா, தில்லியில் பிறந்து லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை பட்டங்களைப் பெற்றவர். கல்வியிலும் மருத்துவத்திலும் தன்னை ஈடுபடுத்தி வரும் இவர், பா.ஜ.கவின் தரம்பீர் சிங்குக்கு எதிராக கல்காஜி சட்டமன்றத் தொகுதியில் அபார வெற்றி பெற்றுள்ளார். தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு, இவரும் ஒரு முக்கிய காரணம். தில்லி அரசுப் பள்ளிகளின் முன்னேற்றத்திற்குக் காரணமாய் இருந்த இவர், அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராய் உருவாக்கியவர் என்று அறிக்கைகள் கூறுகின்றன.

குழந்தைகளுக்கான விருது


பதிமூன்று வயதே ஆகும் ஆடம்ன் பெல்டியர், எட்டு வயதிலிருந்தே சுத்தமான குடிநீருக்காகப் போராடி வருகிறார். இவர் ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்பது சிறப்புத் தகவல். சுத்தமான குடிநீர், குடிநீர் பாதுகாப்பு போன்ற முக்கியமான அடிப்படை தேவைகளுக்காக போராடி பிரதமரையும் சந்தித்து தன் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். 2005ல் அறிமுகப்படுத்தப்பட்ட சர்வதேச குழந்தைகள் அமைதி விருது, உலகெங்கிலும் உள்ள குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்த உழைக்கும் ஒரு குழந்தைக்கு விருது வழங்கும். அதில் ஆடம்ன் பெல்டியரின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

Tags :
× RELATED நியூஸ் பைட்ஸ்