×

பூக்களை மலர விடுங்கள்

நன்றி குங்குமம் தோழி

குழந்தைகள் நமது தேசத்தின் பூக்கள். தன் குடும்பத்தின் வாரிசாய் வருபவர்கள். குழந்தையின் வரவை எதிர்பார்த்து பத்து மாதங்களும் காத்திருக்கும் பெற்றோரின் தவிப்பு விவரிக்க முடியாத உணர்வு. வகுப்பறையில் கற்பதற்கு முன்பே தாயின் கருவறையில் உருக்கொண்டு,  தாயிடம் உணர்ந்ததை மண்ணில் பிரதிபலிக்கிறது. இதில் ஒருசில குழந்தைகள் விதிவிலக்காய் சிறப்புக் குழந்தைகளாய் பிறந்து விடுகிறார்கள். அப்படி பிறந்துவிட்ட குழந்தைகளைக் கொண்ட பெற்றோரின் அடுத்த கட்ட நகர்தல் குழப்பமாகவே மாறிவிட, இந்தக் குழந்தையை நாம் எப்படி வளர்க்கப் போகிறோம்.. குழந்தைக்கான கல்வி என்ன? அதன் எதிர்காலம் என்ன? என்று பிரச்சனைகள் பூதாகரமாய் தெரிய, பயப்படும் அளவிற்கு ஒன்றுமில்லை, எங்களிடம் கொண்டு வாருங்கள், நாங்கள் நியர் பை நார்மலுக்கு மாற்றிக் காட்டுகிறோம் என்கிறார்கள் சென்னை சாந்தோமில் இயங்கி வரும் “மாற்றுத்திறனாளி குழந்தைகளை உள்ளடங்கிய கல்விக்கான மாநில ஆதாரவள மைய”த்தின் பயிற்சியாளர்களும் அதன் ஆசிரியர்களும்.

ஒரு குழந்தை பிறக்கும்போதே அழ வேண்டும். தாமதித்தால் குறை உள்ளது என்கிறார் இந்த மையத்தின் உடற்பயிற்சி நிபுணரான (physiotherapist) விநாயக மூர்த்தி. தன் குழந்தைக்கு குறை உள்ளது என்பதை ஒத்துக்கொள்ளாத பெற்றோர்களும் உண்டு. தன் குழந்தைக்கு இருக்கும் குறை குறித்து அறியாத பெற்றோர்களும் உண்டு, ஒரு குழந்தை இரண்டே மாதத்தில் அம்மா முகத்தைப் பார்த்தும், மூன்றே மாதத்தில் மற்றவர்கள் முகத்தையும் பார்த்தும் சிரிக்க வேண்டும். கழுத்து மூன்று அல்லது நான்கே மாதத்தில் நிற்க வேண்டும். இவை நிகழவில்லையா? தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள். தாமதம் செய்யும் குழந்தையின் வளர்ச்சி தடைபடும் என்கிறார் இவர். எவ்வளவு விரைவாக பிரச்சனையைக் கண்டுபிடிக்கிறோமோ அவ்வளவு விரைவாய் அவர்களை வெளியில் கொண்டுவரலாம் என்றவர், ஐந்து வயதுக்கு உள்ளாகவே குழந்தையின் குறையைக் கண்டுபிடித்து உடல் இயக்கப் பயிற்சிகளைத் தொடங்க வேண்டும் என்கிறார் மேலும்.

சிறப்புக் குழந்தைகளை உள்ளடக்கிய இந்த மாநில ஆதாரவள மையம், சென்னை சாந்தோமில் 2013ல் துவங்கப்பட்டது. அனைத்துவிதமான மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் இங்கு தீர்வு உண்டு. முதலில் 6 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆரம்பிக்கப்பட்டு, 2015ல் பிறந்த குழந்தையிலே பாதிப்பைக் கண்டறியும் (early intervention) திட்டமும் இணைக்கப்பட்டது. பிரச்சனைகளோடு பிறக்கும் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு தெரபிகள் வழங்கப்பட்டு நியர்பை நார்மலுக்கு வந்ததும் இயல்பான குழந்தைகளோடு அவர்களை இணைத்து படிக்க வைப்பதே இந்த மையத்தின் செயல்பாடு.

இந்த மையத்தில் நான்கு சிறப்பு ஆசிரியர்கள், ஒரு பிஸியோ தெரபிஸ்ட், ஒரு ஆக்குபேஷனல் தெரபிஸ்ட், ஒரு ஸ்பீச் தெரபிஸ்ட், லைப்ரரியன் ஒருவரும், ஒவ்வொரு தனித்தனி வகுப்புக்கும் உதவியாளர்களும் உண்டு. மேல் தளத்தில் மாற்றுத் திறனாளிக் குழந்தைகளையும் இணைத்து, இருபாலரும் படிக்கும் நடுநிலை பள்ளி ஒன்றும் இயங்கி வருகிறது. பள்ளி வளாகத்தை ஒட்டி நார்மல் குழந்தைகளோடு மாற்றுத் திறனாளிக் குழந்தைகளும் இணைந்து விளையாட (infinity inclusive park) பூங்கா ஒன்றும் செயல்படுகிறது.

இங்கு பார்வைக் குறைபாடு(visually impaired), குறைவான பார்வை(lower vision) செவித்திறன் குறைபாடு(hearing impairment), எலும்பியல் குறைபாடு (Orthopedic impaired), அறிவு வளர்ச்சிக் குறைபாடு (intellectual disability),  இரண்டுக்கு மேற்பட்ட பிரச்சனை உள்ளவர்கள்(Multiple disabilities), ஆட்டிசம்  ஸ்பெக்ட்ரம்  டிஸார்டர் (Autism spectrum disorder), பெருமூளை வாதம் (cerebral palsy), கற்றல் குறைபாடு (learing disability), டவுன் சிண்ட்ரோம் (Down syndrome), மஸ்குலர் டிஸ்டிரோபி (Muscular dystrophy), குழந்தைகள் என்ற பிரிவில் அனைத்து மாற்றுத்திறனாளிக் குழந்தைகளும் வருகிறார்கள். சென்னை முழுவதும் 10 மையங்கள் செயல்பட்டாலும், சிறப்புக் குழந்தைகளுக்கென துவங்கப்பட்ட ஆதாரவள மையத்திற்கான மாதிரி மையம்(model centre) தமிழ்நாட்டில் இது மட்டுமே.

வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் படிக்காத பெற்றோர்களின் சிறப்புக் குழந்தைகள், எளிய பின்னணி கொண்ட கூலித் தொழிலாளர்களின் சிறப்புக் குழந்தைகள், பணம் செலவழித்து தெரபிகளைக் கொடுக்க முடியாதவர்கள், மருத்துவம் பார்க்க முடியாமல் வீட்டுக்குள் முடங்கிய குழந்தைகளுக்கு இங்கு இலவசமாக கட்டாயத் தீர்வு உண்டு. மையத்திற்கு வரும் சிறப்புக் குழந்தைகளை முதலில் மதிப்பீடு செய்து, குறைகள் கண்டறியப்படும். பெற்றோர்களோடு தினமும் வரும் இந்தக் குழந்தைகளை, பிறந்த குழந்தை முதல் 2 வயது. 2 முதல் 4 வயது. 4  முதல் 6 வயது என மூன்றாகப் பிரித்து அதற்கெனத் தனித்தனி ஆசிரியர்கள், பயிற்சியாளர்களை நியமிப்போம். இதில் தனிநபர் செயல்பாடு, குழு செயல்பாட்டுப் பயிற்சிகளும் உண்டு.

குழந்தைக்கு அடிப்படையில் வாழத் தேவையான பயிற்சிகள்(living activities), உட்காருவது, நடப்பது, சாப்பிட வைப்பது, கழிப்பிடப் பழக்கம் ஆகியவற்றை முதலில் கொண்டு வருவோம். ஒரு குழந்தையை ஒரே இடத்தில் அமர வைத்து வேலை செய்ய வைப்பது ஒன்றும் சாதாரண விசயமில்லை. அவர்களின் கவனத்தை திருப்பி, ஒருநிலைப்படுத்தி, உற்று நோக்க வைத்து அதன் பிறகே  பயிற்சிகள் தரப்படும். ஹைபர் ஆக்டிவிட்டி குழந்தைகளுக்கும், கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கும் ஆக்குபேஷனல் தெரபிகளைக் கொடுத்த பிறகே கவனத்தைக்  கொண்டு வருகிறோம். இதற்கென ஃபைன் மோட்டார் ஆக்டிவிட்டீஸ். உடல் பேலன்சிங் பயிற்சிகள் இங்கே தரப்படுகிறது. தண்ணீர் மூலம் வழங்கப்படும் ஹைட்ரோ தெரபி, காற்று மூலமாக வழங்கப்படும் சஸ்பென்ஷன் தெரபி, மேட் மூலம் வழங்கும் பயிற்சிகள், பார்வை குறைபாடு குழந்தைகளுக்கு, விஷன் ரூம் பயிற்சி, சென்சூரி அறைப் பயிற்சிகள் இந்த மையத்தின் சிறப்பு.  

இதில் பார்வைக் குறை குழந்தைகளை(low vision problem) டார்க் ரூமில் அமர வைத்து வண்ண விளக்குகளை ஒளியூட்டி விழிகளை நான்கு திசையிலும் உருட்டிப் பார்க்க வைத்து, ஐ பால் மூவ்மென்டைக் கொண்டு வருவோம். குழந்தைகளை ஒரு நிலைப்படுத்தவும் இது உதவும். சத்தங்களை உருவாக்கி தொட வைத்தும் உணர வைப்போம். குழந்தைகளை தெரபியில் ஈடுபடுத்தும்போது, பெற்றோர்களும் கட்டாயம் உடனிருப்பர். அவர்களது ஒத்துழைப்பு இதில் மிகமிக முக்கியம். மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் யாரையும் சார்ந்தோ எதிர்பார்த்தோ வாழாமல், அவர்களை அவர்களே சமாளித்துக் கொள்ள அனைத்துவிதமான பயிற்சிகளும் வழங்கப்படும்.

தமிழக அரசால் நடத்தப்பட்டு பயிற்சிகளை இலவசமாகத் தரும் இந்த ஆதார வள மையம் ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. குழந்தையோடு பெற்றோர் வந்து செல்ல போக்குவரத்து மற்றும் தினப்படிகள் அரசால் வழங்கப்படுகிறது. மருத்துவர்களின் அறிவுறுத்தலில், குழந்தையின் குறையினைப் பொருத்து, தேவையான உபகரணங்களும் பெற்றுத்தர ஏற்பாடு செய்யப்படுகிறது. மாற்றுத்திறனாளி அடையாள அட்டைகளைப் பெறவும் வழிவகை செய்யப்படும் என முடித்தார்.

அஸ்வின் ஷபானா, ஸ்பீச் தெரபிஸ்ட் ஆர்டியாலஜி அண்ட் ஸ்பீச் பேத்தாலஜி படித்து நான் இங்கு ஸ்பீச் தெரபிஸ்டாக இருக்கிறேன். பேச்சு வராத குழந்தை 7 வயதுக்குள் இருந்தால் பேச வைப்பது சுலபம். 10 வயதுக்கு மேல் என்றால் வார்த்தைகளை வர வைப்பது கடினம். குழந்தையின் குறைபாட்டைப் பொறுத்து ஓரல் மற்றும் ஆடிட்டரி பயிற்சிகள் வழங்கப்படும். சத்தங்களை முதலில் கேட்க வைப்போம். முதல் முறை சத்தத்தை கேட்கும்போது புதிதாய் பிறந்த குழந்தையைப்போல் இருப்பார்கள். சுற்றுச்சூழல் சத்தம், வீட்டில் கேட்கும் சத்தங்களை முதலில் கேட்க வைப்போம். பிறகு பறவைகள், விலங்குளின் சத்தங்கள், போக்குவரத்து சத்தங்களை அடையாளப்படுத்தி பேச வைக்கத் தூண்டுவோம். 3 வயதில் தொடங்கிவிட்டால் நாக்கை நன்றாக வளைத்து மொழியைக் கொண்டு வரலாம்.

5 வயதுக்கு மேல் என்றால் தாமதமாகத்தான் பேச்சு வரும். பெற்றோர் ஒத்துழைப்போடு ரெகுலராக தெரபி எடுத்தால் குழந்தையை பேச வைத்துவிடலாம் தெரபிக்காக குழந்தையின் நாவில் தேனைத் தடவி விரலை உள்ளே வைத்து, குழந்தை விரலினைக் கடித்துவிடாமல், ஐஸ் ஸ்டிக்கினை வைத்து மசாஜ் கொடுத்து நாவை வளைத்து வார்த்தைகளை வர வைப்போம். குழந்தைகளைப் பேச வைக்க ஆவாஸ் சாஃப்ட்வேர் டெக்னாலஜியும் பயன்பாட்டில் உள்ளது என முடித்தார். நமது குழந்தைகள் ஒன்றை பலவாய் பிரதிபலிக்கும் மாயக் கண்ணாடிகள். நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாய் இருப்பவர்கள். குழந்தைகள் அவர்களுக்குத் தேவையான அடிப்படை கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்புடன் எல்லா உரிமைகளையும் பெற வேண்டும்.  நாம் அவர்களைச்  சரியான முறையில் வளர்த்தெடுத்தால் குழந்தைகள் பல அற்புதங்களைச் செய்வார்கள். அது சிறப்புக் குழந்தையாகவே இருந்தாலும்.

சிறப்புக் குழந்தைகளுக்கு Inclusive Park

மனதிற்கு ஒரு கலையையும்,  உடலுக்கு ஒரு விளையாட்டையும் தன்னுள் உருவாக்கிக் கொள்ளும் குழந்தையே  இந்த தேசத்தின் உயிர்ப்பு. அதை ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் விதைப்போம் என்ற சிந்தனையில் சென்னை சாந்தோமில் இயங்கி வரும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மாநில ஆதார வள மையத்துடன் இணைந்த அரசினர் நடுநிலைப் பள்ளி வளாகத்தினை ஒட்டியே அரசால் உருவாக்கப்பட்டுள்ளது இந்த ‘இன்பினிட்டி இன்குளுசிவ் பார்க்’. இயல்பான குழந்தைகளோடு சிறப்புக் குழந்தைகளையும் இணைத்து விளையாட வைக்கும் நோக்கில் உருவாக்கப்
பட்டதே இது.

பொது விளையாட்டு மைதானங்களும், பூங்காக்களும் மாற்றுத் திறனாளிக் குழந்தைகள் பயன்படுத்த ஏற்ற நிலையில் எப்போதும் இருப்பதில்லை. இது குறித்து மாநில ஆதார வள மையத்தின் ஸ்பெஷல் எஜுகேட்டர் ஜவஹீரா நம்மிடம் பேசத் தொடங்கினார். பொதுப் பூங்காக்களில் சிறப்புக் குழந்தைகள் விளையாட ஏற்ற வசதிகள் இருக்காது. மற்ற குழந்தைகளோடு இவர்களை விளையாடவும் யாரும் அனுமதிப்பதில்லை. இதனால் சிறப்புக் குழந்தைகளுக்காகவே ஒரு பூங்காவை உருவாக்க வேண்டும் என முடிவு செய்து சென்னை கார்ப்பரேஷனோடு இணைந்து உருவாக்கப்பட்டதே சிறப்புக் குழந்தைகளுக்கான சிறப்புப் பூங்கா.

*  மாற்றுத்திறனாளிக் குழந்தைகளை மனதில் இறுத்தி பூங்கா முழுவதுமே வண்ணமயமாகவும்,  தொட்டு உணரும் விதத்திலும்(touch and feel)  ஓவியங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

*  நல்ல காற்றை குழந்தைகள் சுவாசிக்க பூங்காவிற்குள் அனைத்து மூலிகைச் செடிகளும் வளர்க்கப்படுகிறது.

*  பூங்காவிற்குள் குழந்தைகள் விளையாடும்போது கீழே விழுந்தால் அடிபடாமல் இருக்க பல வண்ண ரப்பர் மேட்டினால் தரைகள் வடிவமைக்கப்
பட்டுள்ளது.

* வீல்சேருடனே குழந்தைகள் ஏறி விளையாட மேரிகோ ரவுண்ட், ஊஞ்சல் போன்றவைகளும் உள்ளன.

* சறுக்கி விளையாடும் விளையாட்டுக்கள், சாய்ந்து விளையாடும் விளையாட்டுக்கள் அவர்களுக்கு ஏற்ற விதத்தில் மிகவும் தாழ்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

* முழுவதும் பார்வையற்ற மற்றும் பார்வைக் குறைபாடு உள்ள குழந்தைகள் தொட்டு உணர ப்ரெயிலி முறையிலான எழுத்துக்கள், விளையாட்டுக்கள்,
நடை பாதைகள் உள்ளே வடிவமைக்கப்பட்டுள்ளன.

* செவித்திறன் குறைக் குழந்தைகளுக்கு போனெட்டிக் முறையிலான போனோ விளையாட்டும் உள்ளது.

*  மரத் துண்டுகள், கூழாங்கற்கள், மணல், புல் தரை இவற்றைக் கொண்டு உணர்வுகளைத் தூண்டக் கூடிய விதத்தில் வித்தியாசமாக Texture உருவாக்கப்பட்டுள்ள எட்டு வடிவ நடையும் (8th walking) உள்ளது.  இதில் மாற்றுத்திறனாளிக்  குழந்தைகள் நடக்கும்போது காலில் உணர்வுகள் தூண்டப்பட்டு, ரத்த ஓட்டம் சீராவதுடன், ரத்த நாளங்கள், சுரப்பிகள், செல்கள்  தூண்டப்படுகின்றன. இதில் ஆட்டிசம் குழந்தைகளுக்கு நிறைய மாற்றம் கிடைக்கிறது.

* தொடு உணர்விற்காக சிங்கிங் ஸ்டோன் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் உள்ளங்கைகளை அவற்றில் வைத்து அழுத்தும்போது தொடு உணர்விற்கான இசை வைப்ரேஷன் ஒன்று ஏற்படும்.

* உடல் பேலன்சிங்கிற்கான விளையாட்டுகளும் இங்கு உள்ளது.

* நார்மல் குழந்தையும் சிறப்புக் குழந்தையும் இணைந்து விளையாடும் பேஸ்கெட்பால் கோர்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

* சிறப்புக் குழந்தைகள் வீல்சேருடனே சென்று பயன்படுத்தக் கூடிய ‘வீல்சேர் ப்ரெண்ட்லி டாய்லெட்’களும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நார்மல் குழந்தைகளோடு மாற்றுத் திறனாளிக் குழந்தைகள் இணைந்து விளையாடும்போது இருவரும் கலந்து பழகுகிறார்கள். விட்டுக் கொடுக்கிறார்கள், பிரித்து உண்கிறார்கள், உதவும் மனப்பான்மை வளர்கிறது என முடித்தார்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

Tags :
× RELATED தமிழகத்தின் முதல் பெண் கட்டைக்கூத்து கலைஞர்!