முகம்

நன்றி குங்குமம் தோழி

‘நீ அமிலத்தை என் முகத்தில் ஊற்றவில்லை எனது கனவுகளில் ஊற்றிவிட்டாய் உன் இதயத்தில் இருந்தது காதல் அல்ல அதுவும் அமிலமே! உன்னால் முகத்தைத்தான் சிதைக்க முடிந்தது மீண்டெழுந்த என் புன்னகையை அல்ல!’…வாஷிங்டனில் நடந்த சர்வதேச விழாவில் International Women of Courage விருது பெறும் விழாவில் மேற்குறிப்பிட்ட கவிதையை லஷ்மி வாசிக்க.. கண் கலங்கி எழுந்து நின்று கை தட்டினர் பார்வையாளர்கள். ‘மிச்சேல் ஒபாமா’ லஷ்மிக்கு விருதினை வழங்கி ஆரத்தழுவிக் கொண்டார்.  2014ல் International ‘Unsung Hero of the Year’ விருதை NDTV லஷ்மிக்கு வழங்கி கௌரவித்தது..

அந்த கொடூர சம்பவம் நிகழ்ந்தது 2005-ம் ஆண்டு. 15 வயதே நிறைந்த லஷ்மியின் கைபேசிக்கு ‘ஐ லவ் யூ’ என ஒரு குறுந் தகவல் வருகிறது. அனுப்பியவன் பெயர் குட்டு என்கிற நஹிம் கான். அவனுக்கு 32 வயது. லஷ்மியின் மீது அவனுக்கு ஒருதலைக் காதல். பல மாதங்கள் லஷ்மியைப் பின் தொடர்ந்தவன், கைபேசி வழியே பதில் கேட்டு மிரட்டத் தொடங்கினான். பிரச்சனையில் இருந்து தப்ப வழி தெரியாமல் தவித்த லஷ்மி அவனுக்கு பதில் அனுப்பவில்லை. டெல்லியில் மக்கள் நடமாட்டம் நிறைந்த  கான் மார்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் லஷ்மி நின்றிருக்க, நஹிம் கான் ராக்கி என்கிற பெண்ணுடன் அங்கே வருகிறான். அருகே வந்தவனைப் பார்த்து லஷ்மி பயந்து நடுங்க, லஷ்மியை கீழே தள்ளி தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து, லஷ்மியின் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் அமிலத்தை ஊற்றினான்.

தண்ணீர் சல் என்று பட்டதுபோல் உணர்ந்த லஷ்மி, அடுத்த நொடியே எரிச்சலை உணர்ந்தார். உடல் எங்கும் நெருப்பு பற்றி எரிவது போன்ற உணர்வில் சத்தமிட்டு அலறத் தொடங்கினார்.  தோல் கையோடு உரிந்துகொண்டு வர, காது மடல்கள் உருகிக் கரைந்தன. உடலின் பல பகுதிகள் முகத்தோடு சேர்ந்து கருகின. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட லஷ்மிக்கு சிகிச்சைகள் தொடர சிதைந்த முகத்தோடு வீடு திரும்பினார். தொடர்ந்த நாட்களில் முகத்தை பர்தாவுக்குள் மறைத்துக் கொண்டே வலம் வந்தார். வாழ்க்கை வெறுப்பாய் தெரிந்தது. அடுத்தடுத்து பலகட்டமாக நடந்த அறுவை சிகிச்சையில் இடுப்பு, தொடை, முதுகுப் பகுதிகளில் தோலை எடுத்து முகத்தை ஓரளவு சீரமைத்தனர்.

தையல் கலை, அழகுக் கலை, கம்ப்யூட்டர் கோர்ஸ் என தன்னை உயர்த்திக் கொண்டார். கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்த லஷ்மி, ஏன் என் முகத்தை நான் மறைத்துக்கொண்டு வாழ வேண்டும்? இந்த முகமே இனி என் அடையாளம் என முடிவெடுத்து, ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து, அபர்ணா பட் என்கிற வழக்கறிஞரின் துணையோடு அமில வீச்சு கொடுமைக்கு எதிராய் குரல் கொடுக்கத் தொடங்கினார். ‘யார் வேண்டுமானாலும் எளிதாக ஆசிட் வாங்கிவிட முடியும். ஆசிட்டின் விலையும் குறைவு. ஆனால், ஆசிட் வீச்சால் பாதிக்கப்படும் நபர்கள் அனுபவிக்கும் சித்ரவதை வாழ்நாள் முழுவதுக்குமானது. எனவே யாரும் எளிதாய் ஆசிட் வாங்க முடியும் என்கிற நிலையை அரசு தடைசெய்ய வேண்டும். ஆசிட் விற்பனையை கடும் கட்டுப்பாடுகளுடன் முறைப்படுத்த வேண்டும்.

ஆசிட் வீச்சுக் குற்றத்தை கடும் குற்றமாகக் கருதி தண்டனையை அதிகப்படுத்தும் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தியாவில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்படும் நபர்களுக்கு உரிய சிகிச்சைகள், நிவாரணத்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிற உதவிகள் கிடைக்கும் நெறிமுறைகளை வகுக்க வேண்டும்’ என உச்ச நீதி மன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுத்தார் லஷ்மி. Stop Acid Attacks அமைப்பின் வழியே 27 ஆயிரம் பேரிடம் கையெழுத்து வேட்டையும் நடத்தினார். பத்திரிகையாளரும் சமூக ஆர்வலருமான அலோக் தீட்ஷித் என்பவரோடு இணைந்து அமில வீச்சிற்கு எதிராய் தொடர்ந்து களப் பணியாற்றினார். பின்னர் இருவரும் வாழ்க்கையில் இணைந்தனர். பெண் குழந்தை ஒன்றுக்கும் தாயானார் லஷ்மி. ‘என் முகத்தைப் பார்க்கும் என் குழந்தை, பயந்து வீறிட்டு அழுமோ?’ என்பது லஷ்மியின் கவலையாய் இருக்க, மகள் முதன்முதலில் அவர் முகம் பார்த்து சிரித்த கணத்தில் உணர்ச்சி மேலிட அழுதிருக்கிறார் லஷ்மி.

லஷ்மி தொடுத்த பொதுநல வழக்கிற்கு தீர்ப்பும் வந்தது.  ஆசிட் வீச்சும் குற்றமாக அறிவிக்கப்பட்டது. ‘ஆசிட் வீசுவோரை எதிர்த்து பெண்கள் தாக்குதல் நடத்தினால், அது தற்காப்பாகக் கருதப்படும். புகைப்படத்துடன்கூடிய அரசு அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ஆசிட்டை விற்க வேண்டும். 18 வயதுக்கு உட்பட்டோருக்கு எந்தக் காரணம் கொண்டும் ஆசிட் விற்கக் கூடாது. வழக்கு பதிவு செய்யும்போது, ஆசிட் வீசியவர் அதை எங்கு இருந்து வாங்கினார் என்பது பற்றியும் விசாரிக்க வேண்டும். ஆசிட் வீச்சுக் குற்றத்தில் ஈடுபட்ட நபரை, ஜாமீனில் வெளிவர இயலாத பிரிவில் கைதுசெய்ய வேண்டும். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கு மாநில அரசு மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். குற்றவாளிகளுக்கு, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்’ என்றும் அறிவிக்கப்பட்டது. லஷ்மி மீது ஆசிட் வீசிய குட்டுவுக்கு 10 ஆண்டும் உடந்தையாக இருந்த ராக்கிக்கு ஏழு ஆண்டும் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

Related Stories: