குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங் யார்?

நீலகிரி: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயங்களுடன் உயிர் தப்பிய கேப்டன் வருண் சிங் வெலிங்டன் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார். ஓராண்டிற்கு  முன்பு விபத்தில் சிக்க வேண்டிய விமானத்தை சாதுரியமாக செயல்பட்டு பத்திரமாக தரை இறக்கியவர் வருண் சிங். குன்னூரில் முப்படை தளபதி பிபின் ராவத் பயணித்த இராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் உயிர் தப்பிய ஓரே நபர் கேப்டன் வருண் சிங். கடுமையான தீக்காயங்களுடன் வெலிங்டன் இராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த ஆண்டு அக்டோபரிலும் தேஜஸ் விமான சோதனையின் போது வருண் சிங் பெரும் விபத்து ஒன்றில் சிக்க நேர்ந்தது. சுமார் 10,000 அடி உயரத்தில் இலகு ரக தேஜஸ் போர் விமானத்தில் வருண் சிங் பறந்து கொண்டிருந்தபோது தொழில்நுட்ப கோளாறு இருப்பது தெரியவந்தது. உடனடியாக சாதுரியமாக விமானத்தை மெதுவாக கீழ் தாழ்வாக பறக்க செய்தார். அந்த சமயத்தில் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை விமானம் முழுமையாக இழந்தது. விமானம் விழுந்தால் வருண் சிங்கின் உயிர்க்கு மட்டுமின்றி, பொதுமக்கள் சொத்துகளும் பெரும் அழிவு ஏற்பட வாய்ப்பிருந்தது.

ஆனால், வருண் சிங் பதற்றமின்றி விமானத்தை பத்திரமாக தரை இறக்குவதற்கான அனைத்து வழிகளையும் கையாண்டார். தேஜஸ் போர் விமானத்தை பத்திரமாக தரை இறக்கி வெற்றியும் கண்டார். இதற்காக ஒன்றிய அரசு அவருக்கு சவுரிய சக்ரா விருது வழங்கி கவுரவித்தது. இந்நிலையில், தற்போது கடுமையான தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் வருண் சிங் விரைந்து குணமடைய வேண்டுமென சமூக வலைதளங்களில் அரசியல் தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை பல்வேறு தலைப்பினரும் பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories: