ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்க மக்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவது அவசியம்; சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தடுப்பூசி சிறப்பு முகாம்கள், வார இறுதி நாட்களில் தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அதிகளவில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. மேலும், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், அங்காடிகள் மற்றும் மார்க்கெட் பகுதிகள் போன்ற இடங்களில் அரசின் கோவிட் தொற்று பாதுகாப்பு வழிமுறைகள், அங்காடிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளும் சரியான முறையில் பின்பற்றப்படுகின்றனவா என கண்காணிக்க மாநகராட்சியின் சார்பில் காவல் துறையுடன் இணைந்து பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தற்பொழுது உலக நாடுகளில் கொரோனா வைரஸின் ஒமிக்ரான் வகை தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. இந்தியாவிலும் ஒரு சில மாநிலங்களில் இந்த தொற்று கண்டயறியப்பட்டுள்ளது. எனவே, வணிக வளாகங்கள் தங்களுடைய அங்காடிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்த்து அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க வேண்டும். பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் முகக்கவசம் அணியாத தனிநபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

பொதுமக்கள் வெளியில் செல்லும் பொழுது முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு தனிநபரும் கோவிட் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். எனவே, வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளுக்கு செல்லும் பொதுமக்கள் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி கோவிட் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: