பெங்களூருவில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 23 லட்சம் குட்கா பறிமுதல்: 2 பேர் அதிரடி கைது

நல்லம்பள்ளி: தொப்பூர் அருகே பெங்களூருவில் இருந்து கேரளாவிற்கு லாரியில் கடத்திய 24 லட்சம் மதிப்பிலான 3600 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர். தமிழ்நாட்டில் லாட்டரி, குட்கா போதை பொருள் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, குண்டர் சட்டம் போட வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அதனால் தர்மபுரி மாவட்ட எஸ்பி கலைச்செல்வன் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் போலீசார் 10பேர் கொண்ட சிறப்பு குழுக்களை உருவாக்கி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல், தொப்பூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் போலீசார் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று, வெள்ளக்கல் சோதனை சாவடி பகுதியில், தொப்பூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மாதேஷ் தலைமையில், ஐயப்பன், மணிகண்டன், பாலமுருகன், அலமேலு மற்றும் தர்மபுரி ஆயுதப்படை போலீசார் ஆறுமுகம், குமுதா, சுகவனமூர்த்தி, முருகன், உமாமகேஸ்வரி ஆகியோர் கொண்ட 10 போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி விசாரித்தபோது, கோழி தீவன மூட்டைகளை ஏற்றி வருவதாக டிரைவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் லாரியை சோதனை செய்தனர்.

அப்போது லாரியில் குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. தகவலின் பேரில் அங்கு வந்த அதியமான்கோட்டை இன்ஸ்பெக்டர் ரங்கசாமி, குட்கா கடத்தி வந்த லாரியை தொப்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து சென்றார். விசாரணையில், லாரியை ஓட்டி வந்தவர் பாலக்காடு பகுதியை சேர்ந்த ரசித்(46), அஷ்ரப் அலி (39) என்பது தெரிந்தது. தர்மபுரி டிஎஸ்பி வினோத், தொப்பூர் காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். இதில் பெங்களூருவில் இருந்து கேரளாவிற்கு குட்காவை கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து லாரியில் இருந்த 24 லட்சம் மதிப்பிலான 3600 கிலோ எடை கொண்ட 112 மூட்டை குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து குட்கா கடத்தி வந்த 2பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: