சாலை பழுதால் அனுமதி மறுப்பு: ஏற்காடு சோதனைச்சாவடியில் 15 வாகனங்கள் தடுத்து நிறுத்தம்

சேலம்: ஏற்காடு சாலை தொடர் மழையால் பழுதடைந்ததால், மலைப்பகுதியில் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, சோதனைச்சாவடியில் 15 வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.  சேலம் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் தொடர்ச்சியாக மழை பெய்தது. அக்டோபர் 11ம் தேதி பெய்த கனமழையின் போது, ஏற்காடு மலைப்பாதையில் 2வது மற்றும் 3வது கொண்டை ஊசி வளைவில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு, தற்காலிகமாக சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. பழுதடைந்த சாலை சுமார் 75 மீட்டர் நீளத்திற்கு ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்து, கனரக சரக்கு வாகனங்களை தவிர்த்து, பிற வாகனங்கள் மட்டும் ஏற்காடு மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டது. கனரக சரக்கு வாகனங்கள் அனைத்தும், குப்பனூர் சாலை வழியாக ஏற்காடு செல்ல அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து, பழுதடைந்த சாலையில் மணல் மூட்டைகள் வைத்து சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்தது. அவ்வழியாக மீண்டும் கனரக வாகனங்கள் சென்றால், சாலைகளில் பாதிப்பு ஏற்படும் என்பதால், கனரக வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், ஏற்காடு மலைப்பகுதிக்கு செங்கல், மணல், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றிக்கொண்டு 15க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் நேற்று காலை வந்தன. இந்த வாகனங்கள் சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டது. அப்போது, ஏற்காடு மலைப்பகுதி சாலைகளில் குறிப்பிட்ட தூரம் ஒரு வழிப்பாதையாக உள்ளதால், கனரக வாகனங்கள் சென்றால் சாலைகளில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதால் அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். ஆனால், வாகன டிரைவர்கள் ஏற்காட்டிற்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து 15க்கும் மேற்பட்ட லாரிகள் சாலையின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும், தண்ணீர் பாட்டில், குளிர்பானங்கள் கொண்டு வந்த லாரி ஓரமாக நின்று கொண்டிருந்தது. குரங்குகள் வானங்களில் ஏறி பாட்டியிலை ஓட்டை போட்டு தண்ணீர் குடிந்து கொண்டிருந்தது. இதனால் லாரி டிரைவர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

இதுகுறித்து டிரைவர்கள் கூறுகையில், ‘‘சேலம்-ஏற்காடு மலைப்பகுதி வழியாக 10 முதல் 20 டன் வரையுள்ள பஸ்கள் பயணிகளுடன் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது, மணல், செங்கல் மற்றும் அத்தியாவசிய பொருட்களை மினி லாரி கொண்டு தான் இயக்கி வருகிறோம். குப்பனூர் சாலையில் மண்சரிவு காரணமாக வாகனங்கள் இயக்க முடியவில்லை. இதனால் ஏற்காடு மலைப்பகுதி வழியாக வாகனங்கள் இயக்க அனுமதி வழங்க வேண்டும்’’ என்றனர்.

இதுகுறித்து கலெக்டர் கார்மேகம் ெவளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஏற்காடு மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் 2வது மற்றும் 3வது கொண்டை ஊசி வளைவு மற்றும் குப்பனூர் சாலை சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. மண்சரிவு பகுதியில் பாதுகாப்பு காரணமாக கனரக வாகனங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. தற்காலிகமாக சீரமைப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில், அனுமதிக்கப்பட்ட 30 கி.மீ  வேகத்தில் மட்டுமே வாகனங்கள் இயக்க வேண்டும். வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாகவும், முந்தி செல்லுவதையும் தவிர்க்க வேண்டும். வாகனங்கள் சாலையின் விளிம்பில் செல்லக்கூடாது. மேலும், வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட எடையுடன் சாலை பாதுகாப்பு விதிகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: