கொட்டி தீர்த்த கனமழையால் மூஞ்சில் கரடு மலையில் முதல்முறையாக நிலச்சரிவு: விவசாயிகள் அச்சம்

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பசுமை போர்த்திய மூஞ்சில் கரடு என்ற மலைப்பகுதி உள்ளது. இது அருகாமையில் இருக்கக்கூடிய கேரளத்தை இணைக்கும் வனத்துறை கட்டுப்பாட்டு பகுதியாக உள்ளது. இதன் கீழ் பகுதியில் பல நூறு ஏக்கரில் மானாவாரி விவசாய நிலங்கள் உள்ளன. மூஞ்சில் கரடு மலைப்பகுதி எப்போதுமே மழைப்பொழிவு அதிகம் பெறும் இடமாகும். ஆனால் இதுவரை நிலச்சரிவு போன்ற சம்பவங்கள் மலைப்பகுதியில் நடந்ததில்லை.

தற்போது பெய்து வரும் கனமழையினால் மூஞ்சில் கரடு மலையில் சுமார் 500 மீட்டர் வரை பாறைகள் உருண்டு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கனமழையில் வந்த காட்டாற்று வெள்ளம், மூஞ்சில் கரட்டில் இருந்த பாறைகளை உருளச் செய்து நிலச்சரிவை ஏற்படுத்தி உள்ளது. இதில் உருண்ட ராட்சத பாறை ஒன்று பாதியிலேயே அந்தரத்தில் நிற்கிறது. பல நூற்றாண்டுகளாக நிலச்சரிவையே காணாத மலையில் தற்போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகள் கூறுகையில், “மூஞ்சில் கரடு மலை பார்ப்போரை அழகுற செய்யும். கனமழையினால் இங்கு பாறைகள் உருண்டோடி, நிலச்சரிவு ஏற்பட்டது. வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்’’ என்றனர்.

Related Stories:

More