திருச்சி அருகே 3 நாளாக கழுத்தளவு நீரில் குதிரைகள் தவிப்பு

திருச்சி: திருச்சி அருகே 3 நாளாக கழுத்தளவு தண்ணீரில் 2 குதிரைகள் தவித்து வருகின்றன. மணப்பாறை பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன் பலத்த மழை பெய்தது. இதனால் அரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குடமுருட்டி ஆறு, கோரையாற்றில் அதிகளவில் தண்ணீர் வந்து தீரன்நகர், பிராட்டியூர் பகுதியில் உள்ள வீடுகள், வயல்வெளிகளை மழைநீர் சூழ்ந்து நிற்கிறது. இந்நிலையில் திருச்சி குழுமணி சாலை காசிவிளங்கி மீன் மார்க்கெட் அருகில் உள்ள கோரையாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருகில் உள்ள பகுதிகளில் தண்ணீர் பாய்ந்தோடியது.

மீன் மார்க்கெட் அருகே உள்ள மைதானத்தையும் வெள்ளநீர் சூழ்ந்தது. இந்த மைதானம் அருகே 2 குதிரைகள் கட்டப்பட்டிருந்தது. மைதானத்தை வெள்ளநீர் சூழ்ந்த நிலையிலும் அந்த குதிரைகளை அவிழ்த்து ஓட்டி செல்ல யாரும் வரவில்லை. இதனால் கழுத்தளவு தண்ணீரில் கடந்த 3 நாட்களாக குதிரைகள் தவித்து வருகின்றன. இந்த குதிரைகளை அவிழ்த்து விட்டு காப்பாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: