தொடர்மழையால் வரத்து குறைந்தது: நெல்லை, தூத்துக்குடியில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு: ஒரு கிலோ மல்லிகை ரூ.2500 ஆனது

நெல்லை: தொடர்மழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பூக்கள் வரத்து கடும் சரிவை எதிர்கொண்டு வருகிறது. ஒருகிலோ மல்லிகை ரூ.2500க்கு விற்கும் நிலையில், சுப நிகழ்ச்சிகள் நடத்துவோர் பூக்கள் விலையை எதிர்கொள்ள முடியாமல் திண்டாடுகின்றனர். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை இதுவரை இல்லாத அளவுக்கு நன்கு பெய்து வருகிறது. அணைகள் நிரம்பி வழிவதோடு, தாமிரபரணி ஆறும் அடிக்கடி வெள்ளப்பெருக்கை எதிர்கொண்டு வருகிறது. ெதாடர்மழை காரணமாக நெல் உள்ளிட்ட பயிர்களின் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்றாலும், பூக்கள் விளைச்சல் சுத்தமாக இல்லை.

மழை காரணமாக விவசாயிகள் பூக்களை பறிக்கவும் முடிவதில்லை. இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் அனைத்து பூ மார்க்கெட்டிலும் பூக்கள் விலை தற்போது உச்சத்தில் உள்ளது. பண்டிகை நேரத்தில் மட்டும் ஏறும் பூக்கள் விலை இப்போது தினசரி 3 அல்லது 4 மடங்கு உயர்ந்து காணப்படுகிறது. பாளை. பூ மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2500 முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்பனையானது. ஒரு கிலோ கேந்தி சாதாரண சமயங்களில் ரூ.80க்கு விற்பனை செய்யப்படும். தற்போது கேந்தி விலை ரூ.150 ஆக உள்ளது.

ரூ.100க்குள் விற்பனை செய்யப்படும் கோழி பூ, வாடாமல்லி பூக்கள் தற்போது ஒரு கிலோ ரூ.150க்கு விற்கப்படுகின்றன. நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டில் சிறிய அளவிலான சம்பங்கி பூக்கள் ஒரு கிலோ ரூ.600க்கும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட சம்பங்கி பூக்கள் ஒரு கிலோ ரூ.350க்கும் விற்கப்பட்டு வருகின்றன. இப்பூக்கள் 3 மடங்கு விலை உயர்வை இப்போது சந்தித்துள்ளன. ஒரு கிலோ பிச்சி ரூ.1300க்கும், ஒரு கிலோ பன்னீர் பூக்கள் ரூ.300க்கும் விற்பனையாகின்றன.

பொதுமக்கள் குறைவாக பயன்படுத்தும் அரளி பூக்கள் ஒரு கிலோ பாக்கெட் ரூ.500 எனவும், நந்தியாவட்டை ஒரு கிலோ ரூ.700 எனவும் விற்பனை செய்யப்படுகின்றன. பூக்களின் விலை உயர்வு காரணமாக திருமணம், சடங்கு உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்துவோர் இப்போது பூக்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியதுள்ளது. அதிலும் முன்பு ரூ.25 முதல் 30க்கு விற்ற ஒரு சிறிய மாலை இப்போது ரூ.50 முதல் 60 என விலையேற்றப்பட்டுள்ளது. ரூ.70க்கு விற்ற ரோஸ் மாலை இப்போது ரூ.150 ஆக உயர்ந்துள்ளது. பூக்கள் விலையேற்றம் குறித்து பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், ‘‘நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள பூ மார்க்கெட்டிற்கு ஒசூரில் இருந்து அதிக பூக்கள் வருவதுண்டு. அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக ரோஸ், கேந்தி வரத்து மிகவும் குறைந்துவிட்டது. தென்மாவட்டங்களிலும் கடந்த ஆண்டுகளில் இல்லாத மழை கடந்த ஒரு மாதமாக உள்ளது.

எனவே தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர், அய்யனார்குளம்பட்டி, நெல்லை மாவட்டம் அனவரதநல்லூர், மானூர், அலவந்தான்குளம் பகுதிகளில் இருந்து பூக்கள் வரத்து முற்றிலுமாக குறைந்து விட்டது. சில இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதாலும், தொடர்மழையாலும் பூக்கள் பறிப்பதற்குரிய சூழல்கள் இல்லை. எனவே விலையேற்றம் காணப்படுகிறது. மார்கழி மாதம் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகள் குறைவு என்பதால், பலரும் நடப்பு கார்த்திகை மாதத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். மேலும் இம்மாதத்தில் சூறை விழாக்கள், செவ்வாய், வெள்ளி தினங்களில் பூக்களுக்கு அதிக தேவை உள்ளது. ஆனால் பூக்கள் வரத்து இல்லாததால் விலையேற்றம் ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.

Related Stories:

More