குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து... பனிமூட்டத்திற்குள் ஹெலிகாப்டர் சென்று மறையும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியீடு!!

நீலகிரி : நீலகிரி மாவட்டம் ராணுவ பயிற்சி கல்லூரி விழாவில் பங்கேற்க விமானப்படைக்கு சொந்தமான எம்ஐ-17 வி-5 ரக ஜம்போ ஹெலிகாப்டரில் நேற்று முப்படை தலைமை தளபதியின் மனைவி உட்பட 12 ராணுவ அதிகாரிகள் பயணித்தனர். ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு 5 நிமிடத்துக்கு முன், நண்பகல் 12.15 மணிக்கு குன்னூர் அருகே காட்டேரி பூங்கா, நஞ்சப்பன் சத்திரம் மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியது. மலைப்பகுதியில் இருந்த மரத்தில் மோதி பலத்த சத்தத்துடன் ஹெலிகாப்டர் வெடித்து சிதறி தீப்பிடித்து எரிந்து நொறுங்கி விழுந்தது. இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் குன்னூரில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் கடைசி 19 வினாடிகள் வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் பனி மூட்டத்திற்குள் சென்று மறையும் காட்சிகள் தெளிவாக பதிவாகி உள்ளது. தள்ளாடியபடி பறந்த ஹெலிகாப்டரின் பயங்கர சத்தத்தால், அங்கிருந்த சுற்றலா பயணிகள் அச்சத்துடன் ஹெலிகாப்டரை பார்த்ததும் வீடியோவில் பதிவாகி உள்ளது. ஆகவே பனி மூட்டத்தால்  மலை உச்சியில்  இருந்த உயர்ந்த மரத்தின் கிளை மீது ஹெலிகாப்டர் மோதி பின்னர், வேகமாக கீழே இறங்கி 5 முதல் 6 மரங்களின் மீது மோதி விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும் ஹெலிகாப்டர் கீழே விழும் முன்பே இரண்டிற்கும் மேற்பட்ட பாகங்களாக உடைந்து சிதறியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கடுமையான பனி மூட்டம் காரணமாக தான் இந்த விபத்து நிகழ்ந்ததாக நேற்று கூறப்பட்டு இருந்தது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் வீடியோவில் காட்சிகள் அமைந்துள்ளன. 

Related Stories: