விலை மதிப்பற்ற பொது சொத்துக்கள் விற்பனை மோடியின் பேரழிவு பயணம் தொடர்கிறது: காங்கிரஸ் எம்பி.க்கள் கூட்டத்தில் சோனியா பேச்சு

புதுடெல்லி: பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில், நாட்டின் பொது சொத்துகளை பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு விற்று வருகிறது என்று காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் அதன் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மண்டபத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சியின் கூட்டம், அதன் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நேற்று நடந்தது. இதில் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட இரு அவைகளை சேர்ந்த கட்சி எம்பி.க்கள் பங்கேற்றனர்.

எம்பி.க்கள் இடையே சோனியா காந்தி ஆற்றிய உரையில் கூறியதாவது: நாகலாந்தில் 14 பொதுமக்களை துணை ராணுவப்படை சுட்டுக் கொன்றது வேதனையானது. அவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். மாநிலங்களவை எம்பி.க்கள் 12 பேர் குளிர்கால கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டது, அரசியலமைப்பு சட்டம் மற்றும் மாநிலங்களவை நடத்தை விதி இரண்டையும் மீறுவதாகும். இதை சுட்டிக்காட்டி மல்லிகார்ஜூன கார்கே மாநிலங்களவை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். நாடு தனது எல்லையில் தொடர்ந்து எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் இதுவரை வாய்ப்பு வழங்கப்படாதது அசாதாரணமானது.

இது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று மக்களவையில் காங்கிரஸ் வலியுறுத்தும். வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற்றுள்ளது. ஆனால், இதையும் விவாதம் நடத்தாமல் ஜனநாயக விரோதமாகவே அரசு செய்துள்ளது. விவசாயிகளின் விடாமுயற்சி, ஒற்றுமை, அர்ப்பணிப்பு ஆகியவை, ஆணவ அரசை அடிபணிய செய்துள்ளது. 12 மாதங்களில் 700 விவசாயிகள் செய்த உயிர் தியாகத்தை நினைவு கூர வேண்டும். விவசாயிகளின் மற்ற கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற முன் வர வேண்டும். பிரச்னையின் தீவிரத்தை பார்க்காமல் மோடி அரசு ஏன் உணர்வற்று இருக்கிறது என்று விளங்கி கொள்ள முடியவில்லை.

மக்கள் துன்பங்களை கண்டும் அடங்காமல் இருக்கிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை போதாது. வரிகுறைப்புக்கான பொறுப்பை நிதி நெருக்கடியில் தவித்து வரும் மாநில அரசுகளிடம் வழங்கியுள்ளது. வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், ரயில்வே மற்றும் விமான நிலையங்கள் போன்ற விலைமதிப்பற்ற தேசிய சொத்துக்களை மோடி அரசு விற்றுவிட்டது. 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரத்தை அழித்த மோடி, தனது பேரழிவு பயணத்தை தொடர்கிறார். ஆனால், இதை பணமாக்கும் முயற்சி என்கிறார்.

புதிய தொற்று பரவி வரும் நிலையில், ஒன்றிய அரசு இரண்டு டோஸ் தடுப்பூசியை 60 சதவீதம் பேருக்கு கூட செலுத்தவில்லை. விவசாயம் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள், வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு நேரடி வருமான ஆதரவை பெறுவதற்கான அவசர தேவை பற்றி மக்களவையில் வலியுறுத்துவோம். நாகலாந்து சம்பவத்துக்கு ஒன்றிய அரசு வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதாது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விரைவில் நீதி உறுதி செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

* பொருளாதாரம் மீள்வதாக கூறுவது அர்த்தமற்றது

‘பொருளாதாரத்தை மீட்டெடுக்கிறது ஒன்றிய  அரசு என்று மோடி கூறுகிறார். அவர் யாருக்காக இந்த மீட்பு நடவடிக்கை  மேற்கொள்கிறார்? கொரோனா காரணமாக மட்டுமின்றி, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றால் கோடிக்கணக்கானோர் வாழ்வாதாரம் இழந்து விட்டனர். பல தொழில் நிறுவனங்கள் முடங்கி விட்டன. ஒரு சில பெரிய நிறுவனங்கள் லாபம் ஈட்டுவது, பங்கு சந்தை புதிய உயரத்தை தொடுவது போன்றவற்றால் பொருளாதாரம் மீண்டு  வருவதாக கூறுவது அர்த்தமற்றது.’ என்றும் சோனியா பேசினார்.

Related Stories:

More