ஆந்திராவில் 3 இடங்களில் சிக்கியது பல லட்சம் மதிப்பு செம்மரக்கட்டைகள் பறிமுதல்: தர்மபுரி, திருப்பத்தூரை சேர்ந்தவர்கள் உட்பட 7 பேர் கைது

திருமலை: ஆந்திராவில் 3 இடங்களில் நடத்திய சோதனையில் பல லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தர்மபுரி, திருப்பத்தூரை சேர்ந்தவர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்ட போலீசார் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில எல்லையான நாகார்ஜுனா சாகர் சோதனை சாவடியில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது  ஹைதராபாத்தில் இருந்து இரண்டு சரக்கு வேனில் மீன் தீவன பைகளுக்கு மத்தியில் செம்மரக் கட்டைகளை கடத்தி வருவது தெரிய வந்தது. நாகார்ஜுனசாகர் தெற்கு போலீசார் 4 பேரை கைது செய்து, வாகனத்தில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும், வேன்களையும் பறிமுதல் செய்தனர். இதில் கைதானவர்களின் விவரங்கள் தெரியவில்லை. இதேபோல் திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை டிஎஸ்பி முரளிதர் தலைமையில் ஆர்எஸ்ஐ சுரேஷ்பாபு குழுவினர் நேற்று முன்தினம் இரவு முதல் பக்ராபேட்டா வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது நேற்று காலை சிலர் செம்மரக் கட்டைகளை எடுத்துச் செல்வதை கண்டனர். அவர்களை அதிரடிப்படையினர் சுற்றி வளைக்க முயன்றனர். கடத்தல்காரர்கள் செம்மமரக்கட்டைகளை வீசிவிட்டு தப்பியோட முயன்றனர். இருப்பினும் அதிரடிப்படையினர் 3 பேரை விரட்டி பிடித்து கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த  தீர்த்தகிரி(20), அண்ணாமலை(56) மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்டி(41) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 7 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், சின்னகொட்டி கல்லு மண்டலம், பாக்கராபேட்டா சாலையில் செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த சரக்கு வாகனத்தை ஆர்எஸ்ஐ லிங்கதர் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த இரண்டு வழக்குகளையும் இன்ஸ்பெக்டர் வெங்கட ரவி, சந்திரசேகர் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: