மின் சட்ட திருத்த முன்வடிவை நிறுத்தி வையுங்கள் பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

* மாநில உரிமைக்கு எதிரானது

* தனியாருக்கு சாதகமானது

சென்னை: மாநில உரிமைகளுக்கு எதிராகவும், தனியார் நிறுவனங்களுக்கு  சாதகமாகவும்  ஒன்றிய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள மின்சார சட்டம் (2003)ல்   திருத்த முன்வடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:மின்சார  சட்டம் (2003)ல் மாற்றம் கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்களை   நிறுத்தி வைக்க, நீங்கள் உடனடியாக தலையிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்த  கடிதத்தை எழுதுகிறேன். மின்சார சட்டத்தில் கொண்டு வரப்பட உள்ள  திருத்தங்கள், மாநில மின் நிறுவனங்களை நீண்ட நாட்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த சட்ட திருத்தம், மின் விநியோகத் துறையை  சீர்குலைக்க முன்மொழியப்படுகிறது என்பது தெரிகிறது.இந்த  திருத்ததின் மூலம்   அறிமுகமாக உள்ள மின் விநியோக நிறுவனங்கள் பதிவு  செய்த 60 நாட்களுக்குள் அனுமதி அளிக்கப்படுகிறது.  இந்த விநியோக நிறுவனங்கள்  எந்த  நுகர்வோருக்கும் மின்சாரத்தை விநியோகிக்க   கட்டுபாடற்ற உரிமைகளை  வழங்குகிறது. கூடவே பொதுமக்களுக்கு மின்சாரம் வழங்க உள்ள பொதுத்துறை   கட்டமைப்புகளை  பயன்படுத்திக் கொள்ளவும் அவர்களுக்கு அனுமதி  அளிக்கிறது.

 மாநில பொதுத்துறை நிறுவனங்கள்  தங்கள் முதலீட்டின் மூலம் உருவாக்கிய கட்டமைப்புகளை இந்த  தனியார் ‘விநியோக  நிறுவனங்கள்’  எந்த முதலீடும் இல்லாமல், எந்த பராமரிப்பு செலவும் இல்லாமல்  பயன்படுத்திக் கொள்ள  முன்மொழிவில் கூறப்பட்டுள்ள சட்டத்திருத்தம்  அனுமதிக்கிறது. அதுமட்டுமின்றி  தனியார்  விநியோக  நிறுவனங்கள் அதிக வருவாய் வரும்  வாடிக்கையாளர்களுக்கு   பகுதிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையும் உள்ளது. அதாவது  லாபத்தில்  இயங்குவதற்கான எந்த முயற்சியை மேற்கொள்ள அந்த தனியார் நிறுவனங்களுக்கு  அனுமதி அளிக்கப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்களுக்கு  இருப்பது போல் பொருளாதாரத்தில் பின்தங்கிய, கிராமப்புற பகுதிகள், மானியத்தில்  மின் இணைப்புகள் வழங்கும் எந்த சமூக பொறுப்புகளும் அந்த தனியார்  நிறுவனங்களுக்கு கிடையாது.அதிக அதிகாரம் தரும்   சட்டப்பிரிவுகள் 26, 28, மற்றும் 32 ஆகியவற்றில்   திருத்தங்கள்  செய்யப்போவதின் மூலம் தேசிய  மின் விநியோக மையம்(என்எல்டிசி)  நாடு  முழுவதும் எல்லா மாநிலங்களிலும் மின் விநியோகத்தை  திட்டமிடும், கையாளும்,  செயல்பாடுகளை கண்காணிக்கும் அதிகாரத்துடன், மாநில(எஸ்எல்டிசி),   மண்டல(ஆர்எல்டிசி) அமைப்புகளுக்கு வழிகாட்டுதல் வழங்குதல்,  கூடவே  முறைமுகமாக மாநில அரசுகளை கட்டுபடுத்துவதாக உள்ளது. மேலும் சட்டப்பிரிவு  142  ஆணையத்துக்கு   விதிகளை மீறிய வகையில் அதிக உத்தரவிடும், அபராதம்  விதிக்கும்  வாய்ப்புகள்  உள்ளன.

இந்த 142 பிரிவின் கீழ் மாற்றுமுறை  மின்சாரத்தை கொள்முதல் இலக்கை பூர்த்தி செய்வது கடினம். இயற்கை சீற்றங்கள் ஏற்படும் இடையூறுகளால்  மாற்றுமுறை மின்சாரத்தை கொள்முதல் செய்வதில் மின் நிறுவனங்களுக்கு  சிரமம் ஏற்படலாம். மாநில  பொதுத்துறை நிறுவனங்கள் பாதிக்கப்படும். அதே நேரத்தில் தனியார்   நிறுவனங்கள் பெரும்  பயனை பெறும். அதுமட்டுமின்றி மாநிலத்தின் உரிமைகளில்  தலையிடும் சட்டத் திருத்தமாகவும் இந்த முன்வடிவு உள்ளது.இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு  தாங்கள் இதில் தலையிட்டு  இந்த மின் திருத்த மசோதா 2021யை  நிறுத்தி  வைக்க வேண்டும் என கேட்டுக்  கொள்கிறேன். அதன் மூலம் மாநில பொதுத்துறை மின் நிறுவனங்கள் தொடர்ந்து தரமான,  மலிவு விலையில்  மக்களுக்கு மின் விநியோகம் செய்ய முடியும். இவ்வாறு பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை நிறுவனங்களுக்கு  இருப்பது போல் மானியத்தில்  மின் இணைப்புகள் வழங்கும் எந்த சமூக பொறுப்புகளும் தனியார்  நிறுவனங்களுக்கு கிடையாது

Related Stories: